-சங்கர சுப்பிரமணியன்.
இறையென்ற சொல்லுக்கு இங்கு
எத்தனையோ பொருளிருந்தும்
முறையற்று சொல்லை எப்போதும்
அறமற்று முப்பாலில் தேடாதீர்
அறம் பொருள் இன்பம் இவை தவிர்த்து
புறம்பாக எதுவும் அதிலில்லை
முறைசெய்து காக்கும் மன்னனில் வரும்
இறை என்றால் வரி என்றறிக
தொல்காப்பிய இலக்கண வழி நின்றால்
வன் எனும் விகுதிசேர இறைவனாகும்
இறையெனும் சொல் கடவுளென்று ஒரு
பொருளை தந்திட்டாலும்
மலராய் மருவாய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்
இயற்கையோடு இயைந்து நின்றிடும்
ஈடு இணையற்ற பேராற்றலை
இறைவனென்று எங்ஙனம் விளித்துடுவீர்
இப்புவி வாழ் மாந்தர்களே
பாலின விகுதி பேராற்றலுக்கு இல்லையென
விதி நின்று வலியுறத்தல் அறிந்திலரோ
ஆதலினாலே இறைவன் என்றழைத்தல்
மன்னனையன்றி பேராற்றலையன்று
இருள்சேர் இருவினை என்றால் அழிவுதரும்
இரு வினை என்றறிவோம்
நல்வினை தீவினையென நயமுடனே இரு
வினைக்கும் பொருள் சொல்வோரே
தீவினை அழிவைத்தரும் என்பதுண்மை
நல்வினை எங்ஙனம் அழிவைத்தரும்
ஆதலினால் இங்கு இருவினையின் பொருள்
வேறென்பதனை நன்கறிவீர்
வரிவிதிக்கும் மன்னன் இறைவனென்றால்
அவனின் இருவினை யாதென அறிவீர்
காரணமின்றி படையெடுத்து வேறொரு
நாட்டினரை அழித்தல் தீவினையாம்
அயல்நாட்டார் படையெடுக்க தம்நாட்டை
பாதுகாக்க தவறினாலும் தீவினையே
இவ்விரு வினைகளும் தனக்கு வந்து சேராது
இருப்பவனே இறைவனாவான்
மன்னனை இறைவனாய் பொருள் கண்டார்
மாசற்ற வழிநின்று குறள் தந்தார்
இருள்சேர் இருவினையும் சேராத அரசன்
என்ற பொருள் கண்டோர்
புகழுக்குரியோராக போற்றப் படுவார்கள்
என்பதே குறளில் சொல்லப்படுவதாம்
No comments:
Post a Comment