ஈழத்து எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இம்மாதம் 07 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து விடைபெற்றுவிட்டார்.


வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், தமிழ்ப்பிரியாவின் எழுத்துக்கள் அச்சில் வரும்போது அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். எம்முடன் பணியாற்றிய மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த திரு. கனகசிங்கம் ( தற்போது – அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவர் ) பொன்னரி என்ற புனைபெயரில் ஓவியங்களும் வரைந்துகொண்டிருந்தார்.
கொழும்பிலிருந்து வெளியான சுதந்திரன் பத்திரிகையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் கனகசிங்கம் இயங்கியபோது, தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் சுடரில் வெளிவந்து பார்த்திருக்கின்றேன்.
தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலங்கை வானொலிதான் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது.
அதில் ஒலிபரப்பான இரண்டு சேவைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. வர்த்தக சேவையும் தேசிய சேவையும் கடல் கடந்து தமிழ்நாட்டு நேயர்களையும் பெரிதும் கவர்ந்தது.

அந்த நிகழ்ச்சிகள் பல பெண்நேயர்களை பேனா நண்பிகளாகவும் மாற்றியிருப்பதுடன், ஆரோக்கியமான தொடர்பாடல்களையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியது. மின்னஞ்சல் - முகநூல் – வாட்ஸ் அப் இல்லாதிருந்த அக்காலப்பகுதியிலேயே அந்த பெண் நேயர்களுக்கிடையில் அந்த இசையும் கதையும் நெருக்கமான உறவினை உறுதியாக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
எனினும், வளர்ந்த மூத்த எழுத்தாளர்கள், முற்போக்கு – நற்போக்கு - சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இஸங்களைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்த இசையும் கதையும் நிகழ்ச்சியில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
காரணம், அதற்கு எழுதியவர்கள் ஒரு கதையை அனுப்புவார்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர் கதையின் சம்பவங்களுக்குப் பொருத்தமான ஒரு திரை இசைப்பாடலை அதற்கு எற்றவாறு பொருத்தி ஒலிப்பதிவுசெய்து வானலைகளில் பரவ விடுவார். அதனக்கேட்கும் அபிமான நேயர்கள் தங்கள் கருத்தை கடிதமாக எழுதி நிலையத்திற்கு அனுப்புவார்கள்.

நேயர் கடிதங்களை எழுதி தபாலில் அனுப்பிவிட்டு, அது எப்போது ஒலிபரப்பாகும் என்று வானொலிப்பெட்டிக்கு அருகிலிருந்து காத்திருப்பார்கள்.
எமது குடும்ப உறவுகளிடத்திலும் சொந்த பந்தங்களின் இல்லங்களிலும் இந்தக்காட்சி அன்றாடம் அரங்கேறும். அதற்காகவே வீட்டுப்பணிகளை முடித்துவிட்டு, வானொலியே கதியென்று அமர்ந்துவிடுவார்கள்.
இவ்வாறு ஒரு கால கட்டத்தில் நேயர்களை கட்டிப்போட்டவர்களில் ஒருவர்தான் தமிழ்ப்பிரியா. இந்த நினைவுதான் அவரது மரணச்செய்தி குறுந்தகவலாக என்னை வந்தடைந்ததும் மனதில் நிழலாடியது.
அக்காலத்தில் வானொலிகளில் எழுதிய பெண்கள் பின்னாளில், குடும்ப சிநேகிதிகளாகவும் மாறியதுடன், தொடர்ந்தும் எழுதிவந்தார்கள். இதழ்கள், பத்திரிகைகளில் எழுதியவாறு இலங்கை வானொலிக்கும் கதைகள், நாடகங்கள் எழுதினார்கள். அதனால் இவர்கள் தமது தாயகத்தில் மட்டுமன்றி தமிழகத்திலும் அபிமான வாசகர்களையும் நேயர்களையும் பெற்றனர்.
முத்தையா புஷ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த தமிழ்ப்பிரியா, 1970 இற்குப்பின்னர் இலக்கியப்பிரவேசம் செய்தவர். வட இலங்கை சுன்னாத்தில் ஏழாலையில் பிறந்திருக்கும் அவர், யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் கணக்காளர் நிறுவனத்தில் பணியிலிருந்தவர் என்பதற்கு அப்பால், அவரது இலக்கியப்பங்களிப்புகள் பற்றித்தான் அறிந்துவைத்திருந்தேன்.
அவர் சுடரில் எழுதிய காலப்பகுதியில் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துப்பேசினோமா? என்பது நினைவில் இல்லை. நேற்றைய தினம் அவர் மறைந்துவிட்ட செய்தியை எனக்குத் தெரிவித்த, அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் வதியும் இலக்கிய சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன்.
தாமரைச்செல்வி, கடந்த சில தினங்களுக்கு முன்னரும் தமிழ்ப்பிரியாவுடன் பேசியிருக்கிறார். சமகால வைரஸ் தொற்று தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸில் தனது இலக்கிய சகோதரியின் நிலையை அறிய விரும்பியிருக்கிறார்.
அடிக்கடி நெஞ்சு நோவு வருவதாக அவர் சொன்னதும், அவரை நன்கு தெரிந்தவரும் மருத்துவருமான தாமரைச்செல்வியின் புதல்வி, “ அன்ரி, தாமதிக்காமல் மருத்துவரை நாடுங்கள் “ என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்ப்பிரியா மருத்துவமனை சென்றிருக்கிறார். தலையில் உட்புறமாக இரத்தகசிவு வந்திருக்கிறது. அதனையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்று, பின்னர் மறைந்துவிட்டார்.
இந்த துயரத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் தாமரைச்செல்வி, இதற்கு முன்னரும் அருண்.விஜயராணியின் மறைவின்போதும் தாங்கொனாத்துயரத்தில் மூழ்கியிருந்தவர் என்பதை நன்கறிவேன்.
ஒரு கால கட்டத்தில் இலக்கிய உலகில் இணைந்து பயணித்தவர்களின் பிரிவின் துயரத்தை கடந்து செல்வதற்கான தூரம் நீண்டது. காலம்தான் மாற்றவேண்டும்.
தமிழ்ப்பிரியா, இலங்கை பத்திரிகைகள் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழநாடு மற்றும் இதழ்கள் மல்லிகை , சிரித்திரன் சுடர், அமிர்தகங்கை முதலானவற்றிலும் எழுதியிருப்பவர்.
கலைஞர் கருணா நிதியின் இலக்கியப்பாசறையிலிருந்து வெளியான குங்குமம் இதழின் அக்கரைச்சிறப்பு மலரையும் தொகுத்திருப்பவர் தமிழ்ப்பிரியா. அத்துடன் மணியனின் இதயம் பேசுகிறது இதழிலும் எழுதியிருக்கிறார்.
கொழும்பு சுடர் இதழில் சில கலைஞர்களையும் பேட்டி கண்டு எழுதியவர். பிரான்ஸ் சென்ற பின்னரும் தனது உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.
அவர் புகலிடத்தில் வழங்கிய நேர்காணல் காணொளியின் ஊடாகவும் தமிழ்ப்பிரியாவின் கலை, இலக்கிய வாழ்க்கையை மேலும் தெரிந்துகொள்ளலாம்.
இலக்கியச் சகோதரி தமிழ்ப்பிரியாவின் திடீர் மறைவினால் வேதனையில் மூழ்கியிருக்கும் அவரது கணவர் மற்றும் உறவுகள், அவரது இலக்கிய நேசர்கள் அனைவரதும் துயரத்தில் நாமும் பங்கேற்கின்றோம்.
No comments:
Post a Comment