இஸ்ரேல் மீது அதிகரிக்கும் உலக எதிர்ப்பு!

 October 19, 2024 7:00 am 

கடந்த ஓராண்டாக காஸா போரை எதிர்த்து, அரபுலகம் ஆர்ப்பரித்து எழுந்து நிற்பது ஒருபுறமிருக்க, ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் போர்நிறுத்தம் கோரி பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரில் நடைபெற்றுள்ளன.

அதேவேளை தங்கள் பெயரால் இந்தக் கொடூர யுத்தம் வேண்டாம் என புலம்பெயர்ந்து வாழும் யூதர்களில் ஜனநாயக உணர்வு கொண்டோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரன், பயங்கரவாத எதிர்ப்புப் போர் என முதலில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்த போதும், பின்னர் உள்நாட்டுப் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

லண்டனில் நடந்த பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்திற்கு எதிராகப் பேசிய இங்கிலாந்தின் முன்னாள் உள்துறை செயலர் சுவல்லா பிரேவர்மேன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.

அமெரிக்காவிலும் போர்நிறுத்தம் கோரி தலைநகரங்களில் போராட்டங்கள் பல நடந்தன. இளந்தலைமுறையினர் போராட்டங்களுக்கு வந்தமை ஒரு புதிய காட்சி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு படை உதவி செய்யக்கூடாதென்று அவர்கள் குரல் எழுப்பினர்.

அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட அமெரிக்க அரசத் தலைவர்கள் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்புக்கு துணைபோகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு பண உதவி, ஆயுத உதவி போன்ற உதவிகள் செய்யக்கூடாதென கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கான மையம் (Centre for Constitutional Rights) என்ற மனிதவுரிமை அமைப்பு வழக்கு தொடுத்தும் இருந்தது.

தென்னாபிரிக்கா இஸ்ரேலுடனான தனது தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பொலிவியா, கொலம்பியா, சிலி, ஹொண்டுராஷ் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆளும் நாடுகள் இஸ்ரேலுடனான அரசியல் உறவை முழுமையாக துண்டித்துக் கொண்டன. கடந்த வருட 2023 நவம்பரில் சவுதியில் அரபுக் கழக 22 அரபு நாடுகளும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் OIC – 57 இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட நாடுகளும் கூடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் இஸ்ரேல் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் போர்க்குற்றங்களைக் கண்டித்தும் கட்டாயப்படுத்தும் தீர்மானம் கொண்டுவர ஐநா. பாதுகாப்பு சபையை வலியுறுத்தின.

பிரிக்ஸ் – BRICS கூட்டமைப்பின் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா நாடுகளின் தலைவர்கள் சந்தித்து காசாவில் நடந்துவரும் போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேற்படி நாடுகள் மட்டுமன்றி எகிப்து, எத்தியோப்பியா, ஆர்ஜெண்டினா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஐ.நா செயலர் அண்டோனிய குட்டரசும் இதில் கலந்து கொண்டார்.

கடந்த வருடம் நவம்பர் 15இல் ஐ.நா பாதுகாப்பு அவையில், உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்புச் சபையில் குறைந்தது 9 நாடுகள் வாக்களித்தால்தான் ஒரு தீர்மானம் நிறைவேறும். ேமால்டா என்ற நாடுதான் இத்தீர்மானத்தை முன்மொழிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் விலகிக் கொண்டன.

ஏனைய 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்தில் ஹமாஸ் நடத்திய ஒக்டோபர் 7 தாக்குதல் பற்றியும், இஸ்ரேல் நடத்தும் வான்வழிக் குண்டு வீச்சுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஹமாஸ் தாக்குதல் பற்றிய கண்டனக் குறிப்பு இல்லை என்பதற்காக அமெரிக்கா உறுப்பு நாடுகளைக் கடிந்து கொண்டது.

போர் தொடங்கியதில் இருந்து நான்கு தீர்மானங்கள் பாதுகாப்பு அவையில் முன்மொழியப்பட்டு அவை தோற்கடிக்கப்பட்டன.

பிரேசில் கொண்டு வந்த தீர்மான முன்மொழிவில், இஸ்ரேலுக்கு இருக்கும் தற்பாதுகாப்புக்கான உரிமை பற்றிய குறிப்பு இல்லை என்ற காரணத்தின் பெயரால் அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோற்கடித்தது. போர்நிறுத்தம் கோராத அமெரிக்காவின் தீர்மான முன்மொழிவு ரஷ்யாவாலும் சீனாவாலும் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை ரஷ்யாவின் இரு தீர்மான முன்மொழிவுகள் போதிய ஆதரவில்லாததால் தோற்றுப் போயின.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலையில், 2023 ஒக்டோபர் 23இல் ஐ.நா. பொதுப்பேரவையின் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு போர்நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்டாயப்படுத்தும் தீர்மானம் அல்ல. பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட காலமாக ஆதரவு தெரிவித்து வந்த இந்திய அரசோ அத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.

இஸ்ரேல் பாதுகாப்பு தீர்மானங்களை ஒருபோதுமே மதித்ததில்லை:

2023 ஒக்டோபர் 23 இல் ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெற்றிருந்த போது, ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, ஹமாசின் தாக்குதலைக் கண்டித்த அதேநேரத்தில், பலஸ்தீனர்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவிக்கும் மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்பையும் கண்டித்தார்.

ஆனால், பலஸ்தீன மக்களின் துயரங்களின் பெயரால் ஹமாஸ் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் நடத்திய தாக்குதலின் பெயரால் பலஸ்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவதையும் ஏற்க முடியாது என்றும் பேசினார்.

இஸ்ரேல் ஒருபோதும் ஐநா. பாதுகாப்பு அவைத் தீர்மானத்தைப் பொருட்படுத்தியதில்லை அமெரிக்கா தன்னைப் பார்த்துக் கொள்ளும் என்ற துணிச்சல்தான் இதற்கு காரணம் ஆகும்.காஸாவில் எந்த நேரத்திலும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கிறது என்று ஐ.நா எச்சரித்திருந்த நிலையில் கட்டாரின் பேச்சுவார்த்தை முயற்சியில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை இஸ்ரேலும் ஹமாஸும் எட்டின. குழந்தைகள், பெண்கள் அடங்கிய பணயக் கைதிகள் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸும், 150 பேரை விடுவிப்பதாக இஸ்ரேலும் உடன்பாடு கண்டன.

ஒக்டோபர் 7 ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்பு பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது என்பது உண்மையே. தற்போது இஸ்ரேலின் பயங்கர முகம் உலகுக்கு தெரியவந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான முகாம் – சீனா தலைமையிலான முகாம் என கொஞ்சம் கொஞ்சமாக உலகம் இருமுனையாகப் பிரிந்து காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது என்பதுதான் இங்கு ஆபத்தான விடயம்.

–ஐங்கரன் விக்கினேஸ்வரா…நன்றி தினகரன் 

No comments: