செந்தமிழ்ப் பூக்கள் சிறுவர் பாடல்கள் பகுதி 1 & பகுதி 2 விரைவிலே வெளிவர உள்ளது.

 



இயற்றியவர்: பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் 
















































சிந்தைக்கும் செவிக்கும் இனிய சிறுவர் பாடல்கள்  அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் தந்த அணிந்துரை! (வேந்தர் - பாரத் பல்கலைக் கழகம் )


ஈழ நாட்டில் தமிழ் வளர்த்த நல்லிசைப் புலவர் பெருமக்களுள் நவாலியூர்ப் பெரும்புலவர் 'தங்கத் தாத்தா' எனப் புகழ்பெறும் சோமசந்தரப் புலவர் அவர்களை நாடு எப்போதும் நினைந்து போற்றும். மூதறிஞரின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனாரின் முதல் மகனாரான கலாநிதி பாரதியையும் தமிழ்ப் புலமை ததும்பும் நவாலியூர்த் தலைமுறையினரையும் யான் நன்கறிவேன்.


இளந் தளபதியாகத் திகழும் பாரதி பல் மருத்துவராகப் பணியாற்றுவதோடு செந்தமிழ்க் கவிதைகள் யாப்பதும்இ   செவிக்கினிய இசைக்கோலங்கள் புனைவதும்,  கவி அரங்கங்கள் அமைப்பதுடன் இலக்கிய நிகழ்வுகளிற் பங்கேற்றிச் செவ்வனே நடத்துவதுடன் கலைத்தெளிவோடு கட்டுரைகள் வரைவதுமாக மும்மைத் தமிழின் செம்மையிற் கனிந்தவராக விளங்கித் தனது பன்முக  ஆளுமையினாலே தம் புகழை நிலை நாட்டியுள்ளார். இவர் உதகை மண்டலத்திலே பல் மருத்துவராகக் கடமையாற்றி வந்த காலத்திலே அங்கு இலக்குமி  நாராயணன் (அரசினர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர்) என்பவருடன் உதகையிலே ஒரு அரசினர் அருங்காட்சியகத்தைத் தோற்றுவிற்பதிலே மிகுந்த பங்காற்றியவர் என்று அறிவேன். அந்தக் அருங்;காட்சியகத்தினைத் திறந்துவைப்பதற்கு வருகைதந்த    அமைச்சர் அன்பழகன் அவர்களைக் கவிதையாலே வரவேற்க இருந்த கலாநிதி பாரதி அவர்களை நான் எல்லோருக்கும் சிறந்த முறையிலே அறிமுகம் செய்து  வைத்தமையை நினைவு கூருகிறேன். சில ஆண்டுகட்கு முன்னர் சிட்னியிலே நடந்தேறிய உலகத் தமிழ் மகாநாட்டிற் 'சங்கம் வளர்த்த முத்தமிழைச் சந்ததிக்குக் கொண்டுசெல்வோம்' என்ற விழுமிய கருப்பொருளைக் கொண்டு இவர் அமைத்திருந்த கருத்தரங்கில் நானும் தலைமை ஏற்று இணைந்து செயற்பட்ட நிகழ்ச்சி ஒரு அருமையான பயன்தரும் நிழகழ்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலியா  நாட்டிற் பல சைவக் கோவில்களில் இவர் படைத்த திருவூஞ்சற் பாடல்கள் விழாக்களின்போது ஒழுங்காகப் பாடப்பெற்று வருகின்றன.


அனைத்துலக சுழற் கழகப் பேரவைக் கழகங்களிலே (Rotary International)  25ஆண்டுகளுக்கும் மேலாகப் பலவித பதவிகளேற்றுப் நற்பணிகள் புரிந்ததுடன் தொடர்ந்தும் பலவித நலப்பணிகள் ஆற்றிவரும் இவரை ஆஸ்திரேலியக் கம்பன் கழகம் 2016 ஆம் ஆண்டு 'சான்றோர் விருது 'வழங்கிப் பெருமைப் படுத்தியுள்ளது.


தமிழ் மழலையர் ஆர்வம் குறையாமல்; தமிழர் வாழ்வியலை நினைவிற் கொண்டு தமிழ்ப் பண்பாடு பூண்டவராக மிளிரவேண்டும் என்பது கலாநிதி பாரதியின் ஆர்வக் கனவாகும். ஆஸ்திரேலியா நாட்டில் வாழ்ந்துவரும் மழலையர் கூட்டப் பழகிய பின்னர்,  மனனம் செய்யும் தகுதி பெறுவார்களானால் இப்பாடல்கள் சிறார்க்குப் பெரும் பயன் நல்கும். படித்து மகிழவிருக்கும் குழந்தைகளை வாழ்த்துவதோடு மதிநுட்பம் வாய்ந்த கவிஞராகத் திகழும் பாரதி குழந்தைகள் மனத்திற்கு ஏற்ற முறையில் கண்ணெதிரே காட்சி தருவார் என்பதில் ஐயமில்லை. உணவு, உடை, உறைவிடம், சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியதுடன் மேலும் பல பொருண்மையின் உரிப்பொருளாகக் கவிதைகளை ஆற்றி இருக்கின்ற திறம் பாராட்டுக்கு உரியதாகும். தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ்க் கல்வியோடு   பாடற் பயிற்சியும் அமைய வேண்டும் என்ற வகையில் எண்பது தலைப்புகளில் இயற்றிய இவ்வினிய எளிய பாடல்கள் என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. 


மழலையர் எழுத்துக்களாக,  சிறுவர் பாடும் செந்தமிழ் கேட்டல் நம் செவிக்கின்பம் என்ற வகையில் இப்பாடல்கள் இனிப்பத் துண்டுகளாக நம் சிறார்க்குப் பயன்பெற வேண்டும். ஆஸ்திரேலியா வாழ் குழந்தைகள் மட்டுமல்லாமல் தமிழ் கற்பிக்கப்பெறும் நாடுகளிலுள்ள குழந்தைகளும் இவரின் இனிய பாடல்களைப் பயன்படுத்துமாறு அன்பான வேண்டுகோள் விடுத்து வாழ்த்துகிறேன். நெஞ்சைக் கவர்ந்த பாடல்கள் சில வருமாறு: பாப்பாப் பாடல்களாக,


 

ஈழம் எங்கள்உயிர் நாடு - அதை

என்றும் மறவாதே பாப்பா

வாழும் செம்மைமொழி தமிழே- அதை

வாழ்த்தி வளர்த்திடடி பாப்பா!

 

தூய்மை யானதமிழ் கற்பாய் – தொன்மை

தொடரத் தமிழ்தொடர வைப்பாய்

வாய்மை அன்புமன உறுதி - இவை

வாழ்க்கைக் குகந்ததடி பாப்பா!.

 

 என்றும்

மயில் ஆடும் காட்சியை,

அழகுத் தோகை விரித் ஆடும்

ஆணின் நடனம் கண்டதும்

உளம் மகிழ்ந்து பேடை தானும்

ஓடிச் சுற்றி ஆடுது!

 

மழையும் பொழிய இடி முழங்க

மந்தி கெந்தி ஓடுது

குழையைத் தின்ற மான்கள் கூடிக்

குதித்து மருண்டு துள்ளுது!.

 

சோடிக் கிளிகள் ஆடிக் களித்துச்

சோபை யுடனே பாடுது

வேடிக் கையாய்க் குயிலும் கூவி

விரும்பி நடனம் பார்க்குது.

 

என்றும் சிறுவர் விரும்பும் நடையிலே தருகிறார்.

அன்னையின் அருமையை,

விரத மிருந்து பரனைத் தொழுது

வேண்டி வரத்தாற் பெற்று

இரவு பகலாய்க் கண்ணின் மணிபோல்

என்னை வளர்த்த அம்மா!

 

 நேசக் கரத்தால் நித்தம் தூக்கி

 நெஞ்சில் அணைக்கும் அம்மா

 பாசத்தோடு ஆசைபொங்கப்

 பாலை ஊட்டும் அம்மா!

  

என்றும்

அன்னையின் அன்பை,  -

பஞ்சு அஞ்சும் பாதந் தன்னைப்

பற்றிக் கண்ணில் ஒற்றியே

பிஞ்சுக் கையின் விரல்கள் அஞ்சைப்

பிடித்துக் கொஞ்சும் அம்மா!

 

மெள்ளப் பாலைக் குடிக்கும்போது

மெத்த இனிக்கும் தமிழை

அள்ளி அள்ளிக் கலந்து தினமும்

அன்பாய் ஊடடும் அம்மா!

 

நெஞ்சில் எந்தன் தலையைச் சாய்த்து

நீவி மகிழும் அம்மா!

கெஞ்சும் விழியால் அன்பைச் சிந்திக்

கொஞ்சும் தெய்வ அம்மா!

 

இப்படிச் சித்தரிக்கும் அழகே அழகு

மகளிர் கூடியோடிப் பந்தடிக்கும் காட்சியை சிறப்புறக் காட்டுகிறார்..

 

   

      பந்த டிப்பமே நாங்கள் பந்த டிப்பமே!

 

  வலமும் இடமும் மாறி மாறி ஓடிப் பந்த டிப்பமே!

  பலமும் பண்பும் ஒன்று கூடி மலரப் பந்த டிப்பமே!

 

 கள்ளம் அற்ற வெள்ளை உள்ளப் பள்ளித் தோழ ரோடுநாம்

 கொள்ளை இன்பம் பொங்க மெல்லத் துள்ளிப் பந்த டிப்பமே!

 

 உயர்ந்த தாழ்ந்தசாதி இல்லை உலகில் வேண்டும் சமத்துவம்

 அயர்விலாது சோர்வு நீங்க ஆர்வ மாய்ப்பந்  டிப்பமே!

                   ----------------------------இப்படித் தொடர்கிறது

பந்தணை விரலார் என மகளிரைப் பாராட்டுதல் மரபு. சிற்றிலக்கியங்களிலே பந்தடித்தல் மரபைப் பாடல்களாகச் சந்தம் மலியப் புலவர்கள் பாடியுள்ளனர். பாரதியும் அதே பாங்கில் ஆடிப் பாடி மகிழ்தற்குரிய இப்பாடல்களைப் புனைந்துள்ளார். சிறார் மனங்களிக்க அவர் விழையும் பொருண்மைகளில் பாடல்களைத் தெரிவு செய்த திறம் பாராட்டுதற்குரியது.

நோயில் நொந்து கிடந்த எனக்கு அப்பாடல்கள் மருந்தாகவும் எதிர்காலத் தமிழ் வளம் காட்டும் தொலைப் படமாகவும் அமைந்தன. செல்வத் திருமகனார் கவியரசர் பாரதி எழுதிய பாடல்கள் உலகமெங்கம் பரவுதல் வேண்டும். இந்நூலை வெளியிடும் போது ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் பல்லின மழலையர் அவர் தத்தம் மொழிகளில் பாடி மகிழும் சிறார் பாடல்கள் அமைந்த திறத்தையும் தமிழோடு  ஒப்பீட்டளவில் கண்டறிந்து ஒரு கருத்துரையை எழுதுமாறு வேண்டுகின்றேன். இதுவே தமிழுக்கு அமையும் தனித்த ஆய்வாகும்.

அறிவியல் அறிஞர் பாரதியின் ஆர்வம் நெகிழ்தற்குரியது. பிள்ளைத் தமிழ் பாடும் திரு பாரதி தொடர்ந்து பல்வேறு பெரிய நிலையில் தமிழை எழுதி மகிழ்விப்பாராக. பாரதியின் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!.

 

Ø (புகழ்பூத்த தமிழ் அறிஞராகிய அவ்வை நடராசன் அவர்கள் அவரது இறுதிக் காலத்திலே உடல் நலக்குறைவோடு இருந்த காலத்திலே இந்த அணிந்துரை எழுதப்பெற்றது)





No comments: