
ஐந்து வயதிலேயே என் ஆரம்பப் பாடசாலைக் கல்வி துவங்கியது. நாவற்குழி சீ. எம். எஸ். தமிழ்க்கலவன் பாடசாலையிலே 1934 ஆம் ஆண்டு அரிவரி வகுப்பிலே படிப்பதற்குச்சேர்ந்தேன். அக்காவுடன் நடந்து மணல் ஒழுங்கை வழியாக நாம் பள்ளி செல்வதுண்டு. துவக்கத்தில், பெத்தாச்சி வந்து மத்தியானமே என்னை அழைத்துச்செல்வார் என்பது நினைவில் உண்டு. நான் மூன்றாந்தரம் படித்த காலம் வரை, என்னையும் அக்காவையும் வீட்டுக்கு அழைத்துச்செல்வதற்குப் பெத்தாச்சி பள்ளிக்கூடத்துக்கு வருவதுண்டு என்பதும் நினைவிலுண்டு.
1937 ஆம் ஆண்டு. நான் மூன்றாந்தரம் படித்த காலம். ஒருநாள். வழக்கம்போல என்னையும் அக்காவையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குப் பெத்தாச்சி பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அந்த நேரம் பெரிய வாத்தியார், “ அம்பிகைபாகன் “ என்று எனது பெயரை உரத்துச்சொல்லிக் கூப்பிட்டார்.

நான், பெத்தாச்சி, அக்கா மூவரும் வீடு நோக்கி ஒழுங்கையால் நடந்து சென்றோம். ஆனால், என் மனதில் ஒரே பயம். என்னைப்பற்றி வீட்டுக்கு வந்து என்ன பேசவுள்ளார்..? இப்படி யோசித்தவாறு செல்கையில், வழியில் உள்ள நாவல் மரத்தடிக்கு வந்துவிட்டோம். அப்போது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அந்த நாவல் மரத்திலே சுவையான பழங்கள். அவசர அவசரமாக பள்ளிக்கு நடந்து செல்லும்போதும் வீடு திரும்பும்போதும் அந்த மரத்தடியில் பழம் பொறுக்கி உண்ணல் ஒரு தனி இன்பம். ஒட்டியுள்ள மண்ணை ஊதி ஊதித் தின்பேன். தமிழ் மூதாட்டி அவ்வையாரை முருகன் கேட்டதுபோல, ‘பழம் சுடுகின்றதா? ‘ என்று அன்று அக்காள் என்னைக்கேட்டதில்லை. ஆனால், அப்படி நான் உண்பதை அக்காள் விரும்பவில்லை. அவர் தடுத்தாலும் நான் கேட்பதுமில்லை.
என் நடத்தையை விரும்பாத எனது அக்காள், “ பார்… பார்… நான் எமது பெரியவாத்தியாரிடம் சொல்லிக்கொடுக்கிறேன் “ என்று பயமுறுத்துவதும் உண்டு. அப்படி ஏதும் நடந்துவிட்டதோ..? அக்காளிடம் கேட்கவும் நான் விரும்பவில்லை. ஒருவித பயத்துடன் வீடு சென்றேன்.
பிற்பகல் பெரிய வாத்தியாரின் வருகைக்காக புற்பாயும் மான்தோலும் திண்ணையில் விரிக்கப்பட்டன. ஐந்து மணியளவில் பெரிய வாத்தியார் வீட்டுக்கு வந்தார். பரமசாமி வாத்தியார் எனது வகுப்பாசிரியர். அவரது வகுப்பில் நான் தவறு எதுவும் செய்துவிட்டேனா,..? அல்லது…!
வரிசையாக நின்று மனக்கணித விடைகள் சொல்லும்போது, பிழையான விடை சொல்பவரின் தலையில் சரியான விடை சொல்பவர் குட்டுவார். அது ஒருவகையான ‘குட்டி முந்துதல் ‘ தண்டனை. நண்பர்கள் எனின் மெதுவாகக் குட்டுவதும் மற்றையோருக்குப் பலமாகக் குட்டுவதும் வழக்கம். நான் யாருக்காவது பலமாகக் குட்டிவிட்டேனா…? இப்படியும் ஒரு சந்தேகம் வந்தது.
இவ்வண் பலபடப் பயந்தவாறு நான் மறைவில் நின்றேன். ஆச்சி பெரிய வாத்தியாருடன் பேசிக்கொண்டிருந்தார். திண்ணையில் விரித்த புற்பாயிலே அமர்ந்தவாறு பெரியவாத்தியார் கேட்டார்:
“ அம்பிகைபாகன் எங்கே..? இங்கே வரச்சொல்லுங்கோ.. “

“ நாளை முதல் பரமசாமி வாத்தியார் பின்னேரங்களில் இங்கு வருவார். உனக்கு கணக்கும் தமிழும் படிப்பிப்பார். நீ கவனமாகப் படிக்கவேணும். அவர் சொல்வதுபோல் நடக்வேணும். “
இது அவரது உத்தரவு. “ஆம் “ என்னும் பாங்கிலே நான் தலை அசைத்தேன். ஆச்சியும் என்னை ஆதரித்து “ அவன் கவனமாகப் படிப்பான். “ என்றார். என் மனம் ஓரளவு ஆறுதல் பெற்றது. பெரிய வாத்தியார் தொடர்ந்து பின்வரும் பொருளில் ஏதோ சொன்னார்.
“ இந்த வருஷ முடிவில் யாழ்ப்பாணம் சென்று ஒரு சோதனை எழுதவேணும். அதிலே பாஸ் பண்ணினால், இங்கிலீஷ் பள்ளியிலே சம்பளம் ( கட்டணம் ) இல்லாமல் படிக்கலாம். ஆகையால் , கவனமாகப் படி “
அப்போது மறைந்து நின்று வேடிக்கை பார்த்த அக்காவின் பக்கம் திரும்பினேன். அக்காவின் முகத்தில் பெரியதொரு ஏமாற்றம் வடிந்தது. அவ எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம்!
உண்மையிலே பெரியவாத்தியார் கூறியது என்ன? என்பதை முழுமையாகச் சொல்ல முடியாது. எனினும் என்னை யாழ்ப்பாணம் அனுப்பி படிக்கவைக்கப்போகிறார் என்ற பொருள்பட எதை எதையோ சொன்னது நினைவில் உள்ளது.
அடுத்த நாள் முதல் பரமசாமி வாத்தியார் மாலையில் வீட்டுக்கு வந்து எனக்குப் படிப்பித்தார். தினமும் அவர் வீட்டுக்கு வருவார். பாடஞ் சொல்லித் தருவார். ஒரு பேணி தேனீர்தான் ஆச்சி அவருக்கு கொடுப்பார். வேறு எதுவித சன்மானமும் நாங்கள் கொடுத்ததில்லை. அவர் எதிர்பார்த்ததும் இல்லை.
ஒரு காலில் அவருக்கு இயற்கையாகவே ஓர் ஊனம். அதனாலே சற்று நொண்டி நொண்டி வெறும் காலுடன் அவர் நடந்து வருவார். வழியிலே கல்லும் கரடுமான ஒழுங்கை. மழைக்காலமென்றால் வெள்ளமும் நிற்கும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல், மனமுவந்து இலவச ‘ரியூஷன் தந்த பெருமகன் பரமசாமி வாத்தியார்.
“ என்னுடைய ரியூஷன் கிளாசுக்கு நீ வரவேண்டும் “ என்று வற்புறுத்தி, அந்த வகுப்புக்குச் செல்லாதவரைப் பழிவாங்கும் நடத்தையில் ஈடுபடும் இக்கால ஆசிரியருடன் ஒப்பிடும்போது, பரமசாமி வாத்தியார் ஒரு மகான். பெரிய மகான் !
நாள்கள் சென்றன. பரீட்சை எழுதவேண்டிய நாளும் வந்தது. அன்று காலை பெத்தாச்சி புதியதோர் உற்சாகம் பெற்றார் போலும். மூத்த பேரன் யாழ்ப்பாணம் சென்று, பரீட்சை எழுதப்போகிறான் என்ற பெருமையுடன் அதிகாலையிலேயே என்னை அழைத்துக்கொண்டு எமது கோயிலுக்குச்சென்றார். குளத்திலே குளித்து, சுற்றிக்கும்பிட்டு, கையிலே கொணர்ந்த தேங்காயை சிதறு காயாக அடித்தார். முருகனை வேண்டினார்.
சோமர் அண்ணையின் சைக்கிளில்தான் நான் பயணஞ்செய்யவிருந்தேன். சைக்கிளின் பின் சீற்றில் அவர் என்னை இருத்தினார். அவருடன முன்பும் ஊரிலே அப்படிப்பயணஞ் செய்ததுண்டு. அதனால் பயமின்றிச் சென்றேன். சுடலையடி ஏற்றத்திலும், செம்மணி வெளியிலே உதைத்த காற்றிலும் அவர் சைக்கிள் உதைத்துவிட்ட பெருமூச்சை மறக்கமுடியாது. இருவருமாக சைக்கிளுடன் விழுந்துவிடுவோமோ என்று கூட நான் பயந்ததுண்டு.
பாடசாலை வாயிலை நாம் அடைந்தோம். பென்னம் பெரிய வளவு. பல கட்டிடங்கள். வரிசை வரிசையாகப் பல வகுப்பறைகள். பெரிய மண்டபங்கள். உயர்ந்த கட்டிடங்கள். எமது ஊர்ப்பள்ளியுடன் ஒப்பிடும்போது, எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. கிராமத்தில் வளர்ந்த எனக்கு அஃதெல்லாம் ஒரே புதினம்!
பல பிள்ளைகள் என்னுடன் பரீட்சை எழுதினர். பரீட்சை முடிந்த பின், சோமர் அண்ணையின் சைக்கிளில் வீடுநோக்கிப் பயணம் தொடர்ந்தது. சில வாரங்களுக்குப்பின், ஒரு நாள் பெரிய வாத்தியார் எங்கள் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்பொழுது மாத்தறையிலிருந்து, அப்புவும் வீட்டுக்கு வந்திருந்தார். வழமைபோலத்திண்ணையிலே புற்பாய் விரித்து, வந்த பெரிய வாத்தியாரை உபசரித்து, அப்புவும் ஆச்சியும் அவரை வரவேற்றனர். பாயில் அமர்ந்த பெரியவாத்தியார், “ நல்ல செய்தி ஒன்றுடன் வந்திருக்கிறேன் “என்றார். அவரது முகமும் மலர்ந்திருந்தது.
“அம்பிகைபாகன் சோதனை பாஸ் பண்ணிவிட்டான். அடுத்த தைமாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்திலே, படிக்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ளான். “ என்று பெருமையுடன் கூறினார். “ பரமசாமி வாத்தியார் பாடுபட்டது வீண்போகவில்லை. மனம் வைச்சுப் படிப்பிச்சவர். “ என்று அவருக்கும் புகழ்மாலை சூட்டினார். அப்பு என்ன சொன்னாரோ தெரியவில்லை. மலர்ந்த முகத்துடன் ஆச்சியைப்பார்த்தார். “ ஏதோ கடவுள் முதல், அடுத்தது நீங்களும் பரமசாமி வாத்தியாரும்தான் “ இப்படி ஆச்சி ஏதோ சொன்னார் என்பது நினைவு.
எனது வாழ்வில் பெரிய வாத்தியாரும் பரமசாமி வாத்தியாரும் மறக்கமுடியாத இருவர். இளம் பருவத்தில், என்னை வழிப்படுத்தி, நல்ல கல்வி வசதிபெற வழிகாட்டியவர்கள் அவர்கள். நான் வளர்ந்த பின்பு, பெரியவாத்தியாரைப் பல முறை சந்தித்துப்பேசியதுண்டு. ஆனால், இந்தப் பரமசாமி வாத்தியார் யார்..? எந்த ஊரவர்..? நமது கிராமத்தை விட்டுச்சென்றபின் எங்கே சென்றார்…?
இந்தக்கேள்விகள் இடையிடையே மனசில் எழுவதுண்டு. அவருக்கு நன்றி சொல்லும் வாய்ப்புக்கூட எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அந்தப்பெரிய வாத்தியாரின் பெருமனசாலும் பரமசாமி வாத்தியாரின் பயன்கருதாச்சேவையாலும் நான் 1938 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி படலை திறந்து உட்புகுந்தேன் என்பதை இற்றைவரை மறக்கவில்லை.
அத்துடன் எங்கள் ஊர் நாவல் மரத்தையும் மறக்கவில்லை. அதன்பின்னர், தரையில் விழுந்த நாவல் பழங்களை ஊதி ஊதி தின்னும் சந்தர்ப்பமும் கிட்டவில்லை. அக்காளுக்கு என்னை ஏசுவதற்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
( தொடரும் )
No comments:
Post a Comment