உலகச் செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்

உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது எப்படி?அமெரிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்டார் டிரம்ப்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது

கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு




போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்

14 Mar, 2025 | 01:24 PM
image

“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  தெரிவித்துள்ளார்.

 சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நிலம் கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்நிலையில் இந்த போர் நிறுத்தத்துக்குரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ்  ஜனாதிபதிஅலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புட்டின். அப்போது அவர் “ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக முயற்சிக்கும் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில்  ஜனாதிபதி லூலா டிசில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உன்னத இலக்கு வெறுப்பை உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தது போல் வெளித்தோற்றத்துக்கு புலப்படலாம். ஆனால் உண்மையில் உக்ரைன் தான் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க தரப்பிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரம் அவர்கள் அப்படிக் கோருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும். இது குறித்து அமெரிக்காவும் எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இவ்விவகாரம் பற்றி ட்ரம்ப்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் போர் நிறுத்தம் என்பது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்.

உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளன. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன்னதாக அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது பிரச்சினையின் வேரை நாடி சிக்கலைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.” என்றார்.    நன்றி வீரகேசரி 





உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

12 Mar, 2025 | 12:16 PM
image

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது.

ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

ஒரு வாரகாலத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து விலகி டிரம்ப் நிர்வாகம் புதிய நிலைப்பாட்டையெடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க உக்ரைன் ஜனாதிபதிகள் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவதை இடைநிறுத்தியிருந்தது.

சவுதி அரேபியாவில் உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளிற்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ யுத்த நிறுத்தம் குறித்த திட்டத்தை அமெரிக்கா ரஸ்யாவிற்கு தெரிவிக்கும், என தெரிவித்துள்ளார்..

பேச்சுவார்த்தை மேசையில் என்ன உள்ளது என்பதை அவர்களிற்கு தெரிவிக்கப்போகின்றோம்,உக்ரைன் துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளிற்கு தயார்,இனி ரஸ்யாவே ஆம் அல்லது இல்லை என தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமாதான திட்டத்தினை ரஸ்யா ஏற்க மறுத்தால் சமாதானத்திற்கான உண்மையான தடை என்னவென்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது எப்படி?அமெரிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்டார் டிரம்ப்

Published By: Rajeeban

14 Mar, 2025 | 02:33 PM
image

பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர்.

வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றான பனாமாகால்வாயை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறைதெரிவித்துள்ளார்.

எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல் என்ற இரகசிய ஆவணம் பனாமா கால்வாயை தடையின்றி அமெரிக்கா பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை இராணுவத்திடமிருந்து கோரியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பனாமா இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது உட்பட அமெரிக்க இராணுவத்திடம் பலவகையான சாத்தியப்பாடுகள் உள்ளன என மற்றுமொரு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்த கேள்விக்கு பென்டகன் உடனடியாக பதிலளிக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால ஆவணம் குறித்த தகவலை முதன்முதலில் சிஎன்என் வெளியிட்டுள்ளது.பனாமா கால்வாயிற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குமாறு அமெரிக்க இராணுவத்தை டிரம்ப்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது என என்பிசி தெரிவித்துள்ளது.

பனாமா கால்வாயை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயற்படக்கூடும் எனஆதாரமில்லாமல் தெரிவித்துவரும் டிரம்ப் அமெரிக்கா பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என வாதிட்டுவருகின்றார்.   நன்றி வீரகேசரி 






பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது

Published By: Digital Desk 3

11 Mar, 2025 | 10:38 AM
image

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார்.

போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது.

இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு  பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட டுடேர்டே  தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளர்.

கைது சட்டவிரோதமானது எனவும், விமான நிலையத்தில் வழக்கறிஞர்களில் ஒருவரை டுடேர்டேவைச் சந்திக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் டுடெர்ட்டேவின் முன்னாள் சட்ட ஆலோசகர் சால்வடார் பனெலோ தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 



கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு

10 Mar, 2025 | 06:23 AM
image

கனடாவினதும் அந்த நாட்டின் லிபரல் கட்சியினதும் தலைவராவதற்கான போட்டியில் மார்க்கார்னே வெற்றிபெற்றுள்ளார்.

அடுத்த சில நாட்களில் இவர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்அனைவருக்கும் வலுவான கனடாவை கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடன் நான் இரவுபகலும் பாடுபடுவேன் என பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான மார்க் கார்னே தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கனடாவை மதிக்கும்வரை அமெரிக்காவிற்கு எதிரான புதிய வரிகள் தொடரும் என மார்க்கார்னே தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




No comments: