ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப்
ஈரானின் தாக்குதலை கண்டித்து 7 நாடுகள் கூட்டறிக்கை
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இல்லை: ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்கு மட்டுமே ஆதரவு
ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே உயிரிழப்பு – ஈரான் அரசு ஊடகங்கள்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது ; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை
இந்தியாவில் போர் விமானம் விபத்து ; இரண்டு விமானிகள் உயிரிழப்பு
ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப்
Published By: Vishnu
03 Mar, 2026 | 04:57 AM
ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளதாக கூறினார்.
அதன்படி,
ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் திறன்களை முற்றிலுமாக அழித்தல்,
ஈரானிய கடற்படையை செயலிழக்கச் செய்தல்,
மேலும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முக்கிய இலக்குகள் என விளக்கினார்.
“இந்த ஆட்சியால் உருவாகும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு இதுவே” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
ஈரானின் தாக்குதலை கண்டித்து 7 நாடுகள் கூட்டறிக்கை
Published By: Digital Desk 3
03 Mar, 2026 | 09:52 AM
அமெரிக்கா, பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் "பொறுப்பற்ற" தாக்குதல்களைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஈராக், ஜோர்டான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்த நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
ஈரானின் இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு நியாயமும் அற்றவை எனவும், இவை பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பொதுக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியை சீர்க்குலைப்பதோடு, பல நாடுகளின் இறையாண்மையை மீறும் ஆபத்தான செயல் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கள் குடிமக்கள் மற்றும் நிலப்பகுதியைப் பாதுகாக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு எனவும், ஈரானின் தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்பு ஒத்துழைப்பு சிறப்பாகச் செயல்பட்டதாகவும் நாடுகள் தெரிவித்துள்ளன. நன்றி வீரகேசரி
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இல்லை: ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்கு மட்டுமே ஆதரவு
Published By: Vishnu
03 Mar, 2026 | 04:51 AM
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கும் தாக்குதல்களில் பிரிட்டன் இணையாது என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க பதில் நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷ் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அது "ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காப்பு நோக்கங்களுக்காக" மட்டுமே என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீண்டகால நட்பு நாடுகளின் கூட்டு சுய பாதுகாப்புக்காகவும், பிரிட்டிஷ் குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். நன்றி வீரகேசரி
ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே உயிரிழப்பு – ஈரான் அரசு ஊடகங்கள்
Published By: Vishnu
02 Mar, 2026 | 08:26 PM
கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை அன்று அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி அவர்களின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே, காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 2ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நடவடிக்கையுடன் தொடர்புடைய இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது ; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை
Published By: Digital Desk 3
03 Mar, 2026 | 10:16 AM
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி இல்லை எனவும், மீறிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோண்டுராஸ் நாட்டின் கொடி ஏந்திய 'ஏதி நோவா' என்ற எரிபொருள் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த கப்பல் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், அமெரிக்க கடற்படைக்கு எரிபொருள் வழங்கியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.
இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பாதையாகும், இது சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மிகப்பெரிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கிறது.
இந்த பாதை மூடப்பட்மையினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இந்தியாவில் போர் விமானம் விபத்து ; இரண்டு விமானிகள் உயிரிழப்பு
Published By: Digital Desk 3
06 Mar, 2026 | 03:44 PM
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் வியாழக்கிழமை ஜோர்ஹாட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.
“சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் அனுஜ், புர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்துகிறது.
உயிரிழந்த விமானிகளுக்கு இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறோம்,” என இந்திய விமானப்படையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானம் இரண்டு இருக்கைகள் கொண்டது. பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நீண்ட தூர போர் விமானம் ரஷ்யாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Sukhoi நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்திய விமானப்படைக்காக HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் உரிமம் பெறப்பட்டு இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய விமானப்படை தற்போது 260-க்கும் மேற்பட்ட சுகோய்-30 MKI போர் விமானங்களை இயக்கி வருகிறது. இதற்கு முன்பு 2024 ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
மேலும் 2023 ஜனவரியில் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஒரு சுகோய்-30 விமானமும் விபத்துக்குள்ளானது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment