
கவிஞர் கருணாகரனின் மகிழ்
பதிப்பகம், இந்த சொல்லத்தவறிய கதைகளை இவ்வருடத் தொடக்கத்தில் ( 2019 ஜனவரி ) வெளியிட்டிருக்கிறது.
“ நண்பர் முருகபூபதியின் இந்தக்கதைகள் ஒருவகையில்
வரலாற்றின் சாயல்கொண்டவை. இன்னொரு வகையில் சமூகவியலின்பாற்பட்டவை. இன்னொரு கோணத்தில்,
எம்முள்ளும் – எம்மைச்சுற்றியும் நிகழ்ந்தவற்றின் கதைகள். எல்லாவற்றிற்கும் மேலாக,
நாம் கவனித்தேயாகவேண்டிய கதைகள் இவை. “ என்று அழுத்தமாகக் குறிக்கின்றது பதிப்புரை.

“ கவனித்தேயாக வேண்டிய கதைகள் “ இவை என்று
கருணாகரன் குறிப்பதிலும் நிறைய உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.
எழுபதுகளில் முற்போக்கு எழுத்தாளராக
மல்லிகையில் சிறுகதைகள் எழுதத்தொடங்கி, வீரகேசரியில் நீர்கொழும்பு நிருபராக, பிறகு ஒப்புநோக்காளராக, வீரகேசரிக்குள் நுழைந்து,
ஆசிரியர் குழுவரை உயர்ந்து, ஒரு பத்தாண்டுகள் பணியாற்றிவிட்டு 1987 இல் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்றவர் இவர்.
இன்றுவரையும் ஏறத்தாள முப்பத்தியிரண்டு
ஆண்டுகள் அவுஸ்திரேலியா வாழ்க்கை. முபத்தியாறு ஆண்டுகள் நம்மூர் வாழ்க்கை என அறுபத்தியெட்டு
வாழ்வனுபவமும், அதில் அரைநூற்றாண்டு காலம்
வித்தியாசம் வித்தியாசமான எழுத்துலக இலக்கிய அனுபவமும் கொண்டவர் இவர்.
தனது இலக்கிய அனுபவங்களையும் உடனிணைந்த
வாழ்க்கை அனுபவங்களையும் கதை கதையாக சொல்லத் தெரிந்தவர், சொல்லிப்பழக்கப்பட்டவர் இவர்.
இவர் இலக்கியவாதியாகவும் ஊடகச்செயற்பாட்டாளராகவும்
இருப்பதனால் இந்தப்பதிவுகள் வாசிப்பு சுவாரசியத்தை அளிக்கின்றன. கூடவே ஆழ்தரிசனத்தையும்
கொண்டிருக்கின்றன. இவைகளின் ஆழ் தரிசனமாக வெளிப்பாடடைவது இவற்றில் உள்ள உண்மையும் சமூக
அக்கறையுமாகும்.
முருகபூபதி முற்போக்கு வழிவந்தவரென்பதால், அவர் எதை எழுதினாலும் அதில் சமூகத்தைப்பற்றிய அக்கறை
மேலோங்கியிருப்பதைக்காணலாம். பல சந்தர்ப்பங்களில் சமூக விமர்சனமாகவும் சமூகத்திற்கான
வழிகாட்டியாகவும் முருகபூபதியின் எழுத்துக்கள் இருக்கின்றன.
இன்றைய இந்தப்பதிவுகளும் வெளிப்பாடுகளும்
நாளைய வரலாற்றுக்கு மிகப்பெரிய ஒளியூட்டிகளாக இருக்கும். ( பதிப்புரையில் கருணாகரன்
)
“ சமூகத்துக்காக பேசுவதும் சமூகத்தைப் பேசவைப்பதுமே
ஒரு எழுத்தாளனின் பிரதான கடமை எனக் கருதுகின்றேன். ஒரு இலக்கியப் படைப்பாளியாகவும்
ஊடகவியலாளனாகவும் பயணிக்கின்றமையால் சமூகம் பற்றிய எனது அவதானிப்புகளை இக்கதைகள் மூலம்
பதிவுசெய்துவருகின்றேன். “ என்று தனது உரையில் குறிக்கும் முருகபூபதி, தனக்குத் தெரிந்த
தொழில் எழுத்து மாத்திரமே. என்னையும் எனது குடும்பத்தினரையும் வாழ வைத்ததும் எனது எழுத்து
மாத்திரமே. படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளனாகவுமே வாழ்ந்து வருகின்றேன்.
புலம்பெயர்ந்த பின்னரும் அவ்வாறே
வாழ்கின்றேன். அதனால் எனது இந்தத் தொழில் வெற்றுப்புகழுக்கானது அல்ல. எனக்குத் தொழில்
எழுத்து. அவ்வளவுதான் “ என்றும் குறிக்கின்றார்.
சொல்லத்தவறிய கதைகள் என்னும் இந்த இருநூறு பக்க நூல் இருபது கதைகளைக் கூறுகின்றது. இந்த
வரிசையின் மூன்று நூல்களுமே சமாந்தரமாக தலா இருபது கதைகளாக அறுபது வரலாற்றுப்பதிவுகளை
கூறிவைக்கின்றன. இவற்றைப்படித்த பெருவாரியான
வாசகர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
தமது கருத்துக்களையும் மகிழ்வையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அவைகளில் சில இந்த நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனுடையது.
“ அன்பான முருகபூபதிக்கு என்று ஆங்கிலத்தில் தொடங்கும்
அவருடைய கடிதம் “ நான் அம்பலாங்கொடை குறித்துப்
பேசியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று விளக்கமும் Thanks
for your Enlightening article என்று
நன்றியும் தமிழில் தொடர்பு கொள்ளமுடியாமைக்கான வருத்தத்தையும் தெரிவிக்கும் கடிதம்
அது.
மறைந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள்
என்று ஒரு கதை – பக்கம் 7.
டயறி எழுதுவது நல்ல பழக்கம்தான்.
நான் நன்கறிந்த ஒரு மூத்த எழுத்தாளரின் டயறி அவரின் மறைவின் பின் வெள்ளவத்தை பழைய பேப்பர்
கடைக்குப்போய், பிறகு ஒரு சைவ ஹோட்டலுக்கு கை துடைக்கச்சென்றிருக்கிறது.
“ என்னுடைய டயறியிலிருக்கும் மறைந்துபோன – காணாமல்போன
எழுத்தாளரின் தொலைபேசி இலக்கங்கள் என்னை துயர்படுத்துபவை. போர் முடிவுடன் காணாமலாக்கப்பட்ட
புதுவை ரத்தினதுரை, தராக்கி சிவராம், நீலன் திருச்செல்வம், மக்கள் கட்சித்தலைவர் விஜயகுமாரணதுங்க
என்று எத்தனை எத்தனைபேரின் துயர் நினைவுகளை
அவை தருகின்றன. “ எனக்குறிக்கின்றார் முருகபூபதி.
சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த
முஸ்லிம் சகோதரர்கள் - எழுத்துலகில் சனி பகவான்
- புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன, என்று
விதம் விதமான தலைப்புக்களில் எத்தனையோ வரலாற்றுப்பதிவுகள்.
இந்தக்கதைகள் சொல்லப்படுவதற்கான அவசியத்தை
எப்படி கொண்டிருக்கிறதோ, அதேபோல் அவற்றை நாமும் வாசித்தேயாகவேண்டும் என்னும் அவசியத்தையும்
கொண்டிருக்கிறது.
அதுவே இந்த நூலின் சிறப்பும் முக்கியத்துவமும்
ஆகிறது.
( நன்றி: வீரகேசரி சங்கமம்
)
No comments:
Post a Comment