ஆசிரியனாகவும் இலக்கியவாதியாகவும் இயங்கிக்கொண்டு, தமிழர் அரசியலிலும் காலை ஊன்றியிருந்த எனக்கு இலங்கையின் பல பாகங்களிலிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

முருக வழிபாடு தமிழகத்திலிருந்து இலங்கை – சிங்கப்பூர் – மலேசியா மற்றும் தென்கிழக்காசியா எங்கும் பரந்து, ஈழத்தமிழர்களின் அந்நியப்புலப்பெயர்வையடுத்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மற்றும் அய்ரோப்பிய நாடெங்கும் படர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள்.
தென்னிலங்கையில் மாணிக்க கங்கைக் கரையோரம் அமைந்துள்ள கதிர்காமம் தேவஸ்தானத்தின் ஐதீகக்கதைகள் பற்றியும் அறிவீர்கள்.

தங்களுக்கென ஒரு பண்பாட்டுக்கோலத்தை பாரம்பரியமாக பின்பற்றுவார்கள். இந்த விளிம்பு நிலை மக்கள் பற்றிய அபிப்பிராயம் இலங்கை, இந்தியாவில் வேறுபட்டிருக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அவரது சகநடிகை ஜெயலலிதாவும் ஒளிவிளக்கு என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் குறவர்களாகத்தோன்றி,
“ நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்…. “ என்று பாடி ஆடி நடிப்பார்கள்.
இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவுவதற்கு முன்பே இலங்கையில் நான் அந்த குறமக்களை நேருக்கு நேர் கிழக்கிலங்கையில் மண்டூரில் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.
சென்னையில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் புகாரில் ஒரு நாள் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றதற்கான தங்கப்பதக்கத்தை எனக்குச் சூட்டியவரும் மக்கள் திலகம்தான் என்பதை முன்னைய சொல்லாத கதைகள் பதிவொன்றில் சொல்லியிருக்கின்றேன்.
அன்று அவர் அறிஞர் அண்ணாவின் தி. மு. கழகத்தில் பொருளாளராக இருந்து கொண்டு திரையில் தோன்றி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.
ஏழைப்பங்காளனாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் தொண்டனாகவும் தனது சினிமாப் பாத்திரங்களை வடிவமைத்துக்கொண்டு, மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். விவசாயியாக, தொழிலாளியாக, தீய சக்திகளையும் நல்வழிப்படுத்தும் நாயகனாக, பல்வேறு பாத்திரங்களில் தோன்றிய அவர், அடிநிலையில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களான குறவர்களின் நேர்மையையும் வாழ்வுக்கோலத்தையும் சித்திரிக்கும் காட்சியில் அவர்களாகவே வந்து தோன்றி அம்மக்களின் உள்ளங்களையும் கவர்ந்தார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, எமது இலங்கையிலும் வெற்றிகரமாக ஓடிய அவரது ஒளிவிளக்கு படத்தை பார்த்திருக்கும் குறவர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது என்றும் அறிந்துள்ளேன்.
தங்கள் இனத்தையும் மதித்து ஒரு தலைவன் ஆடிப்பாடியிருக்கின்றானே ! என்ற உணர்வு அம்மக்களிடம் வெளிப்பட்டது. அவரது பெயரையும் உருவத்தையும் தமது உடலில் அம்மக்கள் பச்சை குத்திக்கொண்டதையும் அறிவீர்கள்.
அதனைப் பார்த்துத்தானோ என்னவோ, மக்கள்திலகம் தி.மு.கழகத்தில், கலைஞர் கருணாநிதியுடன் முரண்பட்டு , அக்கட்சியின் வரவு – செலவுக்கணக்கு தொடர்பாக கேள்விகேட்டார்.

மக்கள் மனங்களை கொள்ளைகொண்ட அந்தமக்கள் திலகம் இறுதியில் என்ன செய்தார்…? என்பது உங்களுக்குத் தெரியும்தானே..?
தான் பெருமதிப்பு வைத்திருந்த அறிஞர் அண்ணாவின் பெயரையே முன்னால் வைத்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி, தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தார்.
தனது கட்சியில் இணையும் தொண்டர்கள் அனைவரும் கட்சியின் சின்னமான இரட்டை இலையின் உருவத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உடலில் பச்சை குத்திக்கொண்டால் அதனை அழிக்கமுடியாது. அவரது கட்சித் தொண்டர்கள் அதனால், பின்னர் மனம்மாறி கட்சி தாவி ஓடமாட்டார்கள் என்பதுதான் மக்கள் திலகத்தின் மனக்கணக்கு.
பாருங்கள், குறமக்களின் பண்பாட்டுக்கோலத்தையும் தனது அரசியல் பாதையில் தேர்ந்தெடுத்து, தொடர்ந்தும் முதல்வராக அரியாசனத்தில் அமர்ந்து மக்கள் மனதில் நிரந்தரமாகி மெரீனா கடற்கரையில் அடக்கமாகிவிட்டார்.
முருகனின் காதல் துணைதான் வள்ளி என்றும், அவள் வயல்வெளியில் விளைந்த கதிர்களில் மலரும் நெல்மணிகளை உண்பதற்கு வரும் குருவிகளை கலைப்பதற்காய், பரண் அமைத்து ஆலோலம் பாட்டுப் பாடியதாகவும் கதைகள் இருக்கின்றன. அவளை அடைவதற்காக முருகன் பட்ட கஷ்டங்களை இக்கால காதலன்கள் கூட அனுபவித்திருக்கமாட்டார்கள்.
இக்கால காதலன் முகநூலில்தான் காதலியை தேடுகிறான். பாதியில் ஏமாற்றி விட்டும் போய்விடுவான். ஆனால், புராணத்தில் வந்த ஈசனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த பொறிகளினால் உருவான முருகன் தனது காதலியைத் தேடியது வனத்தில்தான் !
தன்னை ஒரு வேடனாகவும் முதியவனாகவும் மாற்றி வேடம்போட்டு நடிக்கவும் வேண்டியிருந்தது. தனது அண்ணன் யானைமுகனின் துணையையும் அவர் நாடவேண்டியிருந்தது. அவரும் தனக்கு தனது தாயாரைப்போன்ற குணவதியான பெண்தான் மனையாளாக வரவேண்டும் என்று காத்திருந்தார். வேப்பமரம், அரச மரம், ஆலமரம் காணும் இடங்கள் தோறும் எழுந்தருளி, வீதி ஓரங்கள் தோறும் காத்திருந்து காத்திருந்து தனது தாயைப்போன்ற பெண்ணை அவர் இன்னமும்தான் தேடுகிறார்.
ஆனால், அவர், தனது தம்பிக்காக யானைவேடமும் தரித்து வள்ளியை அடைவதற்கு துணைநின்றார் என்ற கதைகளை எமது புராணங்களில் காண்கின்றோம்.
இலங்கையில் கிழக்கு மாகாணம் முருகவழிபாட்டிற்கு மாத்திரமன்றி கண்ணகி வழிபாட்டிற்கும் பேர்பேற்ற பிரதேசம். இதுபற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வௌிவந்துள்ளன.
மீன்பாடும் தேனாட்டில் ( மட்டக்களப்பில் ) ஒரு தமிழ் விழா 1972 ஆம் ஆண்டு நடந்தது. எனது நண்பன் எஸ்.பொன்னுத்துரை என்னையும் அதற்கு அழைத்திருந்தார். அறிஞர் எஃப். எக். ஸி. நடராஜாவும் சம்பந்தப்பட்டிருந்த விழா.
இதுபற்றி எஸ்.பொ. தனது சுயசரிதையான வரலாற்றில் வாழ்தல் நூலிலும் விபரமாக எழுதியுள்ளார். அந்த விழாவில் மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளையவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கிலும் நான் பங்கு பற்றினேன்.
“ சீருஞ் சிறப்புந் திணையாய்ச் செந்
தமிழே தேனாய் மலிந் தோங்கிக்
காருங் களமும் கருத் தொன்றிக்
கருணை மழையில் உளம்பூப்ப
ஏரின் வழியில் எழுஞ் செல்வ
எழிலாளர் கதிர்போல் கவியார்ப்பக்
கூர்வேற் குமரன் அடிபோற்றிக்
குளிர்பாப் புனைய அடியெடுத்தேன்.. “
எனத்தொடங்கும் கவியரங்குப்பாடலை அன்று தமிழ் விழாவில் பாடினேன்.
இக்கவிதையில் வரும் கூர்வேற்குமரன் வரியை கூர்ந்து அவதானித்த, அன்றைய கவியரங்கின் தலைவர் மண்டூர் மு. சேமசுந்தரம்பிள்ளை என்னை தமது மண்டூருக்கு அழைத்துச்சென்றார்.
அவ்வூரைப்பற்றியும் அதன் அருமை பெருமைகளையும் அவர் சொன்னார். எவருக்கும் தாய்நாட்டின் மீது பாசம் இருப்பதுபோன்று பிறந்த ஊர்ப்பாசமும் இருக்கும்தானே.
நீங்கள் முன்பின்தெரியாத உங்களது நண்பர்களின் – உறவினர்களின் பூர்வீக ஊருக்குச்சென்றால், அவர்கள் தமது ஊரின்பெருமைகளைத்தான் முதலில் அவிழ்ப்பார்கள். இது வழக்கம். அவ்வாறே அந்தக்கவிஞரும் தனது மண்டூர் பற்றி பல செய்திகளைச்சொன்னார்.
அது பற்றி முதலில் பார்ப்போம்.
மட்டக்களப்பு நகரிலிருந்து தென்பகுதி நோக்கிச்சென்றால், சுமார் நாற்பது மைல்களுக்கு அப்பால் வருகிறது இக்கிராமம். சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் திணைகளில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களைக்கொண்டுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தில் மண்டு மரங்கள் செறிந்திருந்தமையால் அவ்வூருக்கு அந்தக்காரணப்பெயர் வந்திருக்கலாம். இங்குதான் வரலாற்றுப்பெருமை மிக்க மண்டூர் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
கதிர்காமக் கந்தன் தென்னிலங்கையில் ! மண்டூர்க்கந்தன் கிழக்கிலங்கையில் ! இந்த இரண்டு ஆலயங்களும் கந்தனின் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்றும் ஐதீகம் சொல்கின்றது. இது பற்றி மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலும் விபரித்துள்ளது.
அத்துடன், தமிழ் கலைக்களஞ்சியம் என்ன சொல்லியிருக்கிறது…? என்பதைப் பாருங்கள்:
“ இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன.
கதிர்காமத்தில் திருவிழாவின் போது புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளி அம்பாள் ஆலய முன்றலைச் சென்றடையும். பின்னர் யானையின் மீதுள்ள பேழையுள் இருக்கும் ஒரு பொருளை பூசகர் (கப்புறாளை) வள்ளியம்பாள் ஆலயத்திலும் மறைவாக எடுத்துச் செல்வார். பூசை முடிந்ததும் மீண்டும் மறைவாக கொண்டு வந்து பேழையுள் வைத்ததும் ஊர்வலம் தொடரும்.
தீர்த்தத்தின் போதும் இப்பொருளே தீர்த்தமாட மாணிக்க கங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதே நடைமுறை மண்டூரிலும் பின்பற்றப் படுகின்றது. இங்கு யானைக்குப் பதிலாக புட்பக விமானம் எனப்படும் தேரினுள் வைத்தே அப்பொருள் கொண்டு செல்லப்படுகின்றது. மண்டூர் முருகன் ஆலயத்தில் இருந்து புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளியம்பாள் ஆலய முன்றலை அடைந்ததும் புட்பக விமானம் அங்குள்ள மேடையில் வைக்கப்படும். கப்புகனார் (பூசகர்) அதனுள் இருக்கும் பொருளை மறைவாக வள்ளியம்பாள் ஆலயத்தினுள் எடுத்துச் சென்று பூசை செய்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து வைப்பார்.
தீர்த்தத்தின் போது புட்பக விமானம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள சபா மண்டபத்தை சென்றடையும். கப்புகனார் அதனுள் இருக்கும் பொருளை மட்டக்களப்பு வாவியில் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.
அன்று 1972 ஆம் ஆண்டு மண்டூர்க் கவிஞருடன் சென்று அங்கிருக்கும் முருகன் ஆலயத்தைப்பார்த்ததும் எனக்கு உடனடியாகவே கதிர்காமம்தான் நினைவுக்கு வந்தது. அன்றைய தினம் அந்தப்பிரதேசத்தில் வாழும் குறவர் இன மக்களின் பக்திப்பரவசமான ஆட்டங்களை கண்டு மெய்சிலிர்த்தேன்.
அதே ஆட்டங்கள் கதிர்காமப்பிரதேசத்தில் வாழும் வேடுவர் குலத்தினர் மற்றும் குறவர் இனத்தவராலும் ஆடப்படுகின்றன.
இவ்வாறு தெற்கும் – கிழக்கும் ஒரு பண்டைய இனமக்களின் கலாசார பாரம்பரியத்துடன் ஒற்றுமையாகியிருக்கும் விந்தையை சொல்வதற்கு வார்த்தைகள் வேண்டும்.
அழகன் முருகன் வள்ளியைத்தேடி கானகம் வந்த காதையை கந்தபுராணத்தில் படித்திருப்பீர்கள்.
கவிஞன் அம்பியின் குறிப்பிட்ட கண்புதைத்தது ஏன்..? என்ற கவியரங்குப்பாடலை நீங்கள் அம்பி கவிதைகளில் 155 ஆம் பக்கத்திலிருந்து 160 ஆம் பக்கம் வரையில் பாரக்கலாம்.
அதில் இடம்பெறும் வரிகளைப்பாருங்கள் நான் சொல்லவந்தது புரியும்.
வா என்றாள் நான் பின்சென்றேன்
வளியில் எழுந்து முன்சென்றாள்
பா என்றால் நான் பா சொன்னேன்
பழகுந் தமிழில் ஆ என்றாள்
ஆ என்றாயே ஏன் என்றேன்
அதற்கோர் பார்வை… அழகே கை
தா என்றேன் நான்… ஐயையோ
தரையில் கண்ணைப் புதைத்தாள், ஏன்…?
( தொடரும் )
1 comment:
உங்கள் ஆராய்ச்சி ஒன்றுக்கும் உதவாது... நீங்கள் இங்கு சொல்லும் ஊசி, பாசி விற்பனை செய்யும் நாடோடி குருவிக்காரர்கள் சமூகங்களை குறிஞ்சி நில குறவர்களாக காட்ட முயல்வது ஏனோ...?
குறவர்கள் வேறு, ஊசி, பாசி விற்கும் நாடோடி வாக்ரிவாலா மற்றும் குருவிக்காரர்கள் வேறு...
Post a Comment