படிநிலையில்தான் பாகுபாடு என்பதறிவீர்!


 - சங்கர சுப்பிரமணியன்





வள்ளுவனைப் போலொரு பேராசானை
இவ்வையகம் கண்டதுண்டோ சொல்வீர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான்
பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்றான்

சிறப்பொவ்வா என்று நமக்கு உரைத்தவன்
செய்தொழிலின் படிநிலையில் கண்டான்

வேற்றுமை வித்தை படிநிலையில் வைத்து
சிந்திக்க நமக்கு வாய்ப்பும் தந்தான்

வெள்ளை நிறத்தொரு பூனை சாம்பல் நிறத்தொரு
பூனையென பாரதியும் சொன்னான்

வேற்றுமையை நிறத்தில்கண்ட பாரதியும்
உயர்வு தாழ்வென கண்டானில்லை

கல்வி என்றால் எல்லோர்க்கும் என்றும் ஒன்றேதான்
தாயின் கருவறை சிறப்பைப்போல்

இளங்கலை கற்பிக்கும் ஆசான் முதுகலை
கற்பிக்கும் ஆசானென
இருவரும் படிநிலையில் சிறப்பொவ்வார்

அடிப்படை சிகிச்சையும் அறுவை செய்யும் சிகிச்சையும்
மருத்துவத்தால் ஒன்றென்றாலும்

அடிப்படை மருத்துவரும் அறுவை சிகிச்சை செய்பவரும்
படிநிலையால் சிறப்பொவ்வாரன்றோ

தண்ணீரில் மூழ்குபவனை காப்பதுவும் வீரம்
தாய்நாட்டை காப்பதுவும் வீரமென்றாலும்

மனிதனாய் காட்டும் வீரமும் மாவீரனாய் கட்டும்
வீரமும் சிறப்பொக்குமோ சிந்திப்பீர்

இங்ஙனம் உயர்சிந்தனையை புறம் தள்ளி இழிசிந்தனை செய்வதுதான் சிறப்போ

கல்லைச் செதுக்குபவனும் இங்கு ஒன்றே
கல்லை துதிக்க சொல்பவனும் ஒன்றே

ஆண்டியாய் இருப்பவனும் ஒன்றுதான் இங்கு
அரசாட்சி செய்பவனும் ஒன்றுதான்

தீமை செய்தால்தான் என்றும் தீயவன் உலகில்
நன்மை செய்தாலே நல்லவன்

ஆற்றிடும் செயலால் மட்டுமே வேற்றுமை
ஆரறிவு மனிதருள் ஏது வேற்றுமை

வள்ளுவனை நன்றாய் புரிந்தார் இங்கில்லை
வேற்றுமையை சரியாய் உணர்ந்தாரில்லை

செய்தொழிலால் வரும் வேற்றுமை காட்டி
சிந்தை திரித்தே உயர்வு தாழ்வென்பார்

துதிப்பவனை உயர்வென்றும் துப்புறவு செய்வானை
இழிவென்றும் துப்புகெட்டுமே புலம்புவார்

வேப்பமர உச்சியில் நின்று பேயொன்ற ஆடுதென்று

விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க

அதுபோல செய்தொழில் வேற்றுமை சொல்லி
உயர்வென்றும் தாழ்வென்றும் சொல்வாங்க

உந்தன் வீரத்தை பிஞ்சிலேயே கிள்ளி
வைப்பாங்க

உங்கள் அறிவினையும் முளையிலேயே கிள்ளிடுவாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தகளை

வேடிக்கையாக கூட நம்பிவிடாதே நீ வீட்டுக்குள்ளே
பயந்து கிடந்தே வெம்பிவிடாதே

என்ற பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிச் சென்றதைப்போல்

வஞ்சகரின் வார்த்தைகளை சிந்தையற்ற
எண்ணங்களை
கொஞ்சமும் உண்மையென நம்பிவிடாதீர்

செய்தொழிலால் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
இல்லை என்பதறிவீர்
படிநிலையால் பாகுபாடு என்றும் உணர்வீர்


No comments: