நீள நினைக்கின்றேன் நெஞ்சம் குளிர்கிறது !

 





 





 



 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 


 

நீள நினைக்கின்றேன் நெஞ்சம் குளிர்கிறது 
ஆழ எண்ணங்கள் அலையலையாய் வருகிறது
இன்பக் கடலினுள் மூழ்கியே நிற்கின்றேன்
என்மனமே சிறகடித்து எங்கேயோ பறக்கிறது

பள்ளிப் பருவம் துள்ளியே வருகிறது
கள்ளமிலா மனதில் கற்பனைகள் உதிக்கிறது
அள்ளவள்ளக் குறையாமல் ஆனந்தம் பெருகிறது
அக்காலம் வருமாவென அகமேங்கி நிற்கிறது

ஓடையிலே குளிப்பேன் ஒருநோயும் அணுகாது
ஓயாமல் உண்ணுவேன் ஒருதீங்கும் நேராது
பாயில்த்தான் படுத்தேன் படுத்தவுடன் உறக்கம் வரும்
எண்ணியே பார்க்கிறேன் ஏக்கந்தான் வருகிறது

பழஞ்சோறு சாப்பிட்டே பள்ளிக்குச் செல்லுவேன்
பாதணி அணியாமல் பரவசமாய் நடந்திடுவேன்
மழைவெய்யில் கூட வசந்தமாய் தெரியும்
மனமுழுக்க அப்போ மகிழ்ச்சியே பொங்கும்

நட்புகள் எனக்கு நாற்புறமும் இருப்பார்கள்
எப்பவும் காவலாய் என்னுடனே வருவார்கள்
தப்பான வழிகளை எப்பவுமே ஏற்கார்கள்
தலைநிமிர்ந்து நிற்கவே தானுரைப்பார் நித்தமுமே 

விடுதலை விட்டதும் வெளியெங்கும் போகேன்
விதம்விதமாய் விளையாட்டில் மெய்மறந்து நிற்பேன்
நீர்நிலைகள் நோக்கி நண்பரெலாம் போவோம்
நீந்தியே மகிழ்வோம் நெஞ்சமெலாம் நிறையும் 

வசதி குறைந்தாலும்  வருந்தியதே இல்லை
வயிறாற உண்டேன் மனமகிழ்வு கொண்டேன்
ஆடம்பரம் இல்லை அகமுழுக்க நிறைவே
அக்காலம் வருமா ஏங்குகிறதே மனது 

பொங்கலும் சித்திரையும் மங்கலமாய் தெரியும்
அதிக விலையில்லா அழகான உடுப்பு
அளவாகப் பலகாரம் அம்மாதான் செய்வார்
அதுவெனக்கு அமுதமாய் ஆகியே இருக்கும் 

சோகிப் பலகாரம் சுவையாக இருக்கும்
சுற்றிவர நண்பருடன் சுவைத்துமே திளைப்பேன்
ஊஞ்சலிலே அமர்ந்து உளமகிழ ஆடுவேன்
உல்லாசம் அங்கே ஊற்றெடுத்தே பொங்கும் 

அப்பாவும் ஏழை அம்மாவும் ஏழை
ஆனாலும் அன்பே அவர்களது சொத்து
ஏழையின் பிள்ளை எனையெண்ணா வகையில்
ஆழமாம் காதலுடன் அரவணைத்தார் வாழ்வெல்லாம் 

கல்லூரிக் காலம் கலகலப்பாய் ஆனது
காதல் உணர்வும் கூடவே வந்தது
ஆசையால் மனது ஆலாய்ப் பறந்தது
ஆனந்த பரவசத்தில் மிதந்துமே நின்றேன்

பல்கலைக் கழகம் பற்பல அனுபவம்
நிற்பதும் நடப்பதும் பறப்பதாய் தெரிந்தது
அங்கும் காதல் முட்டியே நின்றது
ஆனால் அதுவோ கரைந்துமே போனது

நண்பர் மாறினர் நட்பு விரிந்தது
அன்புடை அம்மா அறிவுடை அப்பா
என்றும் நெஞ்சில் நின்றே நிலைக்கிறார்
நீள நினைக்கிறேன் நெஞ்சம் குளிர்கிறது 




















No comments: