தமிழினத்தின் அரசியல் புதிய திசையை நோக்கி பயணிப்பது அவசியம்

 October 25, 2024 1:20 am 

கடந்தகால தலைமைத்துவங்களின் பொறுப்பற்ற வழிநடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் பயணம் புதிய திசையை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சமூக சேவையாளர் அமுது நேரு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிடும் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீ பவானந்தராஜாவுக்கு ஆதரவாக இளவாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

‘தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வை கேள்விகுறியாக்கிய கடந்தகாலப் போக்குகளில் இருந்து விடுபட்டு புத்திஜீவிகள், புலமையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலில் புதிய சமுதாயத்தை நோக்கிய பயணத்தை தொடங்க வேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்தார்.

அமுது நேரு தனதுரையில் மேலும் கூறியதாவது:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான வைத்திய
கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். கூர்மையான சிந்தனையும் சேவைத் திறனும் எந்த காரியத்தையும் முடிக்க இயலும் என்று உறுதியோடு முன்னெடுக்கும் துணிவாற்றலும் அவரின் தனித்துவமான குணாதிசயங்கள். அத்தகைய ஒருவர் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறூப்பினராக வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

‘நாடு அநுராவோடு நான் உங்களோடு’ என்ற முழக்கத்துடன் யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் வந்திருக்கும் பவானந்தராஜா மருத்துவ சேவைக்கு அப்பால் மக்களின் நலன்களில் பெரும் அக்கறை கொண்டவர். தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல்கொடுத்து சேவை செய்வதற்கு முன்வந்திருக்கிறார். அவரின் குரல் தமிழனுக்காக ஒலிக்க அவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு எமது முழு ஆதரவையும் கொடுப்போம்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சகலரும் ஒன்றிணைந்து செழுமையான நாட்டைக் கட்டியெழும்புவோம் என்று பதவியேற்றதும் உடனடியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அறைகூவலின் வழியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கும் தமிழ் மக்களும் ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் தேவை. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கும் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் வைத்திய கலாநிதி பவானந்தராஜாவை எமது பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம்.

கறைபடியாத கரங்கள், சவால்களை எதிர்நோக்கும் துணிச்சல், செயற்றிறன், அகம்பாவம் இல்லாத சுபாவம், உண்மையைப் பேசுவதற்கு தயங்காத உறுதியான மனம் இவையனைத்தும் நாம் பவானந்தராஜாவிடம் கண்ட மேன்மையான குணாதிசயங்கள். பழிபாவத்துக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, மக்களின் நல்வாழ்வில் மாத்திரம் அக்கறைகொண்ட நேர்மையான பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும்.

கடந்த காலத்தில் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் உருப்படியாக என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்த்து பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். பழைய உணர்ச்சிவசமான சுலோகங்களுக்குள் தலையை அசைக்காமல் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்கக்கூடிய ஆற்றலைக் கொண்ட வைத்தியக்கலாநிதி பவானந்தராஜா போன்றவர்கள் நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.

புதிய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை பெரும்பான்மைச் சமூகத்தின ஆதரவுடன் வென்றெடுப்பதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆற்றலும் பக்குவமும் கொண்ட பவானந்தராஜா போன்றவர்கள் எமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியது அவசியமாகும்”.   நன்றி தினகரன் 

No comments: