-சங்கர சுப்பிரமணியன்
வாழ்க்கைக்கை மிகவும் தேவையானவை உண்ண உணவு, உடுக்க உடை, உறைய உறைவிடம். இந்தஅடிப்படைத் தேவைக்கு அப்புறம் தான் மற்றதெல்லாம். மனிதர்களில் எவ்வளவோ பேர் இந்த அடிப்படைத்தேவையை பூர்த்தி செய்யவே அல்லோலகல்லோலப் படுகிறார்கள். இந்த மூன்றையும்
பூர்த்தி செய்த பின்னரே ஆடம்பரத்தைப் பற்றி எவரும் நினைக்க வேண்டும். ஆனால் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாமல் ஆடம்பரச் செலவு செய்தாலோ அல்லது இந்த அடிபடைத் தேவையில் ஒன்றை ஆடம்பரமாகவும் மற்றவற்றை மிகவும் தரமற்றதாகவும் வைத்திருந்தாலும் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். இதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்.
மனிதர்களில் மூன்று வகை இருக்கிறார்கள். அவர்கள் உணவுப் பிரியர்கள், உடைப் பிரியர்கள் மற்றும் உறைவிடப் பிரியர்கள். இவர்களைத் தப்பானவர்கள் என்று கூற முடியாது. ஒன்றுக்கு அதிகம் செலவு செய்து விட்டு மற்றவற்றிற்கு குறைவாக செலவு செய்வதுதான் தப்பு. புரியும்படி சொல்ல வேண்டுமானால்
ஒருவர் தன் உழைப்பால் கிடைக்கும் பணத்தை எல்லாவற்றிற்கும் செலவழித்து எல்லவற்றிலும் சமமான நிறைவு காண வேண்டும்.
இனி சற்று விரிவாகக் காண்போம். சிலர் உணவுக்கு மிகவும் அதிகமாக செலவிடுவார்கள். தரமானதும் சத்துள்ள உணவும் தான் மனிதனுக்கு அவசியம். அதை விடுத்து எப்பவும் வெளியில் சாப்பிடுவதும் ஆடம்பரமான உணவகங்களில் அடிக்கடி உணவருந்தி தான் ஈட்டிய பணத்தில் பெரும்பகுதியை உணவுக்கு
மட்டுமே செலவழித்து உடையைப் பற்றியோ உறைவிடத்தைப் பற்றியோ அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளாதிருப்பவர் ஒரு வகை.
அடுத்தபடியாக சிலர் உடைக்கு மட்டும் அதிகமாக பணம் செலவிடுவர். இவர்கள் தேவைக்கு அதிகமாக உடைகளை வாங்கிக் குவிப்பர். இவர்களது உடைகள் எல்லாமே மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை உடைகளாக வாங்கிக் குவித்துவிட்டு உணவுக்கும் உறைவிடத்-
துக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்பவர்கள் இன்னொரு வகை.
இறுதியாக சிலர் உறைவிடத்துக்காக அதிகப் பணத்தை செலவிடுவர். வசதியாக வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு தேவை தான். அதற்காக இரண்டு பேர் வாழ்வற்கு இருபது பேர் வசிக்கும் அளவுக்கு பெரிய வீட்டைத் தேர்வு செய்வதோ அல்லது வரவுக்கு அதிகமாக கடன் பட்டு ஆடம்பரமான வீட்டை வாங்கி சம்பளத்தில்
பெரும்பகுதியை வீட்டுக் கடனுக்கு கொடுத்து விட்டு உணவுக்கும் உடைக்கும் பணம் பற்றாமல் திண்டாடுபவர்கள் மற்றும் ஒரு வகை.
நம்மிடம் தேவைக்கு அதிகமான பணமிருந்தால் எல்லாவற்றிற்குமே ஆடம்பரமாக செலவு செய்யலாம்.அதில் தப்பில்லை. நம்மிடம் தேவைக்கு அதிகம் பணம் எப்படி வரும்? நாம் ஈட்டும் வருமானத்தில்
ஒருபகுதியை சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,
“ஆகாறளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறகலாக் கடை” என்று குறள் வழி இயம்பியுள்ளார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவே வருமானம் இருப்போர் தமது வருமானத்தை சரியான முறையில் அடிப்படைத் தேவைகளுக்கு செலவிட்டு ஒரு பகுதியை எதிர்காலத்தை எண்ணி சேமித்து அமைதியாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கையாகும்.
அதைவிடுத்து மற்றவர்களோடு ஒப்பிட்டு புலியைப் பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக வாழும் வாழ்க்கை என்பது கனியிருப்பக் காய் கவர்ந்தற்றே ஆகும்.
No comments:
Post a Comment