இலங்கைச் செய்திகள்

ஐந்து பில்லியன் அமெ. டொலரில் இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம்

இரணைமடு குளத்தின் இடதுகரை நீர் விநியோக வாய்க்கால் ரூ. 35 மில்லியன் செலவில் புனரமைப்பு 

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்கப்படாது

பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்

லசந்த – வசிம் தாஜூதீன் கொலை; எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை

அதிக ஞாபகத்திறன் மூலம் உலக சாதனை படைத்த திருகோணமலை சிறுமி


ஐந்து பில்லியன் அமெ. டொலரில் இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம் 

இந்திய ஊடகத்துக்கு இலங்கை அதிகாரி பேட்டி

October 16, 2024 7:00 am 

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 05 பில்லியன் அமெரிக்க டொலர் வீதி மற்றும் ரயில் பாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவை, இந்தியாவே பொறுப்பேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ளதையடுத்து, அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பாரிய இரு தரப்பு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கூட்டமொன்றில் கடந்த மாதம் நான், கலந்துகொண்டேன். நாங்கள் தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்குமிடையில் நெடுஞ்சாலையையும், ரயில் பாதயையும் அமைக்கவுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாலேயே, இது குறித்து திட்டமிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரயில் மற்றும் தரை வழிப்பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் உதவியாக அமையக்கூடும்.

ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்துக்கு அது உதவும். இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையை பெறமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





இரணைமடு குளத்தின் இடதுகரை நீர் விநியோக வாய்க்கால் ரூ. 35 மில்லியன் செலவில் புனரமைப்பு 

October 16, 2024 10:15 am

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் இடதுகரை நீர் விநியோக வாய்க்கால் புனரமைப்புப் பணியானது தற்போது 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரணைமடு குளத்தை அண்டிய முரசுமோட்டை, ஊரியான், உருத்திரபுரம், பெரியபரந்தன் ஆகிய பிரதேசங்களுக்கான இடதுகரை நீர் விநியோக வாய்க்காலில் நீர் திறந்து விடப்படும் துருசுப் பகுதியில் ஏற்பட்டிருந்த நீர் கசிவை தடுக்கும் வகையில் புனரமைப்புப் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் புனரமைப்புப் பணி மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நீர்ப்பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த சிறுபோக நெற்செய்கை அறுவடையின் பின்னரே இரணைமடு குளத்தினுடைய புனரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய நீர் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் இந்த புனரமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அப்பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதன் புனரமைப்புப் பணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவுறுத்தப்பட உள்ளதாகவும், அந்நீர்பாசன திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  பரந்தன் குறூப் நிருபர்  -  நன்றி தினகரன் 




ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்கப்படாது

- நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட தெரிவிப்பு

October 17, 2024 9:13 am 

ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்வதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தீர்மானத்தை தற்போதைய புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அதிக இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

விமான சேவை நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல வருடங்களாக நட்டத்தை ஈட்டி வந்துள்ளது. இந்நிலையில், அதில் பங்குகளை கொள்வனவு செய்யவும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் விலைமனுக்களை கோரியிருந்தது.

இத்திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51 வீத பங்குகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். மீதமுள்ள 49 வீதம் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.

அதற்கிணங்க ஆறு தரப்பினர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.ஆனால் அவர்கள் எவரும் குறித்த முறைமையின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறவில்லை.

அதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2022 ஏப்ரல் முதல் மார்ச் 2023 வரையிலான காலப்பகுதியில், இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது.

அந்த வகையில் அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது. நாட்டின் சுற்றுலாத்துறை. வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மிக முக்கிய பங்காற்றுவதாகவும் அதன் தலைவர் கனேகொட தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 



பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்

- வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ. மழை

October 16, 2024 7:17 am 

– சில பகுதிகளில் அவ்வப்போது மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (16) நாட்டின் வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதோடு, சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.   நன்றி தினகரன் 





லசந்த – வசிம் தாஜூதீன் கொலை; எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை

விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும்

October 16, 2024 6:30 am 

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் மர்ம மரணம் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏழு சம்பவங்களுக்கு அப்பால், கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குற்றவாளிகளென கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது. அவசியமான தகவல்கள் பெறப்பட்ட அல்லது விசாரணைகள் பூர்த்தியான அல்லது சிறியளவு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ள ஏழு முக்கிய சம்பவங்கள் குறித்தே, அரசாங்கம் தற்போது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

ஆனால், இதன் அர்த்தம் ஏழு சம்பவங்கள் குறித்து மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதல்ல.

கடந்த காலத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பொருளாதார குற்றங்கள், படுகொலைகள் பத்திரிகையாளர்கள் காணாமல்போனமை குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வோம்.

ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் மரணம், லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்போம்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன. நீதிமன்ற வழக்கொன்று நடைபெறுகின்றது.

தற்போதைக்கு புதிய விசாரணையை ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை முன்னெடுப் போமென்றும் அவர் தெரிவித்தார்.   




அதிக ஞாபகத்திறன் மூலம் உலக சாதனை படைத்த திருகோணமலை சிறுமி

October 14, 2024 7:15 am 

தனது அதீதி ஞாபகத்திறன் மூலம் திருகோணமலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

பிரேம்ராஜ், வைதேகி தம்பதியினரின் மகளான இச்சிறுமி, தனது குழந்தை பருவத்திலிருந்தே அதிக ஞாபகத் திறனுடன் செயற்பட்டு வந்துள்ளார். இதனை அடையாளங்கண்ட சிறுமியின் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

அதன் பலனாக நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது, 2 முதல் 7 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல் உறுப்புகள் 6இன் உட்பாகங்கள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளதுடன், 100 சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளங்காட்டினார்.

இவரது முயற்சியை முறைப்படி, கண்காணித்து பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர், சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, சோழன் உலக சாதனை படைத்த சிறுமி பிரேம்ராஜ் தாராவுக்கு, சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை மற்றும் கோப்புகள் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




No comments: