இலங்கைச் செய்திகள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி

உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

பிள்ளையான் கண்ணீருடன் பல விடயங்களை என்னிடம் குறிப்பிட்டார் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது - கம்மன்பில

வடக்கு கிழக்கில் சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் ஆலயங்களை விடுவிக்கவேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள்

நுவரெலியா கிரகரி வாவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு  



யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி

Published By: Vishnu

17 Apr, 2025 | 09:14 PM


(இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்;.அண்மையில்  பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார்.அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய,

சனத் ஜயசூரிய என்னிடம் ' ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்' என வினவினார்.அப்போது 'எவ்வாறாவது யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும்' என்றேன்.

முதல் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் ஒன்றுப்பட வேண்டும். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், உட்பட அனைத்து துறைகளிலும் திறமைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.   நன்றி வீரகேசரி 






உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

17 Apr, 2025 | 05:21 PM

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தை அடுத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உதய கம்மன்பில நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடியதை அனேகமாக பொதுமக்கள் கண்டிருக்க முடியாது. இந்நிலையில் அவர் பிள்ளையானுக்காக ஆஜராகும் ஒரு சட்டத்தரணியாகக் தன்னைக் கூறிக் கொண்டு அவரை சந்தித்ததில் வேறு கதைகளும் இருக்கலாம். பிள்ளையானுக்கு,  உதய கம்மன்பில சட்டத்தரணியானதன் ஊடாக முன்னைய காலங்களில் எந்தளவு  ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஊகிக்க முடியும்.

பிரபலமான வழங்குகளில் சட்டத்தரணியாகத் தொழிற்படாத ஒருவர் இப்படி இந்த வழக்கிற்கு திடீர் எனத் தோன்ற முற்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

முன்னைய காலங்களில் கீழே ஒதுக்கப்பட்ட பல்வேறு ஊழல்களுக்கான  கோவைகள் தற்போது மேல் எடுக்கப்பட்டு குற்றத்தடுப்பு மற்றும் மோசடி ஒழிப்புப் பிரிவினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். சட்டரீதியாகச் செய்ய வேண்டியவைகளை நீதித்துறை மேற்கொள்கிறது. அரசு என்ற வகையில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது.

கடந்த காலத்தில் அழிவுக்கு உற்பட்ட பல நிறுவனங்களில் சுகாதரத்துறையே முன்னிலையில் உள்ளது. சுகாதாரத்துறையில் இன்று மருந்துகளுக்கு ஏதும் பிரச்சினைகள் என்றால் அது 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். அக்காலப்பகுதியில் சரியான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படவில்லை.

உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்று வெறுமனே உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை உருவாக்குவது எமது நோக்கமல்ல. கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான மாபெறும் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். நாம் மேற்கொள்வது அபிவிருத்தி என்பதை விட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெறும் செயற்பாடாகும் என்பது பொருத்தமாகும்.  கிராம மட்டத்தில் அபிவிருத்திக்கான ஒரு பொறி முறையை அமைக்க முயற்சிக்கிறோம். எனவேதான் அதற்காக நாம் ஆதரவு கேட்கிறோம் என்றார்.   நன்றி வீரகேசரி 

 



பிள்ளையான் கண்ணீருடன் பல விடயங்களை என்னிடம் குறிப்பிட்டார் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது - கம்மன்பில

16 Apr, 2025 | 06:43 PM

(இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய காரணத்திற்காகவா பிள்ளையான் இலக்கு வைக்கப்படுகிறார். சட்டவிரோதமான முறையில் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை  பெயர் குறிப்பிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கண்ணீருடன் பல விடயங்களை பிள்ளையான் என்னிடம் குறிப்பிட்டார். 21 ஆம் திகதி ஜனாதிபதி எந்த சூத்திரதாரியை குறிப்பிட போகிறார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில்  புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்டத்தரணி என்ற அடிப்படையில் தான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  சிவநேசதுரை சந்திரகாந்தன் எனழைக்கப்படும் பிள்ளையானை சந்தித்து பேசினேன். சட்டவிரோதமான முறையில் தான் பிள்ளையானை அரசாங்கம் கைது செய்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுவதாயின் கைது செய்வதற்கான காரணத்தை எழுத்துமூலமாக கைது செய்யப்படுபவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும்.

 கைது செய்யப்பட்டமைக்கான காரணம் பிள்ளையானின் குடும்பத்தாருக்கு அறிவிக்கவில்லை.பிள்ளையானை சந்திப்பதற்கு அவரது சட்டத்தரணியின் கனிஸ்ட சட்டத்தரணி கடந்த 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த 11 ஆம் திகதி பிள்ளையானின் குடும்பத்தார் என்னை சந்தித்தார்கள்.அவர்களிடமிருந்து  பல தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்  10 அ(1) பிரிவின் பிரகாரம் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபரை பார்ப்பதற்கு அவரது குடும்பத்தாருக்கும், சட்டத்தரணிக்கும் அதிகாரம் உண்டு என்பதை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு எடுத்துரைத்து சட்டத்தரணி என்ற அடிப்படையில் பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொண்டேன்.

பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் உரையாடினேன்.இதன்போது நான்கு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள். முழுமையான உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.பிள்ளையான் கண்ணீர் மல்க என்னுடன் பேசினார். 'விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி,இலங்கை இராணுவத்துடன் ஒன்றிணைந்து, உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகளை தோற்கடிக்க போராடினேன். அன்று விடுதலை புலிகள் பக்கம் இருந்தவர்களில் ஒருசிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக  உள்ளார்கள்.

  ஒருசிலர் வியாபாரிகளாகவும்,  புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களாகவும் உள்ளார்கள்.இவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதில்லை. என்னை மாத்திரம் ஏன் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும். விடுதலை புலிகளை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால் நான் இன்று இலக்குவைக்கப்படுகிறேன்' என்று உணர்வுபூர்வமாக என்னிடம் வினவினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான பொறுப்புதாரியை தாங்கள் கைது செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 12 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்தேன்.இவ்விடயங்கள் குறித்து அவரிடம் வினவினேன்.

ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட வாக்குமூலமளிக்கவில்லை என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.குண்டுத்தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் ஏதும் அறியவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிடுகிறேன். ஏனெனில் 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் பிள்ளையான்  சிறைச்சாலையில் இருந்தார். ஆகவே  பிள்ளையான் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடுபவர்களின் மூளையை முதலில் பரிசோதிக்க வேண்டும்.

பயங்கரவாதி சஹ்ரானுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அரசியல்வாதிகளை கைது செய்தால் அதில் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று குறிப்பிட முடியும்.ஆகவே பிள்ளையானை பிரதான சூத்திரதாரி என்று அரசாங்கம் குறிப்பிடுவது நகைச்சுவையானது. ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல உண்மைகளையும், பிரதான சூத்திரதாரியையும் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார். ஆகவே ஏப்ரல் 21 இக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.

பொலிஸாரின் கயிற்றை சாப்பிட்டு ஜனாதிபதி இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். குண்டுத்தாக்குதலின்  பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிப்பதற்கு பதிலாக சூத்திரதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் தான் சேயா செவ்மினி என்ற சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பொறுப்பை கொண்டயா என்பவர் ஏற்றுக்கொண்டார்.

டி.என்.ஏ. பரிசோதனையில் கொண்டயா குற்றவாளியல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் ' இந்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் தன்னை கொடூரமாக தாக்கியதால் அவ்வாறு ஏற்றுக்கொண்டதாக' கொண்டயா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை மாற்றியமைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.பிள்ளையான் பிரகாரனுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். ஆகவே அவரை கொண்டயாவின் நிலைக்கு மதிப்பிடுவது அரசாங்கத்தின் தவறாகும்.  பிள்ளையானை தடுப்புக் காவலில் வைக்கும் ஆவணத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

இந்த ஆவணத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. இந்த தடுப்பு காவல் உத்தரவு பத்திரத்தில் ஜனாதிபதி ஏப்ரல் 11 ஆம் திகதி கைச்சாத்திட்டு விட்டு, ஏப்ரல் 12 ஆம் திகதி கிழக்குக்கு சென்று குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரை கைது செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொய்யை உண்மையை போன்று குறிப்பிடலாம். ஆனால் உண்மையாக்க முடியாது என்றார்.   நன்றி வீரகேசரி 





வடக்கு கிழக்கில் சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் ஆலயங்களை விடுவிக்கவேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் 

Published By: Vishnu

16 Apr, 2025 | 06:16 PM

யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கீரிமலை சடையம்மா மடம் ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்துநிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நீண்டகாலமாக சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் இவற்றை விடுவிப்பதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு ஜனாதிபதியிடம் வேண்டுகிறோம்.

மேலும் பொதுமக்களின் காணிகளில் வடக்கு கிழக்கில் படையினர் தொடர்ந்து தங்கி உள்ளனர். தாங்கள் அவ்விடயத்தில் அக்கறை கொண்டு பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும். பாடல் பெற்ற தலமாகிய திருக்கோணேஸ்வரர் திருத்தலத்திற்கு அருகாமையில் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலுக்குச் செல்லும் பாதையில் பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டு கோயில் புனிதத்தை தொடர்ந்து கெடுத்து வருகிறார்கள். இவ்விடயம் தொடர்பாக சென்ற வருடம் நல்லை ஆதீனத்துக்கு தாங்கள் வருகை தந்தபோது எடுத்துரைத்தோம்.

தயவுசெய்து வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வர திருத்தல சுற்றாடலை பேணுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் வேண்டுகிறோம். தாங்கள் பதவி ஏற்றதும் நீண்டகாலமாக உள்ள தமிழர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைப்பேன் என கூறி வந்துள்ளீர்கள். நிரந்தரமான பூரண உரிமைகள் உள்ளடக்கிய தீர்வை வழங்கி எம்மினத்தின் நீண்ட காலப் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வாருங்கள் என்றுள்ளது.   நன்றி வீரகேசரி 




நுவரெலியா கிரகரி வாவியில் குவியும் சுற்றுலா பயணிகள் 

Published By: Digital Desk 3

16 Apr, 2025 | 05:11 PM

நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளூர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

குறிப்பாக கிரகரி வாவி கரையோரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நுவரெலியா மாநகர சபை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஏராளமான  ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





நன்றி வீரகேசரி 





உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு  

 Published By: Digital Desk 3

20 Apr, 2025 | 12:14 PM

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள்  மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 260 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


No comments: