செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தொடர் கேள்விகள்

 

02 Oct, 2025 | 06:19 PM

அ. அச்சுதன்  

உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235க்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன.  செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.   

அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  

செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.  

அதன்பின் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு யாழ் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம், கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.   

தோண்டப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.  

இந்த நிலையில்தான், 2025 பெப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மனித எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.   

கடந்த பெப்ரவரியிலிருந்து செம்மணி புதைகுழி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியம் தற்போது உண்மை என்று நிரூபணமாகி வருகிறது.  

செம்மணி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணிக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், உரிய விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 இந்தச்சூழலில், அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதி அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் செயற்திட்டத்தில் விரைவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி உதவி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கி வருகிறது.  

அண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருந்தமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகும்.  

மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகள்   

பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்: 

 • சர்வதேச விசாரணை : தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு உட்பட அனைத்துலகக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதித்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.  

• செம்மணி, மன்னார் புதைகுழிகள் : செம்மணி மற்றும் பிற மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச நிபுணர்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.

 • நில ஆக்கிரமிப்பு : தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் நடைபெறும் அரச ஆதரவுடனான குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும்.  

• கலாசார அழிப்பு : தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்த வேண்டும்.  

• காணாமல் போனோர் விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உடன் வெளிப்படுத்தி, நீதி வழங்க வேண்டும்.  

• சட்டங்கள் நீக்கம் : பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.  

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசேட கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகுதியான 75 பேருடன் கூடிய 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.  

2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் அமைக்கப்பட்ட மெக்ஸ்வல்பரணகம ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.  

1990களில் தென்னாபிரிக்காவில் 'உண்மை கண்டறியும்பொறிமுறை' உருவாக்கப்பட்டு, பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதன் மூலம், அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கும் இதேபோன்ற ஒரு முறை தேவை என நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்திற்கான வேண்டுகோள்

தற்போது புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த உப குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுவது அவசியம். செம்மணிப் புதைகுழியில் 90 வீதமான எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருப்பது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை உணர்த்துகிறது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சர்வதேச நிபுணத்துவம் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.  

மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச சார்பு நிறுவனம் என்ற போதிலும், அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே, காணாமல் போனோர் மற்றும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நீதியான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய முன்வரவேண்டும்.   நன்றி வீரகேசரி 




No comments: