நைந்த வாழ்வை நிமிர்த்து – அன்பு ஜெயா பா வகை: கலி மண்டில மண்டிலம்.

வாழ்க்கையினில் ஏற்றமொன்றே வாடிக்கை இல்லைதானே!

தாழ்வென்பதும் நம்வாழ்வில் தவிர்க்கவுமே இயலாதே!

தாழ்வினிலே தளராதே! தவிர்த்திடவே போராடு!

வாழ்க்கையெனில் வெற்றிதோல்வி வந்துபோகும் மறவாதே!   (1)

 

என்றுமில்லை வென்றோரோ எப்போதும் தோற்றவரோ!

இன்றையநம் வாழ்வினிலே இயற்கைதானே வெற்றிதோல்வி!

ஒன்றுமாற்றி ஒன்றுவரும் உலகவாழ்வின் உண்மையீதே!

இன்றுதோற்போர் நாளைவெல்வர் இறைவனவன் எழுதியதே!   (2)

 

தோல்வியில்தான் நடைபயின்றாய், தூளிவிட்டே இறங்கிவந்தே!

தோல்விகண்டு நைந்திடாதே தொடர்வதுமே வெற்றிதானே!

தோல்விக்குப் பின்னுண்டே தொடர்கின்ற படிப்பினையே!

தோல்விதந்த படிப்பினையில் தொடர்முயற்சி வெற்றியுண்டே!  (3)

 

No comments: