உலகச் செய்திகள்

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

 ‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்

முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

கரூர் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை  



காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 

01 Oct, 2025 | 01:16 PM

(இணையத்தள செய்திப் பிரிவு)

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக  தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.   பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.  டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார்.  இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில்,   "பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார்.  போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன.  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.  டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.   நன்றி வீரகேசரி 



‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்  

01 Oct, 2025 | 12:39 PM

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.  

டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  

இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார்.    

நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார்.  

அவர் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பேசியபோது, "போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கு ஒருபோதும் தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது.  

இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரச் சில நாட்கள் எடுக்கும் என்றும், அதன்பின்னர் தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 



முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!  

01 Oct, 2025 | 02:58 PM

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டமூலத்தை கொண்டு வந்தது. இந்த சட்டமூலத்தில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு டிரம்ப் தலைமையிலான ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில், டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதனை டிரம்ப் ஏற்க மறுத்ததன் காரணமாக, அவர் கொண்டு வந்த புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளது.   

சட்டமூலத்திற்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகளும், எதிராக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டமூலம் நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை.எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.  

இதனால், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (ஒக்டேபர் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து முதல் சிறு வணிக கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்காததால் அரசு செலவீனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்க பாராளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, ஏனைய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.   

புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளதால் அரசு உதவி பெறும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், அமெரிக்க இராணுவம் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அமெரிக்கா அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் நிதி வழங்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது தடை படுவதுடன், தாமதமாகும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.   நன்றி வீரகேசரி 



கரூர் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு  

Published By: Digital Desk 1

28 Sep, 2025 | 02:58 PM

தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.  

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  முன்னதாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய பொலிஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 03 மணிக்குப் பிறகுதான் விஜய் புறப்பட்டார்.  இதனிடையே, கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதல் தொண்டர்கள், இரசிகர்கள் கூடினர்.  கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. 

இதனால் இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.  அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்குண்டனர்.   விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அந்த பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். 

விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.  இதன்போது ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 








ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை  

26 Sep, 2025 | 11:02 AM

ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார்.  

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.  

உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார்.  

ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.  

ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார்.  

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.   

செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார்.  

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார்.அமைதிப் பரிசு பொருட்கள்  

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.  

நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






No comments: