நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்!
உலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்
இலங்கை தமிழ் அகதிகளிற்கு இந்திய பிரஜாவுரிமையில்லை- மத்திய அரசு அறிவிப்பு
மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் - பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி
இராணுவம் பொதுமக்களை சுற்றிவளைத்து படுகொலை செய்வது இனப்படுகொலையில்லையா? ஆங் சான் சூகி கருத்து குறித்து ரொகிங்யா மக்கள் சீற்றம்
நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்!
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் 'White Island' இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் வேளையில் மேற்படி தீவில் மக்கள் இருந்துள்ளதாகவும், இதன்போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் 'White Island' தீவை அண்மித்த கடற்கரை நகரமான 'Whakatane' மேயர் ஜூடி டர்னர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலமாக குறித்த தீவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நன்றி வீரகேசரி
உலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்
10/12/2019 பின்லாந்து நாட்டில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்லாந்தில் தற்போது சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி, மீது அந்நாட்டு தபால் துறை வேலை நிறுத்தத்தை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்ப்புக்கள் வலுத்ததை அடுத்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 34 வயதான சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் சன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எ
இது குறித்து பேசிய சன்னா மரின், “நான் எனது வயதை ஒரு பொருட்டாக கருதியதில்லை. மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான வழி குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன” என்று கூறினார்.
தற்போது உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் தான். இதற்கு முன்பு நியூலாந்தின் பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் (39) தான் வயது குறைந்த பிரதமராக கருதப்பட்டார். நன்றி வீரகேசரி
10/12/2019 இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கப்போவதில்லை என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கே இந்திய மத்திய அரசு இந்த பதிலை வழங்கியுள்ளது.
30 ஆண்டுகளிற்கு மேல் இந்தியாவில் வசிக்கும்இந்திய தமிழ் அகதிகளிற்கு இந்திய பிரஜாவுரிமைகிடைக்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்துள்ள இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நித்தியானந்த ரோய் குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009இன் படி இந்திய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த விதிகளின் கீழ் இந்திய பிரஜாவுரிமையை பெற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு இந்திய பிரஜாவுரிமையைவழங்கவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்திய லோக்சபையில் உரையாற்றிய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்பாலு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான சட்ட மூலத்தின் மீதான விவாதத்தின் மீது உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு பிரஜாவுரிமையை வழங்க மறுக்கின்றது என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகளிற்கு பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் - பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி
13/12/2019 பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33 ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 338 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பிரதமரின் கட்சி 368 ஆசனங்கள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழில்கட்சிக்கு 200 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்த வெற்றி பிரெக்சிட்டை சாத்தியமானதாக்குவதற்கான ஆணையை தனக்கு வழங்கும் என பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் தலைவர் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இராணுவம் பொதுமக்களை சுற்றிவளைத்து படுகொலை செய்வது இனப்படுகொலையில்லையா? ஆங் சான் சூகி கருத்து குறித்து ரொகிங்யா மக்கள் சீற்றம்
12/12/2019 மியன்மார் படையினர் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என ஆங் சான் சூகி தெரிவித்துள்ளமை குறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ரொகிங்யா இனத்தவர்கள் அவர் தெரிவித்தது உண்மையா என்பதை உலக உரிய ஆதாரங்களுடன் மதிப்பிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் உலகம் மதிப்பிடும் என சமாதானம் மனிதஉரிமைகளிற்கான ரொகிங்யா அமைப்பின் தலைவர் முகமட் மொகிபுல்லா தெரிவித்துள்ளார்.
திருடன் ஒருவன் தான் திருடன் என்பதை ஒருபோதும்ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால் ஆதாரங்கள் மூலம் நீதியை வழங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் எங்களிடமிருந்து இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங் சான் சூகி பொய்சொன்னாலும் அவர் தப்ப முடியாது அவர் நிச்சயம் நீதியை எதிர்கொள்வார் உலகம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பங்களாதேசின் குட்டுபலங் அகதிமுகாமில் உள்ள மற்றொருஅகதியான நுர் கமால் என்பவரும்; ஆங் சான் சூகியின் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.
இராணுவம் மக்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்த பின்னர்அவர்களின்உடலிற்கு தீ மூட்டுவது இனப்படுகொலை இல்லையா என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

ஆங் சான் சூகி அவ்வாறு சொன்னால்அது சரியாகிவிடுமா எனவும் கேள்விஎழுப்பியுள்ள அவர் உலகம் இதனை ஏற்றுக்கொள்ளாது,எங்கள் மீதான சித்திரவதைகளை முழு உலகமும் பார்த்துள்ளது, எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
மியன்மாரிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டது முழுமையற்றது என ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றில் மியன்மாரிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரொகிங்யா மக்களிற்கு எதிராக அளவுக்கதிகமான படைபலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் எனினும் மியன்மாரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் மோதல் குழப்பமானது இலகுவில் புரிந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment