இரண்டு கிழமைகள் இடைவெளியில் நான் அங்கு சந்தித்த இருவரால் ஒரு விடயம் என் கவனத்தில் வந்தது.
அவரது புத்தகத்தில் பாறு கழுகுகள் எனும் பிணந்தின்னும் கழுகுகள் மாடுகளுக்கு ஜுரம் மற்றும் வலியைக் குறைக்கக் கொடுக்கும்( diclofenac) வல்ராரன் எனப்படும் மருந்துகளே கழுகுகள் அழிவதற்குக் காரணமாக இருந்ததாக எழுதியிருந்தார்
சென்னையில் மாலனைச் சந்தித்துப் பேசியபின் தன்னால் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை எனக்குக் கொடுத்தார். .அதை வாசித்தபோது , இறுதியில் கழுகுகளின் அழிவில் அந்த நாவல் முடிகிறது . பார்சி மதத்தவர்கள் இறந்த பின்பு அவர்களது உடலைக் கழுகுகளுக்கு இரையாக்குவதையும் அத்துடன் அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் சமூகத்திலேயே திருமணம் செய்வதால் அவர்களது சமூகம் சிறிதாகி வருவதையும் கேள்விப் பட்டிருந்தேன்.
பார்சிகள் எவ்வளவு கட்டுப்பாடாக சமயக் கடமைகளை நிறைவேற்றுபவர்கள் என்பதோடு அவர்களில் ஒரு சிறிய குழுவினரை இந்த பிணம் தூக்கும் வேலைக்கும் வைத்திருக்கிறார்கள். ஒரு விதத்தில் நமது இந்து மதத்திலும் மலம் அள்ள மற்றும் பிணமெரிப்பதற்கு தனியாக மனிதர்களை வைத்திருப்பது போன்ற செயலே இதுவும். நாங்கள் அதற்கு வெட்கப்படாததுபோல் அவர்களும் அதற்கு வெட்கப்படுவதில்லை .
நாவலின் கதை பார்சி மதகுருவாக இருப்பவரது மகன் தனது 17 வயதிலே இப்படி பிணம் தூக்கும் ஒருவனது பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்கிறான். அவனது செய்கையால் அவளை அவனது சமூகம் மட்டுமல்ல அவனது தந்தையும் ஒதுக்குவதே நாவலின் ஆதாரசுருதி . அத்துடன் அவன் காதலித்த பெண் அவனுக்கு ஒன்றுவிட்ட தங்கை முறையானவள் . காதலித்ததற்காக அவனது தந்தையால் ஒதுக்கப்பட்டவள் . உறவினர்கள் திருமணம், அதனால் ஏற்படும் கேடுகள் பார்சிகளுக்கு மட்டும் பொதுவானதல்ல.
முற்கம்பி வேலியை வாயால் பிரிக்க முயல்வது போன்ற பல மொழிபெயர்ப்புகள் என்னைத் தோல்வியடை செய்து மீண்டும் ஆங்கிலத்திற்கு போகவைக்கும். ஆனால், இங்கே மொழியாக்கம் மாலனால் செய்யப்பட்டிருப்பதால் நமக்குப் பழக்கமான மொழியாகிறது. கடுமையான தமிழில்லாது ஆங்கிலம் கலந்த தென் சென்னைத் தமிழாக சலசலத்து ஓடுகிறது .
நாவலின் கட்டுமானமாக இருக்காது, ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது . கதை சொல்லி பிரதான பாத்திரமாக இருப்பதால் கதைசொல்லியின் நினைவுகள் இங்கு முன்னிலைப் படுத்தப்படுகிறது . மற்றைய கதாபாத்திரங்கள் ஒற்றைப்படையாகத் தெரிகின்றன. பர்சிக் குருவாக இருக்கும் தந்தையின் மன நிலை அவரை இறுக்கமானவராக காண்பிக்கிறது. ஆரம்பத்தில் தங்கையை பின்பு மகனை இறுதியில் பேத்தியையும் புறக்கணித்து எண்பது வருடங்களுக்கும் மேல் வாழும் ஒருவரது மனதில் எக்காலத்திலாவது ஒரு ஈரமேற்படாது காட்டுவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
ஒவ்வொரு சமூகத்திற்கும் இருண்ட பக்கங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கப் பலர் மறுக்கும்போது அந்தப் பகுதியை வெளிப்படுத்துவது எழுத்தாளனது கடமை . அந்த வகையில் சைரஸ் மிஸ்திரியின் நாவல் நாம் படிக்க வேண்டியது.
நாவல் முடிவிலும் பாறு கழுகுகள் அருகி வருவதும் பிணத்தை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கட்டிடம் கட்டப்படுவதற்காக விற்கப்படுவதும் என தற்போதைய நிகழ்காலத்தை பேசி முடிகிக்கிறது.
பர்சிகள் பற்றிய சிறிய குறிப்பு
எட்டாம் நூற்றாண்டு வரையில் பாரசீகத்தில் சோராஸ்ரிரனிசம் அரச மதமாக இருந்தது. இஸ்லாம் வந்ததும் பார்சிகள் கடல் மார்க்கமாக தற்போதைய குஜராத் துறைமுகங்களில் அகதிகளாக வந்திறங்கினர். அப்பொழுதிருந்த இந்து மன்னன் அவர்களை ஏற்க மறுத்து பால் நிரம்பிய கிண்ணத்தை கொடுத்தான். அதாவது ஏற்கனவே விளிம்பு வரை மக்கள் தொகை உள்ளது என்பதை சுட்டிக்காண்பிப்பதற்காக.
அப்பொழுது வந்த பார்சிகள் அதில் சீனியைக் கலந்தனர். பால் இனிமையாகியதுடன் வெளியிலும் சிந்தவில்லை .
அரசன் அமைதியாக வாழவேண்டும். அரசனை ஏற்கவேண்டும். பெண்கள் குஜராத்தியப் பெண்களாக உடையணியவேண்டும் . கல்யாண ஊர்வலங்கள் பகல் நேரத்தில் நடத்தி உள்ளுர் மக்களின் அமைதியைக் குலைக்கக்கூடாது அத்துடன் குஜராத்திய மொழி பேசவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தான்.
பார்சிகளிடம் மூன்று விதமான பிரிவுகள் உருவாகின. பாரம்பரியமான நமது பிராமணர் போன்று தலைமுறையான புரோகிதர்கள், சாதாரண பார்சிகள் , கீழ்நிலையில் இருக்கும் பிணந்தூக்குபவர்கள்.
தற்பொழுது இந்தியா முழுவதும் 60000 பார்சிகளே வாழ்கிறார்கள் பெரும்பான்மையினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
—–0—-
No comments:
Post a Comment