-சங்கர சுப்பிரமணியன்.
முதலில் இந்த கட்டுரை எழுத தளம் அமைந்ததற்கு காரணம் நண்பர் முருகபூபதி அவர்களே என்பதால் அவர்களுக்கு என்
நன்றியைத் தெரிவித்து கட்டரையை எழுதுகிறேன்.
நண்பர் முருகபூபதி அவர்கள் நம் பெயர் நிலைத்திருக்க வேண்டுமானால் வீடுகட்ட வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் அல்லது ஒரு நூலாவது வெளியிட வேண்டும் என்று விவேகானந்தர் குறிப்பிட்டதாக எழுதியிருந்தார்
விவேகானந்தர் ஒரு துறவியாக இருந்தும் நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடாமல் நிலையற்றவை பற்றி குறிப்பிட்டதை
நினைக்கும்போது விந்தையாக உள்ளது. தத்துவஞானிகள் அனைவருமே வாழ்வு நிலையற்றது என்பதை ஏற்பவர்கள்தான். வாழ்வும் புகழும் நிலையற்றது என்பதற்கு சான்றாக ஒன்றை சொல்கிறேன்.
தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படமான ஹரிதாஸ் மதுரை சிந்தாமணி திரையரங்கில் மூன்று தீபாவளி கடந்து ஓடியது. இன்று ஒருசில படங்களே நூறு நாட்கள் ஓடுகின்றன. அல்லது ஓடவைக்கப்படுகின்றன. இன்றுள்ள சிறுவர்களில் யாரிடமாவது தியாகராஜ பாகவதரை பற்றி கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. தலைசிறந்த எழுத்தாளர் மு. வரதராசனார் எழுதிய அற்புதமான நாவல் அகல் விளக்கு. அன்று பாலாற்றங்கரையில் என்று தொடங்கும் அந்த நாவலின் வரிகள் இன்றும் என் நினவில் மோதிக்கொண்டிருக்கின்றன.
இன்றும் அந்த நூல் நூல்நிலையத்தில் உள்ளது. அதை ஆண்டுக்கு எத்தனை பேர் எடுத்து படிக்கிறார்கள் என்பதை நூலகரிடம் கேட்டால்தான் தெரியும். அடுப்பில் எரிந்திருக்க வேண்டிய திருக்குறளை ஒரு சமையல்காரர் நினைத்திராவிட்டால் அழிந்தே போயிருக்கும். திருவள்ளுவர் தன் பெயர் நிலைக்க வேண்டுமென்ற எண்ணத்துடனா திருக்குறளை எழுதினார். அப்படியிருப்பின் அந்த திருவள்ளுவரே நிலையாமை என்ற அதிகாரத்தை திருக்குறளில் படைத்திருப்பாரா?
விவேகானந்தரை விடுங்கள். பகவத்கீதையை எடுத்துக் கொள்வோம். அதில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவம் என்ன? நேற்று எவருடையதோ அது இன்று உன்னுடயது. இன்று உன்னுடையது நாளை யாருடையதோ என்ற நிலையாமையைப் பற்றியதுதானே. ஆனால் என்ன நடக்கிறது? அதை கதாகாலட்சேபம் செய்பவரும் அதைக்கேட்கும் பக்தர்களும் அந்த தத்துவத்தில் மூழ்கி முத்தெடுத்தாலும் இயல்பு வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்ன? கதாகாலட்சேபம் செய்பவர் நான்கு வீடு வைத்திருப்பார் அதைக் கேட்பவர்கள் மூன்று வீடு வைத்திருப்பார்கள். இதைத்தான் படிப்பது இராமாயாணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது.
நான் எப்போதோ எழுதிய கட்டுரையை சிறிது
மாற்றத்துடன் இங்கு எழுதுகிறேன். என் இத்தக் கட்டுரையே நிலையாமைக்கு ஒரு சான்றாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி வெளிவந்த இக்கட்டுரையை படித்தவர்களுக்கு இது நினைவிருக்கலாம்.
வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவை உண்ண உணவு, உடுக்க உடை, உறைய உறைவிடம். இந்தஅடிப்படைத் தேவைக்கு அப்புறம் தான் மற்றதெல்லாம். மனிதர்களில் எவ்வளவோ பேர் இந்த அடிப்படைத்தேவையை பூர்த்தி செய்யவே அவதிப் படுகிறார்கள். இந்த மூன்றையும் பூர்த்தி செய்த பின்னரே ஆடம்பரத்தைப் பற்றி எவரும் நினைக்க வேண்டும். ஆனால் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாமல் ஆடம்பரச் செலவு செய்தாலோ அல்லது இந்த அடிப்படைத்
தேவையில் ஒன்றை ஆடம்பரமாகவும் மற்றவற்றை மிகவும் தரமற்றதாகவும் வைத்திருந்தாலும் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும் இதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்.
மனிதர்களில் மூன்றுவகை இருக்கிறார்கள். அவர்கள் உணவுப் பிரியர்கள், உடைப் பிரியர்கள் மற்றும் உறைவிடப் பிரியர்கள். இவர்களைத் தப்பானவர்கள் என்று கூற முடியாது. ஒன்றுக்கு அதிகம் செலவு செய்து விட்டு மற்றவற்றிற்கு குறைவாக செலவு செய்வதுதான் தப்பு. புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒருவர் தன் உழைப்பால் கிடைக்கும் பணத்தை எல்லாவற்றிற்கும் செலவழித்து எல்லவற்றிலும் சமமான நிறைவு காண வேண்டும்.
இனி சற்று விரிவாகக் காண்போம். சிலர் உணவுக்கு மிகவும் அதிகமாக செலவிடுவார்கள். தரமானதும் சத்துள்ள உணவும் தான் மனிதனுக்கு அவசியம். அதை விடுத்து எப்பவும் வெளியில் சாப்பிடுவதும் ஆடம்பரமான உணவகங்களில் அடிக்கடி உணவருந்தி தான் ஈட்டிய பணத்தில் பெரும்பகுதியை உணவுக்கு மட்டுமே செலவழித்து உடையைப் பற்றியோ உறைவிடத்தைப் பற்றியோ அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளாதிருப்பவர் ஒரு வகை.
அடுத்தபடியாக சிலர் உடைக்கு மட்டும் அதிகமாக பணம் செலவிடுவர். இவர்கள் தேவைக்கு அதிகமாக உடைகளை வாங்கிக் குவிப்பர். இவர்களது உடைகள் எல்லாமே மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை உடைகளாக வாங்கிக் குவித்துவிட்டு உணவுக்கும் உறைவிடத்துக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்பவர்கள் இன்னொரு வகை.
இறுதியாக சிலர் உறைவிடத்துக்காக அதிகப் பணத்தை செலவிடுவர். வசதியாக வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு தேவை தான். அதற்காக இரண்டு பேர் வாழ்வற்கு இருபது பேர் வசிக்கும் அளவுக்கு பெரிய வீட்டைத் தேர்வு செய்வதோ அல்லது வரவுக்கு அதிகமாக கடன் பட்டு ஆடம்பரமான வீட்டை வாங்கி சம்பளத்தில் பெரும்பகுதியை
வீட்டுக் கடனுக்கு கொடுத்து விட்டு உணவுக்கும் உடைக்கும் பணம் பற்றாமல் திண்டாடுபவர்கள் மற்றும் ஒரு வகை.
நம்மிடம் தேவைக்கு அதிகமான பணமிருந்தால் எல்லாவற்றிற்குமே ஆடம்பரமாக செலவு செய்யலாம்.அதில் தப்பில்லை. நான்குபேர் வாழ்வதற்கு நாற்பது பேர் தங்குமளவுக்கு பங்களாபோன்று வீடு வைத்திருக்கலாம். பங்களாபோல் வீட்டை வைத்துக்கொண்டு பணத்துக்காக எக்காலத்திலும் எவரிடத்தும் பல்லிளிக்கக் கூடாது. அப்படி பணத்துக்காக பிறரிடம் கேயேந்துபவர்களுக்கு பங்களா எதற்கு? பார்ப்பவர்கள் பரிகசிப்பார்கள்.
அதே மாதிரிதான் உடைகளும். நம் தேவைக்கு போதுமான உடைகள் இருந்தால் போதுமானது. இன்னும் சில ஆடைகள் கூடுதலாக இருக்கலாம். சிலர் எக்கச்சக்கமாக ஆடைகளை வாங்குவர். ஆனால் பயன் படுத்துவதோ சில குறிப்பிட்ட ஆடைகள் மட்டுமே. மற்றவை அலமாரியில் தூங்கும். ராமன் கால்பட்டு அகலிகை கல்லாக இருந்தவள் மனித உருவம் பெற்றதுமோல் என்றாவது இவர்கள் கைபட்டு அந்த ஆடைகளும் அலமாரியில் நித்திரையை விட்டு விழித்தெழும்.
உணவைப் பொருத்தமட்டில் உயிர்வாழத்தான் உணவே தவிர உண்டு கொழுப்பதற்கல்ல. அதைத்தான் வள்ளுவரும் செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்கிறார். ஆனால் அந்த அளவுக்கு செல்லவேண்டியது இல்லை என்றாலும் பசியெடுக்கும்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டால் போதுமானது.
சத்துள்ள உணவாக சிறிதளவே உண்டால் நல்ல ஆரோக்கியமாக வாழலாம். எல்லாவற்றிலும் நாம் சிறந்தவர்கள் என்று சொல்லமுடியாது. நமக்கு உணவுக்கட்டுப்பாடு என்பது கிடையாது. சீனர்களையும் ஜப்பானியர்களையும் பார்த்து நான் பொறாமைப்படுவதுண்டு. ஒரு நூறு சீனர்களையோ அல்லது ஜப்பானியர்
பார்த்தால் அதில் எத்தனைபோர் குண்டாக இருப்பார்கள்? தொந்தியும் தொப்பையுமாக இருப்பார்கள்? என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஆதலால் ஒரு குறிப்பிட்ட அளவே வருமானம் இருப்போர் சமமாக அடிப்படைத்தேவைகளுக்கு செலவிட்டு அமைதியாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. எனவே உணவென்பது முழுநலத்துடன் நோயின்றி வாழ்வதற்காக மட்டுமே என்பதும் உடை என்பது நம் உடலை மறைக்கவும் பருவநிலை மாற்றங்களால் வரும் வெட்ப தட்பங்களில் இருந்து நம்மைக்
காப்பதற்கும்தான். அதுபோல் வீடு என்பது உண்டு ஓய்வெடுத்து வாழவும் புறச்சூழலில் இருந்து நம்மை பாதுகாப்பதற்குமான இருப்பிடம் தான். நம் பெயர் நிலைத்திருக்கும் என்பதற்காக அல்ல.
நான் இருபது ஆண்டுகளாக இருந்த என் வீடு இன்று எனக்கில்லை. அந்த வீட்டில் இருந்து வாடகை வேண்டுமானால் எனக்கு வருகிறது.
அது ஒன்று தான் என் வீடு. இன்று என் மகன் வீட்டில் தான் இருக்கிறேன். இந்த வீடும் ஒரு விளைநிலமாகத்தான் இருந்தது. இது எவருடையது என்று எங்களுக்கு தெரியாது அவர் பெயரும் தெரியாது. எனக்கு இறை நம்பிக்கை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் நான் பகவத்கீதையின் தத்துவமான நிலையாமையை கடைப்பிடிக்கிறேன். ஆனால் விவேகானந்தர் நிலையாமையைப் பற்றி எண்ணாமல் பெயர் நிலத்திருக்க வழி சொல்வது பக்தர்களை குழப்புகிறதோ என்னவோ என்னைக் குழப்புகிறது.
No comments:
Post a Comment