மஞ்சுளாவின் அறையிலிருந்து ஒலித்த கர்ணகடூரமான வார்த்தைகள் வீட்டின் கூடத்தில் ஷோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ஜீவிகாவின் துயிலையும் கலைத்துவிட்டது. அதுவரையில் அவள் இனிமையான கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.
“ அபிதா… அது என்ன சத்தம்..? மஞ்சுளா இந்தக் காலைவேளையில் யாரைத் திட்டிக்கொண்டிருக்கிறாள். என்ன பேசினாலும் யாரோடு பேசினாலும், நிதானமாக பேசச்சொல்லுங்கள். காலங்காத்தாலை நல்ல வார்த்தைகள்தான் அவளின்ட வாயில் இருந்து வருது. “

மஞ்சுளா, கைத்தொலைபேசியை கட்டிலில் வீசி எறிந்துவிட்டு, அறையினுள்ளே பிரவேசித்த அபிதாவிடத்தில் பாய்ந்து விழுமாப்போல் கர்ஜித்தாள்.
“ எல்லாம் உங்களால் வந்த வினை. நீங்கள் உங்கட வேலையை மாத்திரம் இங்கே பார்த்துக்கொண்டிருந்தால் போதும். எதற்காக அந்த தேவடியாள் போன் எடுத்தபோது பேசினீங்க… நீங்கள் பேசியபடியால்தான் நான் இங்கேதான் இருக்கிறேன் என்பது அந்தத் தோறைக்கு உறுதியாகத் தெரிந்திருக்கிறது. அந்த ரிங்டோன் வந்தது எனது போனுக்கு. நீங்கள் ஏன் வந்து எடுத்துப்பேசினீங்க…. சொல்லுங்க…? “

மஞ்சுளா வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு நிலைக்கண்ணாடி முன்னால் நின்று தலையை கோதி சரிசெய்து வண்ணாத்திப்பூச்சி வடிவத்திலிருந்த கிளிப்பை பொருத்தினாள்.
தனக்குப்பின்னால் தலைகுனிந்தவாறு நிற்கும் அபிதாவைப்பார்த்ததும் மஞ்சுளாவின் கோபம் சற்று தணிந்தது.
“ வெறி சொறி அபிதா “ என்று மஞ்சுளா சொன்னபோது, அபிதாவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு துளி விழுந்ததை அவதானித்தாள்.
கண்ணாடியில் நிலைகுத்தியிருந்த பார்வையை சடாரென விலக்கி, அபிதாவை எட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டு கதறி அழத்தொடங்கினாள்.
“ வெறி சொறி அபிதா. என்னை மன்னியுங்க… அந்தப்பொம்பிளை மீது வந்த கோபத்தை உங்களிடத்திலும் காண்பித்துவிட்டேன். சொறி. “
அபிதா, மஞ்சுளாவின் முதுகை வருடியவாறு, “ நீங்கள் என்னை ஏசியதற்காக வருந்தி அழவில்லை. உங்களது கையறு நிலையை பார்த்துத்தான் வேதனைப்பட்டேன். வாங்க… முகத்தை கழுவிட்டு வாங்க… புட்டு அவித்துக்கொண்டிருந்தேன். பாதியில் விட்டுப்போட்டு உங்கட சத்தம் கேட்டுத்தான் ஓடிவந்தேன். என்ன இருந்தாலும் அது உங்கட அம்மா. உங்களை வயிற்றில் சுமந்து பெற்றவள். அந்த சுமை தரும் சுகத்தையும் வேதனையையும் நானும் அனுபவித்த ஒரு தாய்தான். அந்தப்பாக்கியத்தையும் இழந்துவிட்டுத்தான் தவிக்கிறேன். என் குழந்தையை உங்கட முகத்தில் பார்க்கிறேன். நீங்கள் எனக்கு எது சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், உங்கள் அம்மா, என்னதான் பெரிய தவறு செய்திருந்தாலும், அவதான் உங்களின் தாய். அந்த இடத்தை எவராலும் பெற்றுவிட முடியாது. அநாவசிய வார்த்தைகளை கொட்டாதீங்க. அந்த லண்டன் பெரியப்பாவும் உங்கட சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தவர். ஜீவிகா சொன்னதால்தான் நான் இங்கே வந்தேன். உங்கட சத்தம் அப்படி இருந்தது. பாருங்களேன்… இத்தனை அமர்க்களத்திலும் எதுவும் கேளாத மாதிரி பக்கத்து அறையில் சுபாஷினி தூங்குகிறாள். உடனே ஆஸ்பத்திரிக்கு அவளை அழைத்துச்சென்று அவவின்ட காதுகளை கழுவத்தான் வேண்டும் . “ என்று சொன்னதும், மஞ்சுளாவின் முகத்தில் புன்னகை பூத்தது.
அவளது கன்னத்தில் விழும் குழியை செல்லமாகத்தட்டிவிட்டு, அபிதா கண்ணைத்துடைத்துக்கொண்டு அகன்று சமையலறைக்கு வந்தாள்.
“ விடுங்க ஜீவிகா. நான் ரீ போட்டுத்தாரன் “
“ இல்லை. வேண்டாம். என்னவாம் அந்த வசந்தமாளிகை வாணிஶ்ரீ..? “
அபிதா சுட்டுவிரலினால் தனது வாயைப்பொத்தி, “ பிறகு சொல்றன். “ என்றவாறு கண்சாடை செய்தாள். அது தனக்கும் சொல்லப்படும் சாடைதான் என்பதை புரிந்துகொண்ட சண்முகநாதன் முதல் நாள் பத்திரிகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்குமா..? நடக்காதா..? பட்டிமன்ற அக்கப்போர் செய்திகளில் மூழ்கினார்.
அபிதாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது. முருங்கைக்காய் குழம்பு அடுப்பில் கொத்தித்துக்கொண்டிருந்தது.
“ யாரென்று பாருங்க அபிதா… உங்களுக்குத்தான் கோல். “ தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஜீவிகா சொன்னதும், “ கறியை பாருங்கம்மா “ எனச்சொல்லிவிட்டு, தனது கைத்தொலைபேசியை எடுத்தாள். மறுமுனையில் கற்பகம் ரீச்சர்.
“ வணக்கம் ரீச்சர். எப்படி இருக்கிறீங்கள். “
“ ஒரே போரிங் அபிதா, இன்றைக்கு சித்திரா பௌர்ணமி. நான் விரதம். கோயிலுக்கு புறப்படுறன். வந்து திரும்பும் வழியில் உங்களையெல்லாம் பார்க்க வரலாமா..? அந்த ஆள் இருக்குதா..?” கற்பகம் தயக்கத்துடன் கேட்டாள்.
“ வாங்கோ ரீச்சர். வாங்கோ, இன்று மதியம் வரையும் ஊரடங்கு தளர்த்தியிருப்பாங்க. உங்களுக்கும் பிடித்தமான முருங்கைக்காய் குழம்பும் செய்து, புட்டும் அவித்து வைத்திருக்கிறேன். வந்தால் சாப்பிடலாம். அவர் இருந்தால் என்ன…. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். பயப்படவேண்டாம் “ என்ற அபிதா, இந்த வார்த்தையை மாத்திரம் மனதிற்குள் விழுங்கினாள்.
அது - “ உங்கட கற்புக்கு பங்கம் ஏற்பாடாது “
பாம்புக் காதுகொண்டிருந்த சண்முகநாதன், அபிதா யாருடன் பேசினாள் என்பதை புரிந்துகொண்டு, பத்திரிகையில் கண் பதித்திருந்தார். கண்கள் பத்திரிகையில் நிலை குத்தியிருந்தாலும், காதுகள் அந்த வீட்டின் ஒலிகளை கூர்மையாக கேட்டுக்கொண்டே இருந்தன.
கற்பகம் வருவாளா..? வரமாட்டாளா..? வந்துவிட்டால் எப்படி நடந்துகொள்ளவேண்டும்…? என்ன பேசவேண்டும்…? சண்முகநாதனின் பார்வை பத்திரிகையிலிருந்தாலும் மனதில் மென்மையான பதற்றம் தொற்றியது.
ஜீவிகாவுக்கு கண்சாடை செய்து, வீட்டின் விறாந்தாவுக்கு அழைத்தார். அவளும் ஒரு கையில் தேநீர் கப்பும் மறுகையில் கைத்தொலைபேசியுமாக பெரியப்பாவை பின்தொடர்ந்து விறாந்தாவுக்கு வந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்தனர்.
“ என்ன ஜீவிகா… ஏன் அவள் மஞ்சுளா அப்படி சத்தம்போட்டு ஊரைக்கூப்பிட்டாள்..? என்ன பிரச்சினை. அவள் இந்த வீட்டில் வாடகைக்குத்தான் இருக்கிறன் என்பதை மறந்தவளாட்டம் அப்படி என்ன..? உரத்து சத்தம் போடுறது… ? . நான் இப்ப வந்தனான் நாளைக்கு ஒரு நாள் போய்விடுவேன். நீ இங்கே சேர்த்து வைத்திருக்கிற பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறாளவை. அபிதா, நீ அழைத்த வேலைக்காரி. அது என்ன… அந்த அப்பாவிப்பெண்ணை இவள் மஞ்சுளா அப்படித் திட்டுவது..? நீதானே புட்டு அவித்துக்கொண்டிருந்த அவளை அந்த அறைக்கு அனுப்பி, என்ன சத்தம் …? என்று கேட்கச்சொன்னாய். அவள் அபிதா பாவம். அவள் இந்த வீட்டில் உங்களுக்கெல்லாம் ஒரு மத்தளமாகியிருக்கிறாள். நீதான், அவள் மஞ்சுளாவை தனியாக அழைத்து வீட்டில் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லவேண்டும். சரியா… “
“ பெரியப்பா. சும்மா இருங்க. அவளுக்கு தாயுடன் நீடிக்கும் கோபம் நியாயமானது. அந்த மனுஷி இவளைத்தேடிக்கொண்டிருக்குது. “ என்றாள் ஜீவிகா.
“ என்ன பிரச்சினை..? “ மஞ்சுளா பற்றிய கதை ஏதும் தெரியாமல் விபரம் கேட்டறிய முயன்றார் சண்முகநாதன்.
ஜீவிகா அந்தக்கதையை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.
“ உனக்கு அந்த மனுஷியை தெரியுமா..? “
“ தெரியாது. ஆனால், ஒரு பக்கக்கதை மாத்திரம் இவள் மஞ்சுளா சொல்லித்தான் தெரியும். மற்றப்பக்கத்தையும் அறிந்தால்தான் உண்மை தெளிவாகும். என்ன இருந்தாலும் ஒரு தாய் இப்படி தன்ர மகளை விட்டிட்டு போயிருக்கவே கூடாது. மஞ்சுளாவுக்கும் ஒரு வாழ்க்கை அமையவேண்டும். வாரவன் தெரிந்துகொண்டால், பிறகு கோபம் வரும்போதெல்லாம் குத்திக்காண்பிக்கலாம். மஞ்சுளாவின் வாழ்க்கையே நரகமாகிவிடும். யாரும் யாருடையதும் வாழ்க்கையை நரகமாக்கக்கூடாது பெரியப்பா. அவளின் தாய்க்கு இப்போதுள்ள நெருக்கடியான வேளையில் மகளைப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பது தப்பில்லை. அதில் நியாயம் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வாழும் காலம். உயிரோடு எங்கோ இருக்கும் தான் பெற்ற மகள் எப்படி இருக்கிறாள் என்பதை அறிவதற்கு பெற்றமனம் துடிக்கும்தானே பெரியப்பா. அதுதான் அந்த பெண் இவளுடைய இலக்கம் தேடியறிந்து தொடர்புகொண்டிருக்கிறாள். இந்த வீட்டில் எது நடந்தாலும் அது அபிதாவுக்கு தெரியாமல் நடக்காது. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா பெரியப்பா..? பெரிய வி. ஐ. பி. மாரின் வீட்டுப்பூராயங்கள் எல்லாம் தெரிந்துவைத்திருப்பவர்கள், வீட்டு வேலைக்காரர்களும் கார் ஓட்டும் சாரதிகளும்தான். அவர்களுக்குத்தான் வீட்டு எஜமான்- எஜமானிகளின் அனைத்து அந்தரங்க குந்துரு கோலங்களும் தெரியவரும். “
“ என்ன ஜீவிகா… புதுப்புது சொல் எல்லாம் சொல்கிறாய். எங்கட ஊரில் உந்த குந்துருகோலம் என்ற பேச்சு வழக்கே இல்லையே… அதன் அர்த்தம் என்ன…? “ பெரியப்பா சண்முகநாதன் விளக்கம் கேட்டார்.
“ அது பெரியப்பா… சீத்துவக்கேடு என்று அங்கே சொல்வாங்களே… அதுதான் அர்த்தம். இந்த கொழும்பு – நிகும்பலையூர் பக்கம் குந்துருகோலம் என்பார்கள். “ ஜீவிகா புன்னகைத்தாள்.
சண்முகநாதன் தலையை சொறிந்துகொண்டார்.
தன்னுடைய சீத்துவக்கேட்டையும் அந்த கற்பகம் ரீச்சர் சொல்லி இந்த பெறாமகள் அறிந்திருப்பாளா..? என்ற கலக்கமும் அவருக்கு வந்தது.
அப்போது அருகிலிருந்து கோயில் மணி ஓசை கேட்டது.
இன்றைக்கு கோயில் திறந்திருக்கிறாப்போலத் தெரியுது. இன்றைக்கு சித்திரா பௌர்ணமி அல்லவா..? நானும் ஒரு எட்டு போயிட்டு வந்திடுறன். புத்தரும் பிறந்த நாள் . என்ர அம்மா பெயரிலும் உன்ர பெரியம்மா பெயரிலும் அர்ச்சனை செய்திட்டு வாரன்.
சண்முகநாதன் எழுந்தார்.
அவரைக்கண்டதும் , “ வாங்கோ அய்யா. சாப்பிடலாம். “ அபிதா அழைத்தாள்.
“ யாரும் பாத்ரூமில் இல்லைத்தானே..? நான் குளிச்சிட்டு கோயில் பக்கம் போயிட்டு வாரன் அபிதா. வந்து சாப்பிடுறன். இன்றைக்கு சித்திரா பௌர்ணமி. மறந்திட்டன். கோயிலடிக்குப்போனால் பழைய சிநேகிதர்களையும் பார்க்கலாம்தானே..? “ அவர் குளியறைக்குள் நுழைந்தார்.
அபிதா, மனதில் எழுந்து முகத்தில் உதிரவந்த புன்னகையை அடக்கினாள்.
கற்பகம் ரீச்சருடன் தான் பேசியதை இவரும் கேட்டிருப்பார். கோயிலடிக்குப்போனால், ரீச்சரையும் பார்த்துப்பேசலாம் என்ற எண்ணத்தில் புறப்படுகிறார். இப்போதுதான் மஞ்சுளாவின் பூகம்பம் வந்து ஓய்ந்திருக்கிறது. மற்றும் ஒரு பூகம்பம் கற்பகம் ரீச்சரின் உருவத்தில் தோன்றிவிடக்கூடாது. அவவும் கோயிலுக்குப்போய் திரும்புகையில் இங்கே வரவிருக்கிறா. அதற்கிடையில் இந்த லண்டன்காரர் கோயிலுக்குச்சென்று, அங்கே ரீச்சரைக்கண்டு பிணங்குப்படாமல் வந்தால் போதும் என்றிருந்தது அபிதாவுக்கு.
சண்முகநாதன், குளியலறையிலிருந்து வெளியே வரும் வரையில் சுபாஷினி காத்திருந்தாள்.
“ சுபா… இன்றைக்கு எங்கட ரீச்சர் அம்மா வரவிருக்கிறாங்க. கோயிலுக்கு வாராவாம். “ என்றாள் அபிதா.
“ என்ன விசேஷம்…? “
“ இன்றைக்கு சித்திரா பௌர்ணமி. லண்டன் பெரியப்பாவும் புறப்படுகிறார். “
“ அப்படியா… யாருடைய முகத்தில் பௌர்ணமி விடியப்போகுது..? “ சுபாஷினி கண்களை சிமிட்டியவாறு கேட்டாள்.
“ கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். இப்பதான் ஒரு பூகம்பம் ஓய்ந்திருக்கிறது. இந்த நல்ல நாளில் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியட்டும் சுபா. நீங்க உங்கட அம்மா, தம்பியோடு பேசினீங்களா…? அங்கே நுவரேலியாவில் இப்போது எப்படி நிலைமையாம்..? “ அபிதா பேச்சின் திசையை மாற்றினாள்.
சற்று நேரத்தில் சண்முகநாதன் வெள்ளை வேட்டியும் மென்மஞ்சள் நிறத்தில் சேர்ட்டும் அணிந்து வெளியேறினார்.
சுபாஷினி உதட்டைப்பிதுக்கியவாறு “ மாப்பிள்ளை புறப்பட்டுவிட்டார். மணப்பெண் காத்திருக்கிறாள் “ என்று அபிதாவுக்கு மாத்திரம் கேட்கத்தக்கதாக கண்ணைச்சிமிட்டி மெதுவாகச்சொன்னாள்.
அபிதா அவளை முறைத்துப்பார்த்து “ போதும் “ என்று மெதுவாகச்சொல்லி அடக்கினாள்.
கோயிலிலிருந்து மணியோசை கேட்டது.
( தொடரும் )
No comments:
Post a Comment