இலங்கைச் செய்திகள்

இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதை நோக்கிய பயணம் ; இலங்கை - ஜப்பானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையில் எந்த தடங்கலும் இல்லை ; இயக்குனர் தெரிவிப்பு

யோஷித்த ராஜபக்ஷ, டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை


இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

05 Apr, 2025 | 02:25 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 'நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு' (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு இணைந்ததாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி வீரகேசரி   




இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

05 Apr, 2025 | 11:11 AM



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில்  இன்று சனிக்கிழமை (05) முற்பகல் நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குதிரைப்படையை முன்னிலையாக


கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. 

அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.   












நன்றி வீரகேசரி   




டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதை நோக்கிய பயணம் ; இலங்கை - ஜப்பானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 2

04 Apr, 2025 | 02:06 PM

ஜப்பானின் "டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம்" திட்டத்தின் விரிவான வடிவமைப்பிற்கான ஆலோசகர் ஒப்பந்தம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பானிய நிறுவனமான யச்சியோ இன்ஜினியரிங் இடையே கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்  டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அதிமேதகு அகியோ இசொமதா ஆகியோர் கலந்து கொண்டனர். 

டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட மற்றும் பற்றாக்குறையான அதிர்வெண்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு திட்டமாகும். 

இயற்கை பேரழிவுகள் குறித்த தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலமும், ஒளிபரப்புத் துறையில் ஆரோக்கியமான போட்டி சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் பங்களிக்கிறது. 

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் முடிவடைந்ததிலிருந்து இன்று ஆலோசகர் ஒப்பந்தம் கையெழுத்திட 10 ஆண்டுகள் ஆனது என்பதைக் குறிப்பிட்டு, இந்தத் திட்டம் மேலும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்று தூதர் இசொமதா வலியுறுத்தினார். இலங்கை மக்களின் நலனுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை அடைவதில் இந்த திட்டத்தை நிலையான முறையில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நெருக்கமாக இணைந்து செயல்படுவார்கள் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி   







காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையில் எந்த தடங்கலும் இல்லை ; இயக்குனர் தெரிவிப்பு

04 Apr, 2025 | 11:51 AM

சிவகங்கை கப்பல் சேவையானது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை தொடர்புகொண்டு வினவிய வேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கப்பல் சேவையில் தடங்கல் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. பயணிகள் மிகவும் சௌகரியமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தை நீங்கள் பயணிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகிறது.

எனவே, பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 








யோஷித்த ராஜபக்ஷ, டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

04 Apr, 2025 | 10:18 AM

யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர்களை பிணைகளில் விடுதலை செய்ய  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகிய இருவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்ய பட்டபெதிகே முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டது. 

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 







அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

03 Apr, 2025 | 07:51 PM

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு  மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும் நிலைமையை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஏ.விமலேந்திராஜா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிவிவகார அமைச்சின் பொருளாதார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா, இலங்கை வணிகச் சபையின் தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, பிராண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர், மாஸ் ஹோல்டிங்ஸ் இணை நிறுவனர் ஷெராட் அமலீன், லங்கா காமண்ட் முகாமைத்துவ பணிப்பாளர் சைப் ஜெபர்ஜி, மிஷேல் லங்கா நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிலந்தி வெலிவே மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 








மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

03 Apr, 2025 | 05:26 PM

2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 722,276 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 118,315 ஆகும்.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து 93,568 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 69,705 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 50,201 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 39,513 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 43,366 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 27,353 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 








No comments: