எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா !

 








 




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         

மெல்பேண் .... அவுஸ்திரேலியா   



வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா 

பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா 

உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா 

எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா  


மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும் 

மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா 

மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின் 

மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா  


கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே 

நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே 

இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து 

உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே  


விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து 

வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து 

உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு 

புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு  


போரிடும் எண்ணம் புதைந்து விட வேண்டும் 

யாரிடமும் பகைமை கொள்ளாமை வேண்டும் 

சமத்துவமும் நீதியும் நிறைந்திடவே செய்யும் 

சாதுர்யம் மிக்க புத்தாண்டாய் மலர்க  


இருபத்து ஆறு எல்லோர்க்கும் நல்லதை 

ஈய்கின்ற ஆண்டாக இருந்திடவே வேண்டும் 

இன்னல் அகன்று எல்லோரும் நலமாய் 

இருக்கின்ற ஆண்டாக இறைவாநீ ஆக்கிடுவாய்  


நலமோங்க வேண்டும் வளமோங்க வேண்டும் 

நிலமீது யாவருக்கும் நிம்மதியே வேண்டும் 

அளவில்லா அருளுடைய ஆண்டவனே நீயும் 

அனைவர்க்கும் அருந்துணையாய் அமைந்துவிடு நாளும் !



No comments: