அபிதா வந்து சேர்ந்த
அந்தவீட்டில் ஒரு அறையிலிருந்து சுப்ரபாதம்
ஒலித்தது.
“ ரீச்சரம்மா எழுந்திட்டாங்க
“ என்றாள் ஜீவிகா. கற்பகம் துயில் எழுந்துவிட்டதன் அறிகுறி அது.

அந்த தேநீர் அருந்தும் கப்பை ஜீவிகா தன்னிடம் தந்தபோது “இனி இதுதான் உனக்குரிய கப் “ எனச்சொன்னபோது அந்தத்தொனியின் அழுத்தம் அவ்வாறெல்லாம்
சிந்திக்கவைத்தது.
ஒரு தேநீர் கப் தனது சுயசரிதையை சொன்னால் எப்படி இருக்கும்?
சிறுவயதில் பாடசாலையில் குடை, மேசை, கதிரை, வீடு முதலான தலைப்புகளில் சுயசரிதை
எழுதிய காலம் அபிதாவின் நினைவுகளில் சஞ்சரித்தது.
ஜீவிகா, குளியலறையிலிருந்து வெளியே வந்ததும், “ அபிதா…. உனது கண்ணில் தூக்கக்கலக்கம் இருக்கிறது.
நேற்று இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டாய். கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வா. இந்த
வீட்டிலிருக்கும் மற்றவர்களும் எழுந்த பிறகு இங்கு என்ன என்ன செய்யவேண்டும் “ என்பதை சொல்கிறோம்.. “ என்றாள்.
சுவர்க்கடிகாரம் காலை ஏழுமணிக்கு நாதமெழுப்பியது.
ஜீவிகா, அவளை சமையலறைக்கு அருகிலிருந்த சிறிய களஞ்சிய அறைக்கு
அழைத்துச்சென்று காண்பித்தாள். அதனை கூட்டித் துப்பரவுசெய்யவேண்டியிருந்தது.
இரண்டு கரப்பான்பூச்சிகள் ஓடி ஒளிந்தன. அவை காதலர்களாக இருக்கவேண்டும். ஒன்றன்பின்
ஒன்றாக ஒரே திசையில் ஓடி மறைந்தன. சிற்றெறும்புகள் ஒரு மூலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.
சுவர்களில் பல நாள்
ஒட்டடை படர்ந்திருக்கிறது. அந்தச் சிலந்தி வலைகளை பின்னியவர்களின் சாபத்தையும் இனி ஏற்கத்தான்வேண்டும்.
அந்த அறையில் அபிதா உறங்கி ஓய்வு எடுப்பதற்கு முன்னர் அங்கு
செய்யவேண்டிய வேலைகள் பல அவளுக்காக காத்திருந்தன.
குளியலறைக்கு பக்கத்திலிருந்த துடைப்பத்தை எடுத்து வந்து தரையை
கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்தாள். ஜீவிகா ஒரு பழைய பாயும் ஒரு சிறிய தலையணையும் ஒரு
பெட்ஷீட்டும் எடுத்துவந்து கொடுத்தாள்.
அவற்றிலிருந்து வந்த மணம் அவை பல நாட்கள் பாவனைக்கில்லாதிருந்ததை
அபிதாவுக்கு உணர்த்தியது. தனக்கான இருப்பிடத்தை தயார் செய்துகொண்டே, அந்த வீட்டின்
எஜமானியும் மற்றவர்களும் இடும் கட்டளைகளை நிறைவேற்றியவாறு
எஞ்சியிருக்கும் காலத்தை ஓட்டிவிடவேண்டியதுதான்.
கற்பகம் ரீச்சரின் அறையிலிருந்து ஒலித்த சுப்ரபாதத்தை கேட்டுக்கொண்டே,
தரையில் விரித்த பாயில் சரிந்து கண்களை மூடினாள். எந்தவொரு புதிய சூழலும் பார்க்கும்
புதிய காட்சிகளும் கடந்த காலத்தின் ஏதோ ஒரு
புள்ளியில் சங்கமிக்கும் விந்தையை எண்ணியவாறு உறக்கத்தை அழைத்தாள்.
அது மிகவும் தாமதமாகத்தான் வந்து அவளது கண்களை தழுவியது.
அந்த உறக்கம் அழைத்துச்சென்ற பாதையில் வவுனியாவில் அவள் ஏறியிருந்த
பஸ்ஸின் சாரதி, நிகும்பலை மாரிஸ்ட்டலா கல்லூரியின் முன்னால் திடீரெனத்தோன்றிய அந்த
பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் சாரதி, கோயில்கள்,
தேவாலயங்கள், ஜீவிகா….. சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்து வந்துபோனார்கள்.
பொலிஸ் வாகனத்தில் வரும்போது தென்பட்ட காளிகோயில், வற்றாப்பளை கண்ணகி அம்மன்கோயில்போன்று
ஏன் காட்சியளிக்கிறது? அந்த வாசலிலும் இராணுவம்
ஏன் நிற்கிறது ? அந்த இடத்தில் கைகளை உயரத்தூக்கியவாறு
நின்றுகொண்டு, “ போ… போ… போய் பிள்ளையை பார். இங்கே வராதே…. “ என்று கணவன் பார்த்திபன் ஏன் கத்துகின்றான்.
நான் எங்கே நிற்கின்றேன். நிகும்பலையிலா, முல்லைத்தீவிலா, வவுனியாவிலா…?
அபிதாவை ஆரத்தழுவ முயற்சிக்கும் நித்திராதேவி, துர்க்கனவுகளையும் சுமந்துவந்து சலிப்படையச்செய்தாள்.
அரைமணிநேரத்திற்குள் அபிதாவின் உறக்கம் கலைந்தது. கண்களை மூடியவாறு
வெளியிலிருந்து வரும் ஓசைகளை கூர்ந்துகேட்டாள். அருகிலிருந்த அறையில் தங்கியிருப்பது ரீச்சரம்மா
என்று ஜீவிகா சொன்னாளே! அவர் காலையில் துயில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்பாரோ? இனி இந்த வீட்டில் தானும் அதனை தினமும் கேட்கலாம்.
ஆங்கிலேயர்கள் Good
Morning என்ற இரண்டு சொற்களை
சுப்ரபாதத்திலிருந்தே பெற்றிருக்கவேண்டும் என்று அபிதாவின் அப்பா ஒரு தடவை அவளிடம்
சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் தமிழ் – சமய பாட ஆசிரியர். வீட்டில் தினமும் காலையில்
சுப்ரபாதம் ஒலிக்கும்.
கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா சந்த்யா ப்ரவத்ததே…. வால்மீகி ராமாயணத்தில்
வடமொழியில் தொடங்கும் அந்த வரிகளுக்கு அபிதாவின்
அப்பா அர்த்தம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
கௌசல்யா, புண்ணியம் செய்து பெற்ற மகனே… இராமா, அந்த வனப்பிரதேசத்தில் தவமிருக்கும் முனிவர்களுக்கு
அநியாயம் செய்துகொண்டிருக்கும் அரக்கர்களை அழித்து, அவர்களிடம் சிக்கியிருக்கும் தவ முனிவர்களை காப்பாற்று. அந்த அரக்கர்களை அடித்து வீழ்த்துவதற்கு எழுந்து
செல். “ எனச்சொல்லி இன்றைய காலைப்பொழுது உனக்கு
இனிதாக அமையட்டும் என்று விசுவாமித்திர முனிவர் இராமனை எழுப்பினாராம்.
இது உண்மையா…? பொய்யான புனைவா…? என்பது தெரியாமல் இந்துக்களின்
வீடுகளில் தினம் தினம் அதிகாலையே சுப்ரபாதம் ஒலிக்கிறது என்றார் அப்பா.
“ அரக்கர்கள் எப்படி இருப்பார்கள் ….? “ எனக்கேட்டாள், இராமரை படங்களில் பார்த்திருக்கும்
அபிதா.
அப்பாவுக்கும் தெரியாது. அவர் இலங்கை சுதந்திரம்பெற்றதன் பின்பு
தோன்றிய சீருடை அரக்கர்கள், சிவிலுடை அரக்கர்கள்
பற்றி தனக்குத்தெரிந்ததை சொல்லியிருக்கிறார்.
வன்னிபெருநிலப்பரப்பில் சிக்கியிருந்த மக்களை அரணாக வைத்திருந்தவர்களையும்
அவர்களின் மீட்பர்கள் எனச்சொல்லிக்கொண்டு வந்தவர்கள்
செய்த அநியாயங்களையும் காண்பதற்கு அப்பா இருக்கவில்லை. இருந்திருந்தால்,
தினமும் காலையில் ஒலித்த சுப்ரபாதத்திற்கு வேறு விளக்கம் தந்திருப்பார்.
இன்னும்தான் சுப்ரபாதம் ஒலிக்கிறது. அது அனைவருக்கும் நல்ல பொழுதாக விடியட்டும் என்று அறைகூவல் விடுத்துவருகிறது.
“ எனக்கு இன்று விடிந்த இந்த காலைப்பொழுது நல்லபொழுதாக
அமையுமா…? “ அபிதா தனக்குள் கேட்டுக்கொண்டாள்.
அவள் உறக்கம் வராமல் தவித்த, அந்த களஞ்சிய அறையில் படுத்திருந்த
பாயில் கால் அருகில் ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்து வந்து நின்றது. அதுவே, அவளது வலது
பாதத்தில் நகர்ந்து துயில் எழுப்பியது. விசுவாமித்திரர்தான்
கரப்பான்பூச்சியாக உருவெடுத்து வந்திருப்பாரோ?
அவ்வாறு கற்பனை செய்வதற்கும் அவளால் முடிகிறது.
காலை உதறிக்கொண்டு எழுந்தாள்.
வெளியே பேச்சரவம் கேட்கிறது. அது ஜீவிகாவின் குரல் அல்ல. “ வேலைக்கு ஆள் வந்தாச்சா..? “
“ ஓம் ரீச்சர் “ என்கிறாள் ஜீவிகா.
அப்படியாயின் இதுவரையில் அந்த அறையில் சுப்ரபாதம் ஒலிக்கச்செய்த கற்பகம் ரீச்சரின்
குரல்தான் அதுவென்று அபிதா ஊகித்துக்கொண்டாள்.
அன்றைய காலைப்பொழுதில் அந்த வீட்டில் அதுவரையில் அபிதா சந்தித்து
பேசியது ஜீவிகாவை மாத்திரமே. இனித்தான் மற்றவர்களை பார்க்கவிருக்கிறாள்.
இவர்கள் அனைவரதும் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? தன்னை அன்பாக
நடத்துவார்களா? தனது கடந்த கால கதைகளை அனுதாபத்துடன் கேட்பார்களா? போர் முற்றி, முற்றாக சிதைந்த மண்ணில் நெருப்பாற்றை கடந்துவந்திருக்கும்
தன்மீது இவர்கள் எத்தகைய அபிப்பிராயம் கொண்டிருப்பார்கள்…?
அரக்கர்கள் மத்தியில் அல்லோலகல்லோலப்பட்டு. கணவனையும் குழந்தையையும்
அறிந்த தெரிந்த மக்களையும் இழந்து, தனிமரமாகியிருக்கும் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள
எத்தனை வினாக்கொத்துக்களை தயார் செய்து வைத்திருப்பார்கள்?
அந்த களஞ்சிய அறையின் சுவரில் தான் பின்னிய வலையில் தானே சிக்குண்டு
அதிலிருந்து வெளியே வரமுடியாதிருக்கும் அந்தச்சின்னஞ்சிறிய சிலந்தியைப்போன்று தானும் ஆகிவிட்டேனா? என்ற கேள்வி உதிர்ந்தவேளையில், வெளியே
தொலைக்காட்சியில் அன்றைய ராசி பலனை யாரோ ஒருவர் சொல்லியவாறு, அன்றைய தினம் எந்தக்கடவுளை வணங்கவேண்டும் என்றும்
உபதேசம் செய்துகொண்டிருந்தார்.
தொலைக்காட்சி சோதிடரிடம்
தங்கள் எதிர்காலத்தை ஒப்படைத்திருப்பவர்களும் இந்த வீட்டில் இருக்கிறார்களா..? அது
யாராக இருக்கும்? சுப்ரபாதம் கேட்டுக்கொண்டிருந்த
கற்பகம் ரீச்சராகத்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே
வந்தாள் அபிதா.
அந்தக் கூடத்தில் ஜீவிகா, ஒரு குஷன் ஆசனத்தில் அமர்ந்து கைத்தொலைபேசியில்
ஏதோ பார்த்து அழுத்திக்கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சியில் மீன ராசிக்குரிய பலன் சொல்லப்படுவதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பவள்தான்
கற்பகம் ரீச்சர் என ஊகித்துக்கொண்ட அபிதா,
“ வணக்கம் ரீச்சர் “ என்றாள்.
அதுவரையில் முகநூலில்
முகம் புதைத்திருந்த ஜீவிகா, “ ரீச்சர், இதுதான்
இன்று பொலிஸ் மரியாதையுடன் எங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் புதிய விருந்தினர். “ என்று அபிதாவை கற்பகம் ரீச்சருக்கு அறிமுகப்படுத்தினாள்.
ஏதோ நகைச்சுவைத் துணுக்கை உதிர்த்துவிட்ட உணர்வோடு சிரித்தாள். மூடியிருக்கும் அடுத்த இரண்டு அறைகளையும் ஏறிட்டு
நோக்கினாள்.
“ தூக்கம் வந்ததா…? “ எனக்கேட்ட ஜீவிகா பக்கம் திரும்பி இல்லை என தலையாட்டிய அபிதா,
தான் வணக்கம் சொன்ன கற்பகம் ரீச்சர் அதற்கு பதில் வணக்கம் சொல்லாமல்
தொடர்ந்தும் தொலைக்காட்சியில் ராசிபலன் பார்த்துக்கொண்டிருந்தமையால் சற்று ஏமாற்றமடைந்தாள்.
கற்பகம் ரீச்சர் கற்பிக்கும்
பாடசாலையிலும் வகுப்பறை மாணவர்கள் சொல்லும்
காலை வணக்கத்திற்காவது இவர் பதில் வணக்கம்
சொல்வாரா…? வீட்டு வேலைக்கு வந்திருக்கும்
வேலைக்காரிக்கு ஏன் பதில் வணக்கம் சொல்லவேண்டும் என்று யோசிக்கிறாரா?
ஜீவிகா, அபிதாவை சமையலறைக்கு அழைத்துச்சென்று அங்கு செய்யவேண்டிய
முதல் வேலைகள் பற்றி சொல்லத்தொடங்கினாள்.
பாத்திரங்கள் கழுவும் சிங்கில் முதல்நாள் பயன்படுத்தப்பட்டவை குவிந்திருந்தன. அபிதா அவற்றை
கழுவத்தொடங்கினாள்.
பின்னால் வந்த கற்பகம் ரீச்சர், “ சேலையை கட்டிக்கொண்டு, இந்த வேலைகளை செய்யமுடியாது.
இந்தா வீட்டுக்கு உடுத்திக்கொள்ள ஒரு உடுப்பு.
“ என்று தனது பாவிப்பிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு பழைய நிறம் மங்கிப்போன
ஆடையை நீட்டினாள்.
பதில் வணக்கம் சொல்லத்தெரியாத கற்பகம் ரீச்சரிடமிருந்து அவள்
பெற்ற முதலாவது பரிசு அந்த பழையபுடவை.
“ தேங்க்ஸ் ரீச்சர்..
“
அதற்கும் கற்பகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. “ ம்
“ என்ற முணகல்தான் சன்னமாக ஒலித்தது.
“ மற்றவங்க எப்ப எழும்புவாங்க
அம்மா…? “
“ இன்றைக்கு சனிக்கிழமை. வழக்கமாக வார விடுமுறை நாட்களில் ரீச்சரைத்தவிர
மற்றவர்கள் பிந்தித்தான் எழுந்திருப்போம். இன்றைக்கு நீ வந்தபடியால், நான் முதலில்
எழும்ப நேர்ந்தது. வழக்கமாக கற்பகம் ரீச்சர்தான் முதலில் எழும்புவாங்க. அவங்கட ரேடியோவில வரும் சுப்ரபாதம்தான் அவுங்களே
வைத்துக்கொள்ளும் அலார்ம்.
வேலை நாட்களில் முதலில் வெளியே போவதும் ரீச்சர்தான். அதற்குப்பிறகு
நான், எனக்குப்பிறகு, மஞ்சுளா. அவவுக்குப்பின்னர் சுபாஷினி. அதனால் எல்லோரும்
எழுந்திருக்க முன்னமே நீ எழுந்திடவேணும். காலையிலேயே எழுந்திருக்கும் பழக்கம் இருக்கிறதா? “ எனக்கேட்ட ஜீவிகாவிடம், “ ஓமோம்
“ என்ற பதிலை தலையாட்டிச்சொன்னாள் அபிதா.
“ இந்த தலையாட்டுற பழக்கம்
இங்கே வேணாம். வாயைத்திறந்து பதில் சொல்லவேணும் தெரியுமா.. ..? “
“ சரியம்மா. எல்லோருக்கும் முன்பே நான் எழுந்திடுவன். எழுந்ததும்
நான் என்ன என்ன செய்யவேணும் என்று சொல்லித்தாங்க.. “
“ நன்றாக சமைக்கத்தெரியுமா…? “ இது கற்பகம் ரீச்சர்.
“ அதனால்தானே இந்த வேலைக்கு
வந்தேன். “
“ காலைச்சாப்பாடு என்ன
என்ன செய்யத்தெரியும்….? “ இது ஜீவிகா.
“ இடியப்பம், தோசை,
இட்டலி, புட்டு, பொங்கல், நூடில்ஸ் “
“ காலையில் முதலில்
வேலைக்குப்போவதும் நான்தான், பின்னேரம் முதலில் வீடு திரும்புவதும் நான்தான். நான்
வரும்போது பகல் சமையல் முடிந்திருக்குமா…? – இது கற்பகம் ரீச்சர்.
“ ஓம் ரீச்சர். செய்திடுவேன்.
என்ன செய்யவேணும்? எது எது சமைக்கவேணும்…?
“
“ இறைச்சி, மீன் சமைக்கத்தெரியுமா..? “ இது ஜீவிகா.
அந்தக்கேள்விக்கு அபிதாவிடமிருந்து
தயங்கிய குரலில் பதில் வந்தது. மீன், இரால், நண்டு சமைப்பேன். இறைச்சிதான்….? தெரியாது.
“
“ அதனையும் சமைக்கப்பழகவேண்டியதுதானே…? “ என்ற குரலுடன் ஒரு பெண் அங்கு திடீரென்று பிரசன்னமானாள்.
இவள் யார்….? மஞ்சுளாவா…? சுபாஷினியா…? அபிதா ஏறிட்டுப்பார்த்தாள்.
“ வெல் கம் டு நிகும்பலை…! “ கைநீட்டி அபிதாவின் வலதுகை பற்றி
குலுக்கியாவாறு, “ நான்தான் சுபாஷினி “ என்றவளை அபிதா பரவசத்துடன் பார்த்தாள்.
சுபாஷினியின் அந்தத் தொடுகையில், தொட்டிலில் கிடத்தப்படுவதற்கு முன்னர் தனது நெஞ்சோடு உறங்கியிருந்த குழந்தை
தமிழ்மலரின் இறுதித் தொடுகை தந்த மென்மையான
உடல்சூட்டை அபிதா உணர்ந்தாள்.
வெடிக்கவிருந்த பெரிய விம்மலை சிரமப்பட்டுத் தணிக்க பாத்திரம்
கழுவும் சிங்தொட்டியின் பக்கம் முகத்தை திருப்பினாள்
அபிதா.
( தொடரும் )
No comments:
Post a Comment