October 23, 2024 6:00 am
– அவ்விமானத்தை இதுவரை நேரில் பார்த்திருக்காத, இலங்கை மக்களை பாதிப்பிலிருந்து மீட்பது புதிய அரசின் பொறுப்பு!
– 15 வருடகால மொத்த இழப்பு ரூபா 54,000 கோடி!
ஒரு நாட்டின் தேசிய விமானசேவை அந்நாட்டுக்கே பெரும் பெருமையாகும். ஆனால், நாட்டு மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல் அதனை சிறப்பாக நிர்வகித்தால்தான் உண்மையான பெருமை கிடைக்கும்.
கடந்த 15 வருடங்களில் எமது தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்’ நிறுவனத்தின் மொத்த இழப்பு 537,430 மில்லியன் ரூபாவாகும். நாளுக்கு நாள் இருபது கோடி ரூபாயை நெருங்கும் இந்த நட்டம் தினமும் காலையில் ஒரு ராத்தல் பாணுக்கு இருபது ரூபாய் வரி செலுத்தும் பொது மக்களால் சுமக்கப்படுகிறது.
நட்டத்தில் இயங்கிய ‘எயார் லங்கா’ நிறுவனம் ‘எமிரேட்ஸ்’ உடன் ‘ஸ்ரீலங்கன்’ ஆகியிருந்தது.
1998 ஆம் ஆண்டளவில், ‘எயார் லங்கா’ என அழைக்கப்பட்ட எமது தேசிய விமான நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வந்தது.
1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசாங்கம் தொடர்ந்து நான்கு வருடங்கள் இதே நட்டத்தை அனுபவித்தது. 1998 ஆம் ஆண்டு ‘எயார் லங்கா’வின் 44 வீதமான பங்குகள் உலகப் புகழ்பெற்ற விமான நிறுவனமான ‘எமிரேட்ஸ்’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன.
அதுவரை நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வருடந்தோறும் கோடி கோடியாய் இறைத்து இயங்கி வந்த ‘எயார் லங்கா’ நிறுவனம் ‘ஸ்ரீலங்கன்’ என்ற பெயரில் புதுவாழ்வு பெற்று தனது பயணத்தை ஆரம்பித்தது. ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் திறைசேரிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரி மிகுதியானது.
1998 ஆம் ஆண்டு முதல், ‘எமிரேட்ஸ்’ நிறுவனத்தின் புதிய நிர்வாகத்துடன், 2001 ஆம் ஆண்டளவில், பெரும் நஷ்டம் குறைக்கப்பட்டு லாபம் ஈட்டத் தொடங்கியது. அந்த இலாபத்தை படிப்படியாக அதிகரித்து இலங்கையின் உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு கணிசமான வரி வருவாயை சேர்க்க ஆரம்பித்தது.
நாட்டுக்கு பாரமாக இருந்த தலைவலியை முடிவுக்குக் கொண்டு வந்து வருமான வரியை தொடர்ந்து செலுத்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென நட்டமடையத் தொடங்கியது. 2008ஆம் ஆண்டு மீண்டும் நீடிக்க வேண்டிய ஒப்பந்தத்தை, நீடிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கு முன்னதாக, அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘பீட்டர் ஹில்’ என்பவரின் விசாவும் ரத்து செய்யப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேற வழி சமைக்கப்பட்டது. அவ்வேளையில் ‘ஸ்ரீலங்கன்’ நிறுவனம் 2008 இல் பெற்ற இலாபம் 4899 மில்லியன் ரூபாவாகும்.
தங்களது சேவையைப் பெறும் விமானப் பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்த இருக்கைகளை பிரபலங்களின் கோரிக்கையை முன்னிறுத்தி ரத்து செய்த சம்பவம் நடந்தது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஆசனங்களை வழங்க மறுத்ததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும். பதினைந்து ஆண்டுகளாக அதன் பலனை நாடு அனுபவித்து வருகிறது.
எமிரேட்ஸ் உடனான ஒப்பந்தம் 2008 இற்குப் பிறகு நீடிக்கப்படாததால், அதன் அனைத்துப் பங்குகளும் இலங்கை அரசுக்குச் சொந்தமாகின. அப்போது நாட்டின் முன்னணி அரசியல்வாதி ஒருவரின் மனைவியின் உறவினரான நிஷாந்த விக்கிரமசிங்க இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஒரு சாதகமான தலைமை நிறைவேற்று அதிகாரி நியமிக்கப்பட்டார். அத்துடன் பணிப்பாளர் குழுவும் நியமிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டு 2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கீழ் புதிய நிர்வாகம் செயற்படத் தொடங்கியது, அதன் பின்னர் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முடிவே இல்லை. பொறுப்பேற்ற முதல் ஆண்டில், அதாவது 2009 இல் 9996 மில்லியன் ரூபா நட்டம் பதிவாகியுள்ளது. (ரூ. 999 கோடி)
முந்திய ஆண்டில் ரூ. 4899 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், புதிய பணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே ரூ.9996 மில்லியன் இழப்பை சந்தித்தமை நகைப்புக்கு இடமாகியது.
2009 முதல் 2023 வரையான 15 வருடங்களில் தொடர்ச்சியாகப் பெற்ற மொத்த நஷ்டம் 537,430 மில்லியன் ரூபாவாகும்.
இவ்வாறு பாரியளவு நஷ்டமடையக் காரணம் என்னவென ஆராய 2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் ஜே. சி. வெலியமுன குழு அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையிலும், குழுவின் அறிக்கைகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் நாட்டு மக்களுக்குத் தெரியாது. ஆனால் மேற்கண்ட நஷ்டம் மக்களின் வரிப்பணத்தால் ஈடு செய்யப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு நிைலவரப்படி, 06 A 330 எயார்பஸ் மற்றும் 04 A 350 எயார்பஸ்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தக் கொடுக்கல் வாங்கல் பின்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 10 எயார்பஸ் கொள்வனவுகளை நாட்டினால் வாங்க முடியாது எனக் கூறி அதனை உடனடியாக இரத்துச் செய்தது. பிரான்சின் எயார்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு இழப்பீடும் செலுத்த வேண்டியிருந்தது.
வேறொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நாட்டினால் தாங்க முடியாத ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது, முடிந்தவரை பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி, அங்கிருந்து ஒரு பகுதியைப் பெற முயற்சித்தால், இவர்கள் என்ன ஆட்சியாளர்கள்? 6.8 மில்லியன் டொலர் இழப்பீட்டில் முடிக்கப்பட வேண்டிய ஒரு ஒப்பந்தம் 9.8 மில்லியன் செலவில் முடிக்கப்பட்டது.
பத்து எயார்பஸ்களின் கமிஷன்:
பிரான்சின் எயார்பஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எயார்பஸ் விற்பனை கொடுக்கல் வாங்கல் கமிஷன் கொடுப்பனவுகள் தொடர்பான சிக்கல் வாய்ந்த பரிவர்த்தனை குறித்து பிரிட்டிஷ் நீதிமன்றமொன்று விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையானது இலங்கைக்கு எயார்பஸ்களை விற்பனை செய்வது தொடர்பான விசாரணையாக இல்லாமல், பொதுவாக கமிஷன் கொடுப்பனவுகள் தொடர்பான விசாரணையாக இருந்ததால், இலங்கைக்கான கமிஷன் பணம் குறித்த தகவலும் தெரியவந்தது.
2013 இல் 10 எயார் பஸ்களை வாங்க 2.8 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 16.8 மில்லியன் டொலர் கமிஷன் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் முழுமையாக முடிக்கப்படாததால் ஒப்புக்கொள்ளப்பட்ட கமிஷன் தொகையில் இருந்து 2 மில்லியன் டொலர் கமிஷன் முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கமிஷன் கொடுக்கல் வாங்கல்களை பிரித்தானிய புலனாய்வாளர்கள் வெளிக்கொண்டு வந்ததை அடுத்து, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்தது. அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் அப்போது கைது செய்யப்பட்டனர்.
வெளிப்படுத்தப்பட்ட தகவலின்படி, 16.8 மில்லியன் டொலர் மொத்த கமிஷன் தொகையின் முன்பணமான 2 மில்லியன் டொலர் தொகையானது, பல கணக்குகள் மூலம் மேற்கண்ட சந்தேக நபர்களிடமிருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
முதலில் ஒரு உயர் அதிகாரியின் மனைவியின் புருனே கணக்குக்கும், பின்னர் அவரது சொந்த சிங்கப்பூர் கணக்குக்கும் பின்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது கணவரின் கணக்குக்கும். பின்னர் அந்தத் தொகை சிங்கப்பூரில் உள்ள மற்றொருவரின் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தக் கணக்கில் இருந்து உரிய தொகை இலங்கையில் உள்ள ‘அக்ரோ’ என்ற நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் கொழும்பு கோட்டையில் பெறுமதியான காணி ஒன்றைக் கொள்வனவு செய்த நிறுவனம் ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை வரவில் இட்ட கணக்கு உரிமையாளரும், சிங்கப்பூரில் உள்ள கணக்கை வைத்திருப்பவரும் ஒருவரே என குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்திருந்தது. கைது செய்யப்பட்ட நிர்வாகியும் அவரது மனைவியும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்த விசாரணைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
புதிய அரசால் ‘ஸ்ரீலங்கனை’ மீட்க முடியுமா?
2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் மொத்த நட்டம் 54,000 கோடி ரூபாவை நெருங்கியது. 2024 ஆம் ஆண்டின் இழப்பை வெளிப்படுத்த இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. 2023 இல் 71,306 மில்லியன் ரூபா நஷ்டத்தின்படி, ஒரு நாளைக்கு ஏற்படும் இழப்பு சுமார் 20 கோடி ரூபா.
கடந்த அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய தீர்மானித்திருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான மூவரடங்கிய அமைச்சரவை அந்தத் தீர்மானத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தலைவர் உட்பட பணிப்பாளர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஏறக்குறைய 20 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை புதிய அரசாங்கத்தால் மீட்க முடியுமா?
இதுதான் இன்றைய முக்கிய வினா!
கடந்த 15 வருடங்களில் ஏறக்குறைய 54,000 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதற்கு இழப்பீடு வழங்கிய பெரும்பாலான பொதுமக்கள், அப்படிப்பட்ட விமானத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லர். அந்த மக்கள் இனியும் பாதிக்கப்படாமல் இருப்பது புதிய அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment