October 4, 2024
திருகோணமலை மற்றும் அப்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்தல் என்பது முக்கியமானது. இரண்டு மாவட்டங்களிலும் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படாதுவிட்டால் பிரதி நிதித்துவங்களை நிச்சயமாக இழக்க நேரிடும். இதனைப் புரிந்துகொண்டு கட்சிகள் செயல்படுமா? ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் எப்போதுமே மாயமான் போன்றதுதான். பலர் பலவாறான முயற்சிகளை மேற்கொண்டும் அது சாத்தியப்படவில்லை.
ஆனால் சில நிர்ப்பந்தங்களுக்கு கட்சிகள் கட்டுப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. அவ்வாறான தொரு நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் திருகோணமலை மற்றும் அப்பாறையின் மக்கள் நலன்களை கருத்தில்கொண்டு காலத்தேவையான முடிவு ஒன்றை எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதில் இரண்டு தரப்புகளும் விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும். தமிழ் அரசுக் கட்சி ஒப்பீட்டு அடிப்படையில் வடக்கு கிழக்கில் அதிக வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் கட்சி என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இரண்டு தரப்புகள் மேற்படி மாவட்டங்களில் போட்டியிடுமாக இருந்தால் ஆசனம் பறிபோகவே அதிக வாய்ப்பு உண்டு. இதனை எவ்வாறு முன்னெடுக்க முடியும்? திருகோணமலை மற்றும் அம்பாறையில் ஓரிடத்தில் வீட்டு சின்னத்திலும் பிறிதோர் இடத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னத்திலும் போட்டியிட முடியும். அவ்வாறில்லாது போனால் இரண்டு மாவட்டங்களிலும் பொதுச் சின்னத்தில் போட்டியிடலாம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உண்டு. ஏட்டிக்குப் போட்டியாக மோதினால் இறுதியில் பிரதிநிதித்துவமே இல்லாமல் போகும். இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டுதான் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். மக்களின் நலனை விடவும் கட்சியின் நலன் எப்போதுமே மேலானதாக இருக்க முடியாது. இது தொடர்பில் குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். மக்களிடமிருந்து அழுத்தங்கள் வெளிவர வேண்டும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment