அன்புக் கரங்கள் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இரவு , பகல் பாராமல் ஏராளமான படங்களில் நடித்துக்


கொண்டிருந்த சிவாஜி தனது சொந்த நிறுவனங்களினால் தயாரிக்கப் பட்ட படங்களிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நடித்துக் கொண்டிருந்தார். அவரின் குடும்பம் விரிவடைய, விரிவடைய அவரின் பட நிறுவனங்களும் புதிது புதிதாக உருவாகி கொண்டிருந்தன.

 

ஆரம்பத்தில் தாயார் ராஜாமணி பேரில் ராஜாமணி பிச்சர்ஸ் பட கம்பனி ஆரம்பித்து பாசமலர் படத்தில் நடித்தவர் பின்னர் மனைவி கமலா பேரில் கமலா பிச்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தில் நடித்தார். இடையில் பிள்ளைகள் பிரபு, ராம்குமார் பேரில் பிரபுராம் பிச்சர்ஸை நிறுவி விடி வெள்ளி படத்தில் நடித்தார். இப்போது மகளின் முறை. தன் மகள் சாந்தி பேரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அவர் நடித்து 1965ம் வருடம் வந்த படம்தான் அன்புக் கரங்கள். ஒன்றை சொல்லியாக வேண்டும் , இந்த நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்களே தயாரிப்பாளர்கள் என்றிருந்த போதும் அந்த தயாரிப்புகளில் சிவாஜியின் மறை கரம் ஒன்று இருக்கவே செய்தது. அந்த வகையில் சிவாஜியின் நெருங்கிய சிநேகிதரான பெரியண்ணா இந்தப் படத்தை தயாரித்தார்.
 

படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் பாலமுருகன். அவருக்கு இதுவே

முதல் படமாகும். பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை கருவாக கொண்டு கதை எழுதி அதற்கு வசனங்களையும் எழுதியிருந்தார். ஆனால் வசனங்களில் இருந்த நேர்த்தி கதையில் இருக்கவில்லை. பெற்றோர்கள் இன்றி வாழும் சிவராமன் தன் தங்கை ஆனந்தியை உயிருக்கு உயிராக வளர்கிறான். ஆனால் அவளோ அண்ணனுக்குத் தெரியாமல் தன்னுடன் படித்த கண்ணனை காதலிக்கிறாள். இந்தக் காதலில் தன்னையே பறி கொடுத்தும் விடுகிறாள். இவளின் காதலை பற்றி அறியும் சிவராமன் ஆத்திரத்தில் கண்ணனை தாக்கி விடுகிறான். அவன் இறந்து விட்டதாக தீர்மானிக்கும் சிவராமன் ஒரு கூட்ஸ் வண்டியில் அவன் உடலை தூக்கி போட்டும் விடுகிறான். இந்த விஷயம் எதுவும் தெரியாத ஆனந்தி கண்ணன் தன்னை கை விட்டு விட்டதாக நினைக்கிறாள். சில நாட்கள் கழித்து ஆனந்தி தாயகப் போகும் விஷயம் தெரிய வரவே அதிர்ந்து போகிறான் சிவராமன். தன்னால் அண்ணனுக்கு கெட்ட பேர் வரக் கூடாது என்று என்னும் ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதற்கு இடையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த சிவராமன் , ஆனந்தியின் தாய் திடீரென்று வந்து சேர்கிறாள். வந்தவள் தன் மகள் ஆனந்தி எங்கே என்று மகனை கேட்கிறாள். நடந்தவற்றை தாயிடம் சொல்லத் தயங்கும் சிவராமன் தன்னை தீவிரமாக காதலிக்கும் அன்னத்தை இவள்தான் ஆனந்தி என்று தாயிடம் அறிமுகப் படுத்துகிறான்.
 


இப்படி எக்குத் தப்பாக அமைந்த படத்தில் நடிக்க சிவாஜி எப்படியோ ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் படம் முழுதும் அவரின் மிகை நடிப்பும், செயற்கையான காட்சிகளுமாகவே அமைந்திருந்தது. ஆனால் அன்னமாக வரும் தேவிகா தன்னுடைய நடிப்பால் எல்லாவற்றையும் சமாளிக்கிறார். படத்துக்கு அவர்தான் பிளஸ். ஆனந்தியாக வரும் மணிமாலா அழகாக காட்சி தந்து அடிக்கடி அழுதும் வைக்கிறார். பாலாஜி அவ்வப்போது உணர்ச்சிகரமாகவும் நடிக்கிறார்.
 

நாகேஷ், மனோரமா, சுப்பையா நகைச்சுவை சில இடங்களில் எடு படுகிறது. வி கே ராமசாமி இருந்தும் ஒன்றும் ஆகவில்லை. இவர்களுடன் சீதாலஷ்மி, ஓ ஏ கே தேவர், ஜி சகுந்தலா,பி. டி சம்பந்தம், லஷ்மிபிரபா , பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஏவி எம் பட நிறுவனத்தில் ஆஸ்தான இசையமைப்பாளராகத்

திகழ்ந்தவர் ஆர். சுதர்சனம் . சிவாஜியின் முதல் படமான பராசக்திக்கு இவர் தான் மியூசிக். விசுவநாதன், ராமமூர்த்தி ஏவி எம் நிறுவனத்துக்கு வந்த பின் அங்கிருந்து ஒதுங்கிய சுதர்சனத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கி அன்புக் கரங்களை நீட்டினார் சிவாஜி. அதே போல் சிவாஜிக்கு கண்ணதாசனே பாடல்கள் எழுதி கொண்டிருந்த நேரத்தில் இப் படம் மூலம் முதல் தடவையாக சிவாஜிக்கு பாடல் எழுத வந்தார் வாலி . ஒண்ணா இருக்க கத்துக்கணும், காகிதத்தில் கப்பல் செய்து, இரவு முடிந்து விடும், ராமனுக்கே சீதை என்று வாழ்ந்தது தான் பெண்மை பாடல்கள் கதையோடு பொருந்தின. இரவு முடிந்து விடும் பாடல் ரொமான்ஸாக படமாக்கப் பட்டிருந்தது.
 

படத்துக்கு ஒளிப்பதிவு தம்பு. படம் தயாரித்த பெரியண்ணாவுக்கு முதல் அனுபவம். படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே .சங்கர். ஏற்கனவே சிவாஜியின் ஆண்டவன் கட்டளையை டைரக்ட் செய்து அப் படம் சரியாக போகாத நிலையில் இந்தப் படத்தையும் இயக்கி சிவாஜிக்கும், தனக்கும் இடையில் இருந்த அன்புக் கரங்களை சுட்டுக் கொண்டார் கே. சங்கர். இந்தப் படத்துக்கு பிறகு அவர் சுமார் இருபது வருடங்கள் சிவாஜி படங்கள் எதனையும் இயக்கவும் இல்லை ! ஆனால் பாலமுருகனும், வாலியும் சிவாஜியுடன் அன்புக் கரங்களை கோர்த்து தொடர்ந்து பயணித்தார்கள். இந்தப் படத்தில் எப்படியோ தப்பித் பிழைத்த பாலமுருகன் சிவாஜியின் குட் புக்சில் இடம் பிடித்து பிற் காலத்தில் சிவாஜியின் எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி , பட்டிக்காடா பட்டணமா போன்ற வெற்றி படங்களுக்கு எழுதி புகழ் பெற்றார்.

No comments: