தாழம்பூ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரையில் எம் ஜி ஆர் , சரோஜாதேவி ஜோடி வெற்றிகரமாக


ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அதற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் சின்னப்பா தேவர் தன் படங்களில் சரோஜாதேவியை தவிர்க்கத் தொடங்கினார். அதே சமயம் சரோஜாதேவியும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததால் அவருக்கு மாற்றாக எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க மற்றுமோர் நடிகை தேவைப்பட்டார். அந்த நேரத்தில் வசமாக வந்து சேர்ந்தவர் தான் கே . ஆர் . விஜயா. எம் ஜி ஆருடன் இவர் இணைந்து நடித்த முதல் படம் தான் தாழம்பூ. ஆனாலும் இந்தப் படம் அவர்கள் நடித்த மூன்றாவது படமாகவே வெளிவந்தது. அதற்கு முன்னதாகவே தொழிலாளி, பணம் படைத்தவன் படங்கள் திரைக்கு வந்து விட்டன.

 

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனிடம் நீண்ட காலம் உதவியாளராக

இருந்தவர் என் .எஸ் . ராமதாஸ். கலைவாணர் மறைவதற்கு சில காலம் முன்பாக இவர் அவரிடம் இருந்து விலகி எம் ஜி ஆரிடம் வந்து சேர்ந்து விட்டார். வந்த கையோடு எம் ஜி ஆரின் விக்ரமாதித்தன் படத்தை டீ .ஆர் . ரகுநாத்தோடு இணைந்து இயக்கும் வாய்ப்பு ராமதாசுக்கு கிடைத்தது. ஆனால் இந்தப் படம் ஐந்தாண்டு கால திட்டம் போல் தயாரிப்பில் இழுபட்டு இறுதியில் வெளி வந்து தோல்வி கண்டது. ஆனாலும் ராமசந்திரன் ராமதாஸை கை விடவில்லை. மற்றுமொரு படத்தை இயக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினார். அந்தப் படம்தான் தாழம்பூ.
 

மாடர்ன் தியேட்டர்ஸில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் டபிள்யு . ஆர் சுப்பாராவ். தமிழில் முதல் கலர் படமான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு. அங்கு ஒலிப்பதிவாளராக இருந்தவர் பத்மநாபன். தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் சுலைமான். இவர்கள் மூவரும் சேர்ந்து மனமுள்ள மறுதாரம், வளர்பிறை படங்களை தயாரித்து விட்டு எம் ஜி ஆரிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூவரும் இணைந்து தயாரித்த படமும் தாழம்பூ தான்.


எஸ்டேட்டில் கேசியராக வேலை பார்க்கும் கந்தசாமி பட்டதாரியான தன் தம்பி துரைக்கு கிடைக்கப் போகும் தொழிலுக்கு பிணைப் பணமாக 5000 ரூபாய் தேவை என்பதால் அதனை தன் முதலாளி சோமனாதனிடம் கடனாக கேட்கிறான். அப் பணத்தை பெற இரவு அவர் பங்களாவுக்கு செல்லும் அவன் அங்கு சோமனாதன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். போலீசார் அவனை கைது செய்வே , சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக தீர்மானிக்கப் பட்டு நீதிமன்ற தண்டனை பெறுகிறான். சோமனாதனின் மகள் கமலி தன் சித்தப்பா ராஜரத்தினத்திடம் அடைக்கலம் ஆகி தன் கவலையை மறக்க முனைகிறாள். இதனிடையில் துரை அவர்கள் எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்து உண்மை கொலையாளியை கண்டுபிடிக்க பாடுபடுகிறான் . ஒரு சந்தர்ப்பத்தில் துரை , கமலி இடையே காதல் மலர்கிறது. இதனிடையே பர்மா மோகன், சோமனாதனின் வலது கை முருகன் ஆகியோர் சோமனாதன் பதுக்கி வைத்திருக்க கூடிய பணத்தை அவர் பங்களாவில் தேடுகிறார்கள். இறுதியில் யார் முயற்சி வெற்றி பெற்றது என்பதே கிளைமாக்ஸ்.
படத்தில் எம் ஜி ஆர், கே ஆர் விஜயா இருவரும் இளமையுடன்,

அழகுடன் காட்சியளிக்கிறார்கள். தூவானம் இது துவானம் பாடலில் மழை சொட்ட சொட்ட, விஜயா இளமை சொட்ட சொட்ட நனைந்து ஆடுகிறார். எம் ஜி ஆரும் ஈடு கொடுக்கிறார். நல்ல டான்ஸ் . அதே போல ஸ்டண்ட் மாஸ்டர் ஆர் என் நம்பியார் அமைத்த சண்டைக் கட்சிகளும் விறுவிறுப்பாக இருந்தன.

அசோகன் , மணிமாலா இருவரும் சோக நடிப்பை வழங்க , நாகேஷ், மனோரமா ஜோடி சிரிப்பை தூவுகிறார்கள். கோழிக் கள்ளனாக வரும் நாகேஷ் ரசிகர் மனம் கவர் கள்ளனாகிறார் . அவ்வப்போது எம் ஜி ஆர் படங்களில் தலை காட்டும் கே ஆர் ராம்சிங் இதில் வந்து தன் குரலாலும், பார்வையாலும் மிரட்டுகிறார். நம்பியாருக்கு வழமையான வேடம். இவர்களுடன் எம் கே முஸ்தபா, குமாரி ராதா, ஏ. வீரப்பன், திருப்பதிசாமி. குண்டு மணி ஆகியோரும் நடித்திருந்தனர்.


எம் ஜி ஆர் படம் என்றாலே எம் ஆர் ராதா நிச்சயம் இருப்பார் என்றொரு காலம் இருந்தது. ஆனால் 1965ல் அது மாறியது. இந்த ஆண்டு எம் ஜி ஆர் நடித்த ஆறு படங்களில் இந்த படத்தில் மட்டுமே ராதாவுக்கு சான்ஸ் வழங்கப்பட்டது. அவரும் நிதானமாக இதில் நடித்திருந்தார். படத்துக்கு கண்ணதாசன் எழுதிய பாடலான எரிக் கரை ஓரத்திலே எட்டு வேலி நிலம் இருக்கு , வாலியின் தூவானம் இது தூவானம், எங்கே போய் விடும் காலம் , தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் பாடல்கள் ஹிட்டடித்தன. டபிள்யு. ஆர். சுப்பராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
 

படத்தின் கதையை கொட்டரக்காரா எழுத , ஜி . பாலசுப்ரமணியம் திரைக் கதையை எழுதினார். அன்றைய சீசனில் எம் ஜி ஆருக்கு பிடித்த வசனகர்த்தாவாக ஆரூர்தாஸ் படத்துக்கான வசனங்களை எழுதினார். ஆக மூன்று ஜாம்பவான்கள் படக் கதையில் சம்பந்தப் பட்டிருந்தர்கள் . படத்தில் எம் ஜி ஆர் துப்பறிவாளராக வருகிறார். ஆடல், பாடல், காதல், சோகம், சண்டை என்று எல்லாவற்றிலும் தன்னுடைய நடிப்பை வழங்குகிறார். 

எம் ஜி ஆரின் படத்துக்கு தேவையான எல்லா சமாசாரங்களும்

இருந்தும் , ராமதாஸ் டைரக்ட் பண்ணிய தாழம்பூ மணம் வீசவில்லை. எம் ஜி ஆரின் கால்ஷீட் ஒழுங்காக கிடைக்காததால் படம் வெளிவருவதில் கால தாமதம் ஏற்பட்டு , படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனுக்கான வட்டி எகிறி தயாரிப்பாளர்கள் இலாபத்தை கோட்டை விட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான பத்மநாபன் கேரளாவில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகை செய்தி வெளியானது. புராணத்தில் சிவனால் ஒதுக்கப்பட்ட தாழம்பூ , படத்தின் பேரான போது இலாபத்தை ஈட்டித் தரவில்லை!

No comments: