உலகச் செய்திகள்

பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா?

புதிய வரிகள் 90 நாட்களிற்கு இடைநிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு

இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பங்குசந்தையை தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்த முயன்றாரா? புதிய குற்றச்சாட்டுகள்

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி- சீனா


பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா?

10 Apr, 2025 | 12:48 PM

 

அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர்.

யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்குஎதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க விமானப்படையிடம் 20 பி-2 போர்விமானங்களே உள்ளன அவற்றை அமெரிக்கா மிகவும் முக்கியமான தாக்குதல்களிற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள  இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளையும் அணுவாயுதங்களையும் கொண்டுசெல்லும் திறன்வாய்ந்தவை,மத்திய கிழக்கில் செயற்படுவதற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானிற்கு செய்தியை தெரிவிப்பதற்காகவா  இந்த விமானங்கள் டியாகோகார்சியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ஈரானே அதனை தீர்மானிக்கட்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரிய சொத்து இது அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் தெளிவாக உள்ளார்,ஈரானிடம் அணுக்குண்டு இருக்ககூடாது,அதனை அமைதிவழிமுறை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




புதிய வரிகள் 90 நாட்களிற்கு இடைநிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு

10 Apr, 2025 | 06:26 AM


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேஅளவில் விதிக்கவுள்ளதாக அறிவித்திருந்த புதிய வரிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும் 10 வீத வரி தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

அமெரிக்க பொருட்களிற்கு 84 வீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்ததன் பின்னரே டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் சீனா மீதான 125 வீத வரிகள் தொடரும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி

Published By: Vishnu

06 Apr, 2025 | 08:26 PM

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது.

கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும் புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்

❤ புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.

❤ இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன.

❤இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

❤இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.

❤இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.

❤துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும்.

❤ ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.

❤ புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.

❤ புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.

❤துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.

❤ உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர்.

❤35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும்  பூசப்படவில்லை.

நன்றி வீரகேசரி 





டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பங்குசந்தையை தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்த முயன்றாரா? புதிய குற்றச்சாட்டுகள்

Published By: Rajeeban

11 Apr, 2025 | 03:26 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்;டுகோள் விடுத்துள்ளனர்.

டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நான் வெள்ளை மாளிகைக்கு எழுதப்போகின்றேன் மக்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி உலகின் மிகப்பெரிய சந்தையை தனக்கு சாதகமாக கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் நிதிசேவை குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பங்குசந்தை இயங்க ஆரம்பித்த


சில நிமிடங்களில் டொனால்ட் டிரம்ப் இது பங்குகளை கொள்வனவு செய்வதற்கான தருணம் என தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னரே அவர் உலக நாடுகளிற்கான தனது புதிய வரியை 90 நாட்களிற்கு ஒத்திவைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

டிரம்ப் தனது சமூகஊடகமான ட்ரூத்சோசியல் பதிவில் டிஜிடி என்ற  எழுத்துக்களுடன் கையெழுத்திட்டிருந்தார்.இது அவரது முதல் எழுத்து என்பதுன் அவரது ஊடக நிறுவனமான  டிரம்ப் மீடியா டெக்னோலஜி என்பதன் சுருக்கமாகும்.

இதேவேளை விசாரணைக்கான தேவை உள்ளதாக ஒழுக்ககோவை தொடர்பான வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி ரிச்சட்பெயின்டர் தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதிகள் முதலீட்டு ஆலோசகர்கள் இல்லைஇஎன தெரிவித்துள்ள அவர் இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி சந்தையை தனக்கு சார்பாக கையாளும் குற்றச்சாட்டிற்கு ஆளாகநேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோல்ஸ்ரீட்டில் தனக்கு நிதி வழங்குபவர்களிற்கு நன்மையளிக்கும் விதத்தில் பங்குசந்தையை பயன்படுத்த முயன்றாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என அமெரிக்க செனெட்டர் எலிசபெத் வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் தனது வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் மூலம் தனக்கு சார்பானவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு உதவினாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது குற்றச்செயல்போன தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 





அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி- சீனா

11 Apr, 2025 | 02:41 PM


அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாகசீனா  அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா எதிர்காலத்தில் விதிக்கவுள்ள வரிகளிற்கு பதிலளிக்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரிகள் சர்வதேச மற்றும் பொருளாதார விதிமுறைகளை அடிப்படை பொருளாதார சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா இது ஒரு தலைப்பட்சமான மிரட்டும் வற்புறுத்தும் தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 







No comments: