சிவில் சமூகங்களின் அரசியல் பங்களிப்பு!

 October 5, 2024


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டிருந்தன. இந்த முயற்சியில் ஏராளமானவர்கள் தன்னிச்சையாகவும் ஈடுபட்டனர். இதன்விளைவாக பொது வேட்பாளர் நிலைப்பாடு ஓரளவு வெற்றியையும் பெற்றது. ஆரம்பத்தில் இந்த முயற்சி பெருமளவில் எடுபடாது என்னும் நிலையில் நோக்கப்பட்டாலும்கூட – பின்னர் குறிப்பிடத்தக்களவு கவனத்தைப் பெற்றது.

இந்தப் பின்புலத்தில் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வாய்ப்பு உருவாகியது. ஏழு கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாக வடிவம் பெற்றது. ஆனால், தற்போது அது தொடருமா அல்லது உடையுமா என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. சிவில் சமூகம் தொடர்பில் தமிழ்ச் சூழலில் குழப்பகரமான கருத்துகள் உண்டு. சிவில் சமூகம் என்னும் சொற்பதத்தை பலரும் பலவிதங்களில் பயன்படுத்துகின்றனர். அரசுசாரா நிறுவனங்களும் சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துகின்றன. அரசுசாரா நிறுவனங்கள் நிதிசார் முகவரமைப்புகளில் தங்கியிருப்பவை. அவை அரசியலில் ஈடுபடுவதற்கான வரையறைகள் உள்ளன. அந்த வரையறைகளை தாண்டினால் அவற்றுக்கான நிதி மூலங்கள் தடைப்பட்டுவிடும்.

தமிழ் மக்கள் பொதுச் சபையில் அவ்வாறான அமைப்புகளும் உண்டு. அவை தமிழ்த் தேசியக் பொதுக் கட்டமைப்பு ஒரு சிவில் சமூக – அரசியல் கூட்டாகத் தொடர்வதைத் தடுக்க முயற்சிக்கின்றன – குழப்பவும் முயற்சிக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இவ்வாறான தடுமாற்றங்கள் – குழப்பங்கள் வாக்குகள் பிரியவும் தமிழ்த் தேசியக் கட்சிகளை பிரிக்கவுமே பயன்படும். இவ்வாறான தவறை தமிழ் மக்கள் பொதுச்சபை செய்யக்கூடாது. தமிழ் மக்கள் பொதுச்சபை அவசரத்தில் உருவாகிய ஓர் அமைப்பு. நீண்ட அரசியல் உரையாடல்களின் வழியாக உருவாகிய அமைப்பு அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நோக்கி வாக்குகளை திரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. தேவை கருதி பலர் அதற்குள் உள்வாங்கப்பட்டனர்.

இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் சிலர் தற்போது தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான விஷச்செடிகளாகவும் மாறியிருக்கின்றனர். இதற்கு ஏனையவர்களும் பலியானால் தமிழ் மக்கள் பொதுச்சபை என்னும் பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் மேலும் சிதைக்கப்படும் ஆபத்தே நேரிடும். தேசத்தைத் திரட்டுவதற்காக நிறுத்தப்பட்ட பொதுவேட்பாளர் என்னும் நிலைப்பாடு இறுதியில் ஒன்றுபட்ட கட்சிகளைக்கூட, ஒன்றுபடுத்தி வைத்திருக்க முடியாத கையறுநிலைக்குள் சென்றிருக்கின்றது. சிறிய விவகாரம் அரசியல் உரையாடல்களில் எட்டிப்பார்க்கின்றது.

சங்கு சின்னத்தை கட்சியொன்று பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. அடிப்படையில் அது ஒரு சுயேச்சை சின்னமாகவே பயன்படுத்தப்பட்டது. அதனை கட்சியொன்று சட்டரீதியில் பெற்றிருக்கின்றது. இன்னொருவர் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில்தான் அது தெரிவு செய்யப்பட்டிருக்கும். ‘சங்கு’ சின்னம் முன்னர் ஹெல உறுமயவின் சின்னமாகவே இருந்தது. இப்போது அது ஒரு பிரச்சனையில்லை. தமிழ் மக்கள் பொதுச் சபையானது பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பொதுக் கட்டமைப்பாக எவ்வாறு செயல்படப்போகின்றது? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாது விட்டால் பொதுச் சபை ஒரு தோல்வியடைந்த செயல்பாடாகவே பதிவாகும்.   நன்றி ஈழநாடு 



No comments: