இயற்றியவர்:
சிவஞானச்சுடர்
பல்வைத்திய கலாநிதி பாரதி
இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்
இறைவனின் நினைப்பை
இருத்தியே மனதால்
குறைவிலாப் பூசையை நிறைவுற
இயற்றிடப்
பிறையொடு கங்கை சூடிய
பெம்மான்
நறையிலா வாழ்வினை முறையொடு
நல்குவன்!
ஐம்பூ தங்களால் ஆன
உடம்பிலும்
அநாதியாய்த் தொடரும் அழிவிலா
உயிரிலும்
மெய்யென ஒன்றாய் உடனாய்
வேறாய்
விமலன் உளனெனச் சைவம்
விளம்புமே!
நல்வினை செய்தும் வல்வினை
செய்தும்
நாளும் பொழுதும் இறைவனின்
பெயரைச்
சொல்லிச் சொல்லி உய்ந்தவர்
கோடி!
தோன்றாத் துணையாய் தொடர்பவன் சிவனே!
கல்லும் கரையும் வகையில்
மறைகளைக்
கருத்தி லிருத்தி உருகிப்
பாடணும்!
ஒல்லும் வண்ணம் கணமும்
கடவுளை
உளத்தால் மறவாத் திண்மையை வளர்க்கணும்!
மண்முதல் பெண்ணும்
பொன்னும் தந்திடும்
மாறாப் பற்றினை மறந்திடல்
முதல்நிலை!
எண்ணியே மனதை ஒருமுகப்
படுத்திட
ஏற்றதோர் தியானம்
இயற்றுதல் ஒருநிலை!
ஆதார தியானத்தில்
முதிர்ச்சியும் பெற்று
அரன்தன்னை நினைந்தடியர்
இயற்றிடு மோர்நி
ராதார யோகத்தின் இணையிலாப்
பயனாய்
நெஞ்சமதில் அரும்புவதும்
சிவானு பவமே!
வெல்வேன்!ஐம் புலனைத்திரு
வைந்தெழுத் தாலென
வேண்டுமட்டும் சிகாரத்தை
நினைந்து ஒருக்கிச்
சொல்லற்றும் செயலற்றும்
சும்மா இருந்து
சோதியனின் திருவருளில்
ஒன்றிட வேண்டும்!
ஆதிசிவ
சத்தியவள் கருணையின் பொருட்டு
ஆன்மபசு
கரணங்கள் சிவகர ணமாக
சோதிசிவன்
நாடுமிடம் தேடிடும் போது
சுகந்தபர
நாதசிலம் போசையும் கேட்கும்!
சிரமமெதும் பாராது தவத்தினைத் தொடர்ந்து
திருவைந்தெ ழுத்ததனை
மனதிற் குள்ஓதி
பிரம்மரந்திரத் தானத்தில்
தியானித்து வந்தால்
பேறெனவே சிவஞானம்
சுரந்திடும் அன்றே!.
ஆர்தபெரும் பிறப்பிறப்பாம்
துயரும் அகல
அர்த்தமுள்ள சிகாரமெனும்
எழுத்தை நினைத்து
சார்புணர்ந்து சார்புகெடத்
தொழுது ஒழுகின்
சீர்த்திமிகு பரமபதம்
சித்திக் குமாமே!
-------------------------------------------------------------------------------------------
விளக்கம்--
நறையிலா – குறையொன்றும் இல்லாத
ஐம்பூதங்கள் - காற்று நீர் நிலம்(மண்) அக்னி(நெருப்பு) விண் ஆகியன.
இவற்றின் சேர்க்கையே ஆன்மா எடுக்கும் மானிட உடம்பு
ஆர்தல் - அனுபவித்தல். (ஆன்மா எண்ணற்ற பிறவிகளில் பிறந்து இறந்து
அனுபவிப்பது)
வல்வினை - வலியதாகிய செயல். (உதாரணம்
--சிவனடியாருக்காகச் சிறுத்தொண்ட நாயனாரின்
அரிய செயல்)
ஒல்லுதல் - கூடுதல்-
ஆதார யோகம் - சிவத்துடன்
ஐக்கிய நிலையை ஏற்படுத்தும் வகையிலே இயற்றப்படும் சிறந்த யோகம் (தியான
முறை).ஒவ்வொரு ஆதாரத்திலும் அதற்குரிய எழுத்து
வண்ணம் தெய்வம் ஆகியவற்றாலே தியானிக்கப்பெறுவது. இந்த யோகத்திலே
ஆதாரங்களுக்கிடையிலே ஆன்மாவின் போக்குவரத்து பிரம்மரந்திரத்துடன் நின்றுவிடும்.
இது பதமுத்தியைமட்டுமே தர வல்லது. வியாபகமான சிவத்தை குறிப்பிட்டுள்ள
வடிவத்துக்குள்ளே ஏகதேசப்படுத்தித் தியானிப்பது.
நிராதார யோகம் - வேறு ஒன்றாலும்
தரமுடியாத அத்துவிதக் கலப்பைச் சிவத்துடன் ஏற்படுத்தும் வகையிலே இயற்றப்படும்
அதிசிறந்த தியான முறை. பரமுத்தியைத் தரவல்லது. தற்போதம் நீங்கிய நிலையிலே
ஆன்மாவின் போக்குவரத்து பிரம்மரந்திரத்திற்கும் மேலாக துவாதசாந்தம் வரை சென்று
சிவத்துடன் ஐக்கியமாக வழிவகுப்பது. சாதனையால் தியானமியற்றுபவர் துவாதசாந்தம் வரை
சென்று திருவருளால் சிவானந்தத்தில் மூழ்கிச் சிவானுபவத்தை அனுபவிப்பர். அந்த
நிலையிலே தான் சிவத்துடன் கலந்துள்ளோம் - தானும் சிவமாகி விட்டேன்- என்கிற அந்த உணர்வாகிய
பற்றையும் தியானிப்பவர் தன்னிடமிருந்து நீக்கிவிட்டால் ஒளிமயமான பிரகாசத்துடன்
சிவம் தோன்றிச் சிவப்பேற்றைக் கொடுக்கும். அந்த நேரம் தோன்றும் பேரின்பத்தை அனுபவத்தாலேதான் உணர முடியும்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாது. சிவத்துடன் ஐக்கியப்பட்டுள்ளேன் என்னும்
காணுகின்ற ஆன்மாவின் நினைப்பும் காணப்படும் சிவஞானக் காட்சியும் காணப்படும் பொருளான சிவமும் அந்த இடத்திலே
சங்கமமாகி விடும் என்பதை ஞானியர் உணர்ந்து உரைத்துள்ளார்கள். தாதான்மிய
சம்பந்தத்தால் சிவத்துடன் ஒன்றாகி இரண்டற்ற நிலையிலே கலந்திருக்கும் திருவருளாகிய
சிவசத்தியே தனக்கு ஆதாரம் என்று பற்றெல்லாம் அறவே ஒழித்து ஞானியர் ஆற்றும் தியானமே
நிராதார யோகம்.
சிவானுபவம் - இதை ஒன்றாலும் விளக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே இதன்
பேரின்பத்தை உணரமுடியும்.
ஐம்புலன்கள் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
சிகாரம் - மூல மந்திரமான சிவாயநம என்பதில் உள்ள சிகாரம் முதலான ஐந்து
எழுத்துகளும் சிவபெருமானின் திருமேனி என்பர். சிகார எழுத்துகளை உணர்ந்து
சிந்தித்தபடி தியானம் இயற்ற வேண்டும். (செபிக்கக் கூடாது)
ஒருக்குதல் - ஒருவழிப்படுதல்
ஆர்தல் - அனுபவித்தல்
துவாதசாந்தம் - பிரம்மரந்திரம்
சிவதன்மம் - மெல்வினை - வல்வினை ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல்
பவகன்மம் - பாவப்பட்ட வினை
சார்புணர்தல் -- சார்பு
என்பது புகலிடமான பரம்பொருளின் பாதபங்கயம்(திருவடி)என்பதைக் கு றிப்பது. இதை
நன்றாக உணர்ந்து அந்நிலையிலே திடமாக நிலைத்திருப்பதே உண்மையான சிவத்தியானம்.
சார்புகெட - இதிலே
சார்பு பிறப்பைக் குறிக்கின்றது. சார்பு
கெட ஒழுகுவது என்பது பிறப்பில்லாச் சிவத்தன்மையைப் பெற்றுத் திகழும் சமாதி
நிலையைக்; குறிக்கிறது.
(திருக்களிற்றுப்படியார்
அறிவுறுத்திய இக்கருத்தையே தெய்வப்புலவரும் என்றோ தெளிவாகச் சொல்லியுள்ளார்.
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்மற்
றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.)
பரமபதம் (பரபதம்) -
சிவப்பேறு என்னும் முத்தி
======================================================
No comments:
Post a Comment