வீர அபிமன்யு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 மகாபாரதத்தில் அபிமன்யு, வத்சலா காதல் மிகவும் பிரசித்தமானது.


இந்தக் காதலை அடிப்படையாகக் கொண்டு மூன்று முறை அபிமன்யு கதை தமிழில் படமானது. 1940களில் ஜுபிடர் தயாரிப்பில் அபிமன்யு படமாகி வெற்றி கண்டது. தொடர்ந்து 1950களில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாயா பஸார் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. 1960களில் இதே அபிமன்யு, வத்சலா காதலும் , அபிமன்யுவின் வீரமும், வீர அபிமன்யு என்ற பேரில் படமானது.


முதல் அபிமன்யுவின் யூ ஆர் ஜீவரத்தினம், குமரேசன் ஜோடியாக

நடிக்க , எம் ஜி ஆர் அர்ச்சுனனாக நடித்தார். இரண்டாவதில் ஜெமினி, சாவித்திரி ஜோடியாக நடிக்க, எஸ் வி ரங்காராவ் கடோஜ்கஜானாக நடித்தார். மூன்றாவதில் ஏவி எம் ராஜன், காஞ்சனா ஜோடி சேர்ந்தார்கள். மாயா பஸாரில் அபிமன்யுவாக நடித்த ஜெமினி இதில் கிருஷ்ணராக நடித்தார். படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக வீர அபிமன்யு அமைந்தது.

அபிமன்யுவை வயிற்றில் சுமந்த படி அரைத் தூக்கத்தில் கதை கேட்கிறாள் அர்ச்சுனன் மனைவி சுபத்திரை. போர் நடக்கும் போது பத்ம வியூகத்தை உடைத்துக் கொண்டு அதனுள் நுழைந்து போரிடுவது எப்படி என்பதை அர்ச்சுனன் சொல்ல தாயின் கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு அதனை கேட்டு உம் கொட்டுகிறான் . உள்ளே நுழைந்த பத்ம வியூகத்தில் இருந்து வெளியேறுவது எவ்வாறு என்பதை அர்ச்சுனன் சொல்லத் தொடங்க திடீரென அங்கு வரும் கிருஷ்ணா பகவான் இடையூறு செய்து அவ்வாறு சொல்வதை தடுத்து விடுகிறார். அபிமன்யு வளர்ந்து உத்திரையை சந்தித்து இருவரும் காதலில் மூழ்குகிறார்கள் . கல்யாணமும் நடை பெறுகிறது. அஞ்ஞான வாசம் முடித்து நாடு திரும்பும் பாண்டவர் தங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தருமாறு கேட்டு கிருஷ்ணரை கௌரவர்களிடம் தூது அனுப்புகிறார்கள். கிருஷ்ணா தூது தோல்வியில் முடிகிறது. பாண்டவர், கௌரவர்களிடையே குருஷேத்திர போர் வெடிக்கிறது. போரில் புயல் என கலந்து கொள்ளும் அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் ஊடுருவிச் சென்று போரிடுகிறான். ஆனால் பத்ம வியூகத்தை தகர்த்து வெளியேறும் வித்தை அவனுக்குத் தெரியாமல் போகிறது. எதிரிகளால் சூழப்படுகிறான் அவன்.
 

மகாபாரதத்தில் காதலும், வீரமும் கலந்து சுவை சேர்க்கும் அபிமன்யு கதையை ஓரளவு பிரம்மாண்டமாக படமாகத் தயாரித்தார் சுந்தராவ் நஹதா. அரங்க அமைப்புகள், காட்சி ஜோடனைகள், தந்திரக் காட்சிகள் என்று படம் உருவாகியிருந்தது. அபிமன்யுவாக ஏவி எம் ராஜன், உத்தரையாக காஞ்சனா இருவரும் நடித்தனர். இருவரும் தோன்றும் காதல் காட்சிகள் ரசனையுடன் படமாக்கப்பட்டிருந்தன. அதே போல் அபிமன்யுவை போருக்கு போகாது அவனை சிற்றின்பத்தில் ஈடுபட செய்யும் நோக்கில் பாடும் பாட்டில் காஞ்சனாவின் நடிப்பு மிளிர்ந்தது. ஏவி எம் ராஜனும் இளமையுடன் காட்சியளித்தார்.

கிருஷ்ணராக வரும் ஜெமினி பாத்திரத்துக்கு பங்கம் வராமல்

நடித்திருந்தார். அவருடைய வசன உச்சரிப்பு, பாவனை, நடிப்பு எல்லாம் கிருஷ்ணராக அவரை நிரூபித்தது. அர்ச்சுனனாக வரும் பாலாஜி இடையில் பெண் வேடம் அணிந்து வரும் கட்சியில் நம்மை கவருகிறார். நாகேஷ் இல்லாத படமா! இதிலும் இருக்கிறார் முடிந்த வரை சிரிக்க வைக்கிறார். ஆனால் வீர கடோஜகஜானாக வரும் ஓ ஏ கே தேவர் நடிப்பும் கவரத்தான் செய்கிறது. இவர்களுடன் டி .கே. பகவதி, எஸ் வி சகஸ்ரநாமம்,எஸ் வரலஷ்மி, எம் கே முஸ்தபா,ஈ ஆர் சகாதேவன், கீதாஞ்சலி, ஆகியோரும் நடித்திருந்தனர்.


படத்துக்கான வசனங்களை புது வசனகர்த்தா எஸ் ஐ பெருமான் எழுதியிருந்தார். ஆங்காங்கே அவரின் வசனங்கள் பளிச்சிட்டன. படத்தை ரவி ஒளிப்பதிவு செய்தார். பசுமர்த்தி கிருஷ்ணமுர்த்தி, வெம்பட்டி சத்யம் இருவருடைய நடன அமைப்புகள் சிறப்பாக அமைந்தன. கிருஷ்ணாராவின் அரங்க அமைப்புகளும் தரமாக இருந்தன. புராண படங்களுக்கு இந்தத் தகுதிகள் தேவைதானே.

வீர அபிமன்யுவுக்கு மகுடமாக அமைந்தது அதில் இடம் பெற்ற பாடல்கள்தான். கண்ணதாசன் கண்ணதாசன் தான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் பாடல்களை புனைந்திருந்தார் அவர். பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் பாடல் தேனாய் இனித்தது. போவோம் புது உலகம், வேலும் வில்லும் விளையாட பாடல்கள் இலக்கிய சுவையை சொரிந்தன. நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே பாடல் சிருங்கார சுவையில் உத்திரையின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதுவதாக ஒலித்தது. கள்ளத்தனமே உருவாய் கொண்ட காரியக் கண்ணா வா பாடல் கண்ணனை சிறுமைப் படுத்துவதாகத் தொடங்கி பின்னர் மேன்மைப்படுத்துவதாக கவிஞரால் எழுதப்பட்டது. படத்துக்கான இசை திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். உண்மையில்" மகா " தேவன்தான்!

படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் கே . காமேச்வரராவ்

இயக்கி இருந்தார். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படம் தயாரானது. தெலுங்கில் அபிமன்யுவாக சோபன்பாபு நடிக்க, கிருஷ்ணராக என் டி ராமராவ் நடித்தார். இரு படத்திலும் காஞ்சனாதான் ஹீரோயின். தெலுங்கில் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் தமிழில் ஏனோ வெற்றி பெறவில்லை. ஆனாலும் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப் படுகின்றன!

No comments: