உலகச் செய்திகள்

லெபனானில் ஐ.நா. நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட் தாக்குதலில் 22 பேர் பலி

42,126 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் மற்றொரு பாடசாலையின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 28 பேர் பலி

காசாவில் ஐந்தில் ஒருவர் பலி

தென்மேற்கு லெபனானை நோக்கி தரைவழி நடவடிக்கையை விரிபடுத்தியது இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா 17.9 பில். டொலர் உதவி


லெபனானில் ஐ.நா. நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட் தாக்குதலில் 22 பேர் பலி

October 12, 2024 4:18 pm 

தெற்கு லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் பயன்படுத்தும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் நேற்று (11) தாக்குதல் நடத்தியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக ஐ.நா. தரப்பு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவுடன் போர் புரிந்து வரும் இஸ்ரேலியப் படை, அமைதிகாக்கும் வீரர்கள் மீது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவே தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப் பகுதி மீது இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை இரவு நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக லெபனான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஹிஸ்புல்லா மூத்த அதிகாரி ஒருவரான வபீக் சபா என்பவரை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிர் தப்பியதாக மூன்று பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹஸ்புல்லா அமைப்பு வீசிய பீராங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்று விவாசய நிலப்பகுதியில் விழுந்ததில் வடக்கு இஸ்ரேலில் தாய்லாந்து பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அம்புலன்ஸ் சேவை தெரிவித்தது. வடக்கு இஸ்ரேலில் ரபோட் நப்டாலி பகுதிக்கு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா கமாண்டர் ஒருவரை இஸ்ரேலிய விமானப்படை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இது தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

காசாவில் போர் ஆரம்பித்ததை அடுத்து பலஸ்தீனின் ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்தே இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் அரம்பித்தது. கடந்த ஓர் ஆண்டாக இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.

ஹிஸ்புல்லா வலுவாக இருக்குத் தெற்கு லெபனான், பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்கள் மற்றும் பக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் தெற்கு லெபனான் பகுதியிக்குள் இஸ்ரேலிய தரைப்படை நுழைந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு லெபனானின் நகூரா சிறு நகரில் இருக்கும் ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் பிரதான முகாமில் உள்ள அமைதிகாப்பாளர்களின் கோபுரம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. அதே முகாமில் இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தின் மீது இஸ்ரேலிய டாங்கி ஒன்று சூடு நடத்தியதில் அது வீழ்த்தப்பட்டிருப்பதோடு இரு அமைதிகாப்பாளர்கள் காயமடைந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படை நேற்று மற்றொரு ஐ.நா. அமைதிகாக்கும் முகாமின் சுற்றுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஐ.நா. தரப்பு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக மோதல் தீவிரம் அடைந்திருப்பதால் ஆபத்தைத் தவிர்ப்பதற்கு ஐ.நா அமைதிகாக்கும் படையினர் வடக்காக 5 கிலோமீற்றர் தமது நிலையை மாற்றும்படி ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் டன்னி டனோன் கடந்த வியாழக்கிழமை கேட்டிருந்தார்.

நகூரா பகுதியில் ஐ.நா. அமைதிகாக்கும் முகாமுக்கு அருகில் துருப்புகள் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் வியாழனன்று குறிப்பிட்டிருந்தது.

லெபனானில் உள்ள 10,400க்கும் அதிகமான அமைதிகாக்கும் படையினரின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் செப்டெம்பர் பிற்பகுதியில் இருந்து அவர்களின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைவர் ஜீன் பீரே லக்ரொயிக்ஸ் கடந்த வியாழக்கிழமை பாதுகாப்புச் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் நடுப்பகுதில் போர் தீவிர அடைந்த பின்னர் மூன்றாவது முறையாகவே பெய்ரூட் மையப்பகுதி மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் வான் தாக்குதல் நடத்தியது.

மக்கள் நிரம்பியிருந்த பகுதி மீது முன்னெச்சரிக்கை இன்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் வீதிகள் மற்றும் அடுக்குமாடிக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதோடு ஐவர் காணாமல்போயிருக்கும் நிலையில் நேற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்றன.

லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு கணிசமானோர் அண்டை நாடான சிரியாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். 2,100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 

 




42,126 பலஸ்தீனர்கள் பலி

October 12, 2024 10:32 am 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,126 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 98,117 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 61 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 117 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று அறிவித்த நிலையிலேயே அங்கு உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள வீடு ஒன்றின் மீதும் மகாசி அகதி முகாமில் உள்ள பொதுமக்களின் குழு ஒன்றின் மீதும் நேற்றுக் காலை நடத்திய தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இதில் மகாசி அகதி முகாமில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்டில் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. மறுபுறம் டெயர் அல் பலாஹ்வில் இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்வதோடு அங்குள்ள ஜபலியாக அகதி முகாம் இஸ்ரேலியப் படையின் முற்றுகையில் இருந்து வருகிறது. இந்த முற்றுகை பல மாதங்கள் நீடிக்கக் கூடும் என்றும் வடக்கு காசாவில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்றும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜியோரா ஐலாண்டால் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் உள்ள 400,000 குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றி அந்தப் பகுதியை இராணுவ வலயமாக மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை காசாவின் சுகாதாரப் பராமரிப்பு முறையை அழிப்பதற்காக இஸ்ரேல் ஒருங்கிணைந்த முயற்சியை எடுத்ததாக ஐக்கிய நாட்டு நிறுவன விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது. அவை போர்க்குற்றங்களாகவும் மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் கருதப்படும் என்று அது கூறியது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித நேயத்துக்கான முன்னாள் உயர் ஆணையாளர் தலைமையில் அறிக்கை ஒன்று தயாராகியுள்ளது. இஸ்ரேல் வேண்டுமென்றே மருத்துவ அதிகாரிகள், வளாகங்கள் மீது விடாமல் தாக்குதல் நடத்தியிருப்பதாய் அறிக்கை குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 





காசாவில் மற்றொரு பாடசாலையின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 28 பேர் பலி

October 11, 2024 8:02 am 

இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தும் அதேநேரம் காசாவில் இடம்பெறும் தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்துவரும் படை நடவடிக்கைக்கு மத்தியில் அங்குள்ள மக்கள் இஸ்ரேலிய முற்றுகைக்குள் சிக்கியுள்ளனர்.

தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (10) நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டு மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீன செம்பிறை சங்க தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் ருபைதா பாடசாலை மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தச் சங்கத்தின் அவசர மருத்துவக் குழு அங்கு விரைந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

காசா போர் வெடித்தது தொடக்கம் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகள் மற்றும் வசதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் பயன்படுத்தும் கட்டடங்களைத் தாக்குவதாக, இவ்வாறான தாக்குதல்களை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய வாரங்களாக இஸ்ரேல், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீது அதிக அவதானம் செலுத்தி தாக்குதல்களை தீவிரப்படுத்தியபோதும் காசாவில் அது ஹமாஸ் அமைப்புடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

குறிப்பாக ஜபலியா அகதி முகாமில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் முற்றுகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலியப் படை அங்கு நடத்திய தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அங்கு வீடுகளை இலக்கு வைத்து தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவ்வாறான தாக்குதல் ஒன்றில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படடுள்ளது. ஜபலியா வீதிகள் முற்றாக இடிபாடுகளாக மாறி இருப்பதோடு அடுக்கு மாடிகள் சின்னபின்னமாக்கப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல வெடிபொருட்களைக் கொண்டு 12 இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் மற்றும் படையினரை ஏற்றிய ஒரு டிரக் வட்டியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது.

ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 130 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒரு குழந்தை மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அல் பக்காரி குடும்ப வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் தாய், தந்தை மற்றும் ஏழு மாதக் குழுந்தை உட்பட அவர்களின் மூன்று குழந்தைகளே கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டு மேலும் 166 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கு காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,065 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 97,886 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐந்து அவசரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகரான தஹியாவில் இஸ்ரேல் கடந்த புதன் இரவிலும் இரு வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 2,100 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.   நன்றி தினகரன் 






காசாவில் ஐந்தில் ஒருவர் பலி

October 9, 2024 7:00 am 

காசாவின் தெற்கு நகரான ரபாவில் தண்ணீர் நிரப்பு நிலையம் ஒன்றில் தண்ணீரை பெறுவதற்கு காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று நேற்று (08) நடத்திய தாக்குதலில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காசா ஐரோப்பிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக மத்திய காசாவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் இரு பெண்கள் உட்பட குறைந்து 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புரைஜ் அகதி முகாம் மீது இடம்பெற்ற இரு தாக்குதல்களினால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் சடலங்கள் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காசா மீது இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல் கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் நீடிக்கும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,000ஐ நெருங்கியுள்ளது.

இதன்படி காசாவில் உள்ள ஐந்து பேரில் ஒருவர் கடந்த ஓர் ஆண்டு போரில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 16,756 சிறுவர்கள் மற்றும் 11,346 பெண்கள் அடங்குகின்றனர். இது பலியான மொத்த எண்ணிக்கையில் 69 வீதமாகும்.

இதேபோன்று காசாவில் இதுவரை 97,303 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் அது அங்குள்ள 23 பேரில்; ஒருவருக்கு சமமாகும். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனோர் தவிர 10,000க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காசாவில் கடந்த ஓர் ஆண்டில் 75,000 தொன் வெடிபொருட்கள் வீசப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இதனால் 42,000 தொன் இடிபாட்டுக் குப்பைகள் குவிந்திருப்பதோடு வெடிக்காத குண்டுகளும் அங்கே உள்ளன. இவைகளை அகற்ற பல்லாண்டுகள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் குறைந்தது 2.15 மில்லியன் மக்கள் அல்லது 96 வீதமானவர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தில் ஒரு பலஸ்தீனர் அல்லது 495,000 பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 






தென்மேற்கு லெபனானை நோக்கி தரைவழி நடவடிக்கையை விரிபடுத்தியது இஸ்ரேல்

ஈரான் வெளியுறவு அமைச்சர் சவூதி மற்றும் பிராந்தியத்திற்கு விரைவு

October 9, 2024 6:00 am 

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டாக பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் இஸ்ரேலிய இராணுவம் தனது தரைவழி நடவடிக்கையை தென்மேற்கு லெபனானுக்கு விரிவுபடுத்தி புதிய பகுதிகளில் ஊடுருவல்களை ஆரம்பித்துள்ளது. இராஜதந்திர தீர்வு ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியபோதும் பிராந்தியத்தில் மோதல் மேலும் உக்கிரம் அடைந்து வருகிறது.

ஓர் ஆண்டுக்கு முன்னர் பலஸ்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் காசாவில் ஓர் ஆண்டாக நீடிக்கும் போரை தூண்டியதோடு தற்போது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனும் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. இது இஸ்ரேல் மீது ஈரானின் நேரடித் தாக்குதலுக்குக் காரணமாகி இருப்பதோடு பிராந்தி அளவில் முழு அளவில் போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசிய நிலையில் ஈரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதல் திட்டம் குறித்து ஈரான் நேற்றும் (08) இஸ்ரேலை கடுமையாக எச்சரித்தது. இது மத்திய கிழக்கை போர் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கு எதிராகவும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்தார். அரக்சி நேற்று சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார். பிராந்திய பிரச்சினைகள் மற்றும் காசா, லெபனானில் இஸ்ரேலின் குற்றங்களை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர் பிராந்திய நாடுகளுக்கு பயணிப்பதாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் நடுநிலை வகிக்கும் வளைகுடா நாடுகளின் நிலைப்பட்டை தமக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் ஈரான் ஈடுபடுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

‘காசாவில் இடம்பெறும் குற்றங்களின் தொடர்ச்சியாக லெபனானின் சியோனிச அரசின் (இஸ்ரேல்) வெட்ககரமான குற்றங்களைத் தடுப்பதற்கு பிராந்தியத்தில் முன்னேற்றங்களை எட்டுவது தொடர்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்’ என்று அரச ஊடகத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ உரை ஒன்றில் அரக்சி குறிப்பிட்டார்.

‘இன்று ஆரம்பித்து நான் ரியாத் தொடக்கம் பிராந்தியத்தின் மற்ற தலைநகர்களில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து லெபனானில் இடம்பெறும் கொடிய தாக்குதல்களை நிறுத்துவதற்கு பிராந்திய நாடுகள் இடையே ஒரு கூட்டு அமைப்பை ஏற்படுத்த முயற்சிக்கவுள்ளேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல் அதன் தென் கிழக்கு எல்லையில் இருந்து தற்போது தென்மேற்கு எல்லைக்கு தரைவழி படை நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் மீது கடந்த திங்கள் இரவும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு மூத்த உறுப்பினரை கொன்றதாகக் கூறியது. அந்த அமைப்பின் வரவு செலவுத் திட்டம் மற்றும் ஏற்பாட்டியல் தலைவரான சுஹைல் ஹுஸைன் ஹுஸைனி கொல்லப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அது ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டணியான காசாவின் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளின் தொடர்ச்சியாகவே அமையும்.

இதில் பெய்ரூட் புறநகரில் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்ல கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு பெரிழப்பாக உள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ‘மட்டுப்படுத்தப்பட்ட, உள்ளூர் அளவிலான, இலக்கு வைக்கப்பட்ட’ தரைவழி நடவடிக்கை ஒன்றை தெற்கு லெபனானின் மேற்குப் பகுதியில் ஆரம்பித்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி படை நடவடிக்கையை கடந்த செப்டெம்பர் 30 இல் ஆரம்பித்தது. அது தொடக்கம் இஸ்ரேலியப் படை எல்லையின் கிழக்குப் பக்கமே அவதானம் செலுத்தி வந்தது. அதேபோன்று தெற்கு லெபனானில் போர் நடவடிக்கைகளில் துணை இராணுவப் படை ஒன்றை பயன்படுத்துவது இது முதல் முறை என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் துணைப்படை ஏற்கனவே லெபனானில் தரைவழி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மூன்று படைப் பிரிவுகளுடன் இணைந்துள்ளது.

எனினும் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலியப் படைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதோடு இதுவரை ஒன்பதுக்கும் அதிகமான இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வரும் ஹிஸ்புல்லா போராளிகள் நேற்று வடக்கு இஸ்ரேலில் உள்ள இரு பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியதாக தெரிவித்தனர்.

லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அந்நாட்டில் உள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் திட்டத்தின் தலைவர் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‘ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் ஆரம்பமான கடந்த ஓர் ஆண்டில் அமைதிகாக்கும்படியான அழைப்புகள் பொருட்படுத்தப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஓர் ஆண்டுக்குப் பின்னர் இன்று தினசரி பரஸ்பரத் தாக்குதல்கள் இடைவிடாத இராணுவ மோதலாக மாறி இருப்பதோடு இதன் மனிதாபிமானத் தாக்கம் பேரழிவு ஒன்றுக்கு குறையாததாக உள்ளது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 2000க்கும் அதிமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு லெபனானின் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 10 தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது தொடக்கம் லெபனானுக்குள் சுமார் 1.2 மில்லியன் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 179,500 பேர் அங்கீகரிக்கப்பட்ட இடம்பெயர்வு மையங்களில் அடைக்கலம் பெற்றிருப்பதோடு இவ்வாறான 977 மையங்களில் 773 இடங்கள் நிரம்பி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. தவிர 400,000க்கும் அதிகமானோர் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை யெமனில் இருந்து மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மத்திய இஸ்ரேலின் ஜப்பா பகுதியில் இராணுவ இலக்குகள் மீது இரு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தரையில் இருந்து தரையை தாக்கும் இந்த ஏவுகணையை இஸ்ரேலிய விமானப்படை இடைமறித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியது.

நன்றி தினகரன் 






இஸ்ரேலுக்கு அமெரிக்கா 17.9 பில். டொலர் உதவி

October 8, 2024 10:00 am 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா குறைந்தது 17.9 பில்லியன் டொலர் ஆயுத உதவிகளை வழங்கி இருப்பதாக பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவுகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் அமைப்பை மீள் நிரப்பல் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், அதேபோன்று துப்பாக்கிகள் மற்றும் போர் விமான எரிபொருளுக்கான ரொக்கப்பணத்திற்கான 4 பில்லியன் டொலர் செலவும் அடங்குகிறது என்று காசா போரின் ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 4.86 பில்லியன் டொலர் நிதி அளிக்கப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது.   நன்றி தினகரன் 






No comments: