"தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய பிரச்சினைக்கான யோசனைத் திட்டத்தினை முன்மொழிய வேண்டும்"
ஜனாதிபதி வேட்பாளருக்காக எமது குடும்பத்திலிருந்து பெயர்கள் முன்மொழியப்பட்டபோது தற்போதைய சூழலை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் பெயரை நானே முன்மொழிந்தேன் என்று முன்னாள் சபாநாயகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
"சு.கவை மீட்பதற்கு பொதுஜன பெரமுனவுடன் இணைவதே ஒரேவழியாகும்"
கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- ஜனாதிபதி வேட்பாளர்களாகக் கூடியவர்கள் என முன்மொழியப்பட்டவர்களில் மிகப்பொருத்தமானவர். தற்போதைய சூழலில் சட்டம் ஒழுங்கினை நேரடியாகக் கையாளக்கூடியவரும், பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனத்தினை கட்டுப்படுத்தக்கூடியவருமான நேர்மையான ஒருவரின் தலைமைத்துவமே நாட்டிற்கு தேவையாகவுள்ளது. அதுமட்டுமன்றி அவர், பாதுகாப்பு மற்றும் நிருவாகத் துறையில் அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். கடந்த காலத்தில் நகரஅபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களில் நடைமுறைச்சாத்தியமான விடயங்களை முன்னெடுத்திருந்தமையே அவர் பொருத்தமானவர் என்பதை வெளிப்படுத்துகின்றது.

பதில்:- தனியொருவரால் அவர் தெரிவுசெய்யப்படவில்லை. மாறாக கட்சித் தலைவர்களின் ஏகோபித்த தீர்மானத்துட னேயே அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதுமட்டுமன்றி அவரின் வழிகாட்டுதல் மற்றும் பங்குபற்றுதலுடன் வியத்கமவின் ஊடாக பல்வேறு செயற்றிட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தச் செயற்றிட்டங்கள் நாட்டின் எதிர்காலத்தினை மையப்படுத்தியதாக உள்ளன. மேலும் வியத்கம ஊடாக நாட்டை பொறுப்பேற்றவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அனுபவங்களைக் கொண்டிருக்கும் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டபோது அதற்கு அனைவரும் ஆதரவளித்திருந்தோம்.
அமெரிக்காவில் கெனடி, புஷ், சிங்கப்பூரில் லி குவான்யூ ஆகியோரின் பரம்பரையினர் ஆட்சியில் இருந்திருக்கின்றார்கள். அங்கு குடும்ப ஆட்சியென்ற விமர்சனம் எழுந்திருக்கவில்லையே. காரணம், நாட்டை நிருவகிக்கும் வினைத்திறனும், அனுபவமும் தான் முக்கியமாகின்றது.
நீண்டகாலமாக அரசியல் பேசிக்கொண்டிருப்பது மட்டும் அனுபவமல்ல. ராஜபக் ஷ குடும்பத்தினரைப்பொறுத்தவரையில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சேவை புரிந்துள்ளார்கள். அதனை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே குடும்ப ஆட்சி என்று விமர்சிப்பதை ஏற்க முடியாது. மக்கள் சேவையில் குடும்பத்தினராக செயற்படுவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அரசியல் ஊடாக குடும்பத்தினரை வலுப்படுத்துவதே தவறானது.
கேள்வி:- தாங்களும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என்று கூறியிருந்த நிலையில் ராஜபக் ஷ குடும்பத்தினுள் கோத்தாபயவையே களமிறக்குவதென்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?
பதில்:- ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எமது குடும்பத்தினுள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. அச்சமயத்தில் நாம் கலந்துரையாடினோம். இறுதியாக எனது பெயரும், கோத்தாபயவின் பெயரும் இருந்தன. அச்சமயத்தில் கோத்தாபயவின் பெயரை நானே முன்மொழிந்தேன்.
கேள்வி:- கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் தானே வெள்ளைவேன் கலாசாரம், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள், காணாமலாக்கப்படும் சம்பவங்கள், படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றனவே?
பதில்:- ஜே.வி.பி.கிளர்ச்சி காலத்தில் அவர்களை எதிர்த்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள். மரணச் சடங்கை கூட நடத்தமுடியாத நிலைமை இருந்தது. 1983இல் கண்முன்னே நபர்களை ரயர்களில் வைத்து எரித்தார்கள். பட்டப்பகலிலே வெள்ளைவேன்களில் கடத்தி கண்முன்னே படுகொலை செய்தார்கள்.
அதுபற்றி ஏன் பேசவில்லை. எமது காலத்தில் வெள்ளைவேன்கள் இருந்ததாக கூறுபவர்கள் பாதாள உலகக் குழுக்களை அதிகளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமை பற்றி ஏன் கூறுகிறார்கள் இல்லை. நாம் அவ்வாறு செயற்பட்டமைக்கு எந்தவிதமான சாட்சிகளும் இல்லை. சாட்சிகளின்றி குற்றச்சாட்டுக்களை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது பாதாள உலகக்குழு தலைவிரித்தாடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கேள்வி:- இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டியவர்களில் கோத்தாபய முக்கியமானவராக உள்ளாரே?
பதில்:- ஈராக்கில் சதாம் உசையினை அவரது நாட்டிற்குள் நுழைந்த படைகள் எவ்வாறு கையாண்டன. குற்றச்சாட்டுக்களில் கைதாகும் நபர்களை மேற்குலத்தினைச் சேர்ந்த பொலிஸார் எவ்வாறு நடத்துகின்றனர். மனித உரிமைகள் பற்றிக் கதைப்பவர்கள் ஏன் அந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தாதிருக்கின்றனர்.
கடந்த நான்கரை வருடங்களில் அரசாங்கம் தமக்கு எதிரான அல்லது சவாலான தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- தங்கள் மீது எவ்விதமான சர்ச்சைக்குரிய விடயங்களும் காணப்படாத நிலையில் வேட்பாளர் தெரிவில் உங்களுக்கு ஏன் அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை?
பதில்:- நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு அரசியலில் நேரடியாக ஈடுபடாது நிருவாகத்திறன் மிக்க ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் விருப்பாக இருந்தது. குறிப்பாக, எதிர்கால சந்ததியினரினதும், புத்திஜீவிகளினதும் கோரிக்கையாக இருந்தது.
கேள்வி:- கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டு விட்டதா?
பதில்:- அவருடைய இரட்டைக்குடியுரிமை நீக்கப்பட்டு விட்டது. அந்நாட்டுப் பிரஜையாக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டும் விட்டன. ஆனால் அந்தவிடயத்தினை பூதாகரமாக்கி எதிர்த்தரப்பினர் பொதுமக்களை உளரீதியாக குழப்பும் முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள்.
மேலும் குடியுரிமை நீக்கப்பட்டாலும் ஆவணத்தில் பெயர் இடம்பெறுவதற்கு சில காலம் செல்லலாம் என்று அமெரிக்கத்தூதுவரே கூறியிருக்கின்றார் அல்லவா.
கேள்வி:- கோத்தாபயவுக்கு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் இறுதி நேரத்தில் ஷிரந்தி ராஜபக் ஷ அவருக்கு பதிலாக பெயரிடப்படுவாரா?
பதில்:- எதிர்க்கட்சிகள் இவ்வாறு பல இட்டுக்கதைகளை கூறி பிரசாரம் செய்து வருகின்றார்கள். அத்துடன் ராஜபக் ஷ குடும்பத்தில் எவரும் தமது பாரியாரை தேர்தல்களில் ஈடுபடுத்தவுமில்லை. ஈடுபடுத்தப்போவதுமில்லை.
கேள்வி:- கோத்தாபயவுக்கு எதிராக வழக்குகள் உள்ள நிலையில் இறுதி நேரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டால் அவருக்கு பிரதியீடாக நீங்கள் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றீர்களா?
பதில்:- அவருக்கு எந்தவிதமான நெருக்கடிகளும் ஏற்படாது. அரசியல் பழிவாங்கல்களே நடைபெறுகின்றன. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டிருந்தார் என்பதற்காக கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறித்தவர்கள் எந்த அடிப்படையில் பிறிதொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தார்கள். மோசடிகள் இடம்பெற்ற பின்னரும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றார்கள். இதுபற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
கேள்வி:- கோத்தாபயவுக்கு தமிழ், முஸ்லிம் தரப்புக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?
பதில்:- தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் ஐ.தே.கவுடன் இருந்தாலும் கிராம மட்ட மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் செயற்பட்டதை விடவும் தமது அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவே போராடியுள்ளது. வழங்கிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
கேள்வி:- போரை நிறைவுசெய்த உங்கள் தரப்பால் தேசிய இனப்பிரச்சினைக்கு உங்களது காலத்தில் தீர்வினை எட்டமுடியாது போனதேன்?
பதில்:- போரை நிறைவுக்கு கொண்டுவந்ததும் நாம் 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தோம். அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்திருந்தோம். 30 வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த பிரதேசமொன்றுக்கு எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் வழங்கி விட முடியாது. பிரிவினை கோரியவர்கள் எந்த வகையில் செயற்படுகின்றார்கள் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.
அதனால் நாம் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தோம். அதில் அதிகாரத்தினைக் கைப்பற்றியவர்கள் மாகாண சபை முறைமையினால் செய்யக்கூடிய விடயங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுத்திருந்தால் அதற்கு அப்பால் செல்வது பற்றி பேசியிருக்கலாம்.
தென்னிலங்கைக்கும், வட – கிழக்கிற்கும் இருந்த அவநம்பிக்கையை போக்கி நம்பிக்கையை கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்தோம். இதற்கு மாகாண சபைகளைப் பயன்படுத்தி செயற்பாடுகளை பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வெ வ்வேறு தீர்மானங்களை அங்கு நிறைவேற்றி தென்னிலங்கை மக்கள் மத்தியிலிருந்த அவநம்பிக்கையை அதிகரிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்களின் தலைவர்கள் கொழும்பிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று தம்மைப் பாதுகாத்துக்கொள்வார்கள். சாதாரண மக்களின் நிலைமைகளை யோசித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் தமிழ் தரப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெ வ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். தேசியப் பிரச்சினை விடயத்தில் நாம் ஒருதரப்பினை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினது கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும். அல்லது தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அவ்வாறான யோசனைத் திட்டத்தினை முன்மொழிய வேண்டும். இல்லாது விட்டால் காலம் நகர்ந்துகொண்டு தான் இருக்கும்.
கேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வகையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உங்களின் நிலைப்பாடாகவுள்ளது?
பதில்:- நாடு பிளவடையாத வகையில் அனைவரும் இலங்கையின் பிரஜைகள் என்ற மனோநிலை ஏற்படுத்தப்பட்டு சகவாழ்வுடன் வாழ்வதற்கான சமத்துவமான வாழ்வு உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினையும் பொருளாதார அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியல் பிரதிநிதிகள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.
கேள்வி:- பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்று விட்டீர்களா?
பதில்:- இன்னுமில்லை.
கேள்வி:- எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினையும் ஏனையவர்கள் உறுப்புரிமையையும் பெற்றுள்ள நிலையில் அவர் உள்ளிட்ட குழுவினரின் எதிர்க்கட்சித் தலைமை மற்றும் பாராளுமன்ற உறுப்புரிமை கேள்விக் குறியாகியிருக்கின்றதே?
பதில்:- நாட்டின் வளங்களை மக்கள்சொத்தாக பிரகடனப்படுத்தும் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை கைவிட்டு ஐ.தே.வின் திறந்த பொருளாதார கொள்கைக்கு சுதந்திரக்கட்சி ஆதரவளித்தது. இதனை மக்கள் விரும்பவில்லை. இதனாலேயே மக்கள் பொதுஜன முன்னணிக்கு பேராதரவு வழங்கினார்கள். தற்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. இதில் கூட்டணிக்கான கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டுகின்றபோது எவ்விதமான பிரச்சினைகளும் எழாது. பண்டாரநாயக்கவின் உண்மையான கொள்கைகளை பின்பற்றுவார்களாயின் பொதுஜன பெரமுனவுடன் அவர்கள் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- பண்டாரநாயக்கவுடன் இணைந்து உங்களுடைய தந்தையாரும் ஆரம்பித்த சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கின்றதல்லவா?
பதில்:- தேர்தலொன்றில் பொதுமக்கள் கட்சியொன்றை நிராகரித்தார்கள் என்றால் மீண்டும் அக்கட்சி எழுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் அவசியமாகின்றது. கொள்கையின் அடிப்படையில் கட்சியைப் பாதுகாப்பது என்றால் பொதுஜன பெரமுனவுடனேயே இணைந்து கொள்ள வேண்டும். இல்லாதுவிட்டால் அத்தரப்பினருக்கு கடினமான நிலைமைகளே ஏற்படும்.
கேள்வி:- சுதந்திரக்கட்சியின் தலைமையை மஹிந்த மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?
பதில்:- மஹிந்த தான் தலைமைத்துவத்தினை ஏற்கவேண்டியதில்லை. சு.கவின் கொள்கையில் உறுதியாக நின்று நாட்டின் வளங்களையும் பிரஜைகளையும் பாதுகாக்கவல்ல நம்பிக்கையான மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவர் உருவாகின்றபோது அவர் அக்கட்சிக்கு தலைமையை வகிக்க முடியும். கடந்த கால தேர்தல்களின் போது சுதந்திரக்கட்சி தனது கூட்டணி பெயரையும், சின்னத்தினையும் கூட மாற்றியுள்ள நிலையில் தற்போது பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு அதுகூட தடையாக இருக்காது.
கேள்வி:- சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரம் என்னவாக இருக்கும்?
பதில்:- இந்த விடயம் குறித்து கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் மஹிந்த ராஜபக் ஷவே இறுதியான முடிவினை எடுப்பார்.
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரி உங்கள் தரப்புடன் இணைவது என்பதற்கு அப்பால் அவர் குறித்த நம்பிக்கைத்தன்மை எவ்வாறுள்ளது?
பதில்:- எமது தரப்பினருடைய நம்பிக்கை என்பதற்கு அப்பால் மக்களின் நம்பிக்கை தான் முக்கியமாகின்றது.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் களமிறங்கியுள்ள நிலையில் உங்களுடைய வாக்குவங்கியில் சரிவு ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றனவா?
பதில்:- 2015இல் ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே செயற்பட்டது. அதன்பின்னரும் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறே செயற்பட்டு வருகின்றது. ஆகவே அவர்கள் போட்டியிடுவதால் ஐ.தே.கவுக்கு கிடைத்த வாக்குகளே இல்லாது போகப்போகின்றன.
கேள்வி:- ரணில், கரு, சஜித் ஆகிய மூவரில் யார் உங்களுக்கு சவாலான வேட்பாளர் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- யார் வேட்பாளராக களமிறங்கினாலும் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் வளங்களையும், வருமான மூலோபாய செயற்றிட்டங்களையும் விற்பனை செய்யும் கொள்கையே பின்பற்றப்படப்போகின்றது. அதேநேரம், மத்தியவங்கி மோசடிக்கும் இம்மூன்று பேரும் பொறுப்புக்கூறவேண்டியவர்களே. ஆகவே இவர்களை மக்கள் அங்கீகரிப்பார்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
கேள்வி:- இலங்கையில் நகரும் பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கின்றபோது ராஜபக் ஷ தரப்பினருக்கு சீனா ஆதரவாக இருக்கின்றது என்ற தர்க்கரீதியான கருத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அவ்வாறில்லை. எமது காலத்தில் வேகமான அபிவிருத்திக்கு சீனா உதவியிருந்தது. அதேபோன்று ஏனைய நாடுகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
வல்லாதிக்க நாடுகளை மட்டும் மையப்படுத்தி செயற்பட்டமையால் பல நாடுகளில் உள்நாட்டு நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். ஆகவே அனைத்து நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை சம அளவிலேயே பின்பற்றுவதே சிறந்த இராஜதந்திர அணுகுமுறையாகும்.
நேர்காணல்:- ஆர்.ராம்
படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்
நன்றி வீரகேசரி 25/08/2019
No comments:
Post a Comment