உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
Published By: Vishnu
14 Mar, 2025 | 03:31 AM
(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து 96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைவாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற்றன. இவ்விரு தேர்தல்களிலும் 17,440,354 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர்.
2024 ஆம் ஆண்டு தேருடர் இடாப்பின் பதிவுகளுடன், இம்முறை 155,976 பேர் புதிதாக வாக்களிக்க இம்முறை தகுதிப்பெற்றுள்ளனர்.இதற்கமைய இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 17,296,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (17) தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடையவுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்கு குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துகின்ற நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் கட்டுப்பணம் செலுத்தல் நிறைவடைகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (20) ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 35 நாட்களுக்கு குறையாமல், 49 நாட்களுக்கு அதிகரிக்காமல் பிரசார காலம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மே மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்
13 Mar, 2025 | 08:10 PM
யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்று வியாழக்கிழமை (13) நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றமை வழமை. அந்தவகையில் இன்றைய தினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், காணியின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
13 Mar, 2025 | 11:27 AM
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (13) யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.
இதன்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனி காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது.
குளுக்கோமா என்பது கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயினை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயிலிருந்து குணமடைய முடியும். எனவே, இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபவனி அமைந்திருந்தது.
லயன்ஸ் கழகம் மற்றும் எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி வீரகேசரி
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது
13 Mar, 2025 | 10:55 AM
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மற்றைய சந்தேக நபர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பிரதான சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (13) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது
13 Mar, 2025 | 12:36 PM
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் துணைச் செயலாளர் டாக்டர் அஜந்த ராஜகருணா தெரிவித்தார்.
அதன்படி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது. நன்றி விராகேரி
No comments:
Post a Comment