தைத்திருநாள் வருகையைக்
கொண்டாடு முகமாக, பரமற்றா நகரில் St Patricks cathedral வளாகத்தில்,
பரமற்றாப் பொங்கல், தமிழ் மக்களுடன் பிற
மக்களும் கலந்து கொள்ள சிறப்பாகக் நடைபெற்றது.
கடந்த 21 ம் திகதி சனிக்கிழமை (யனவரி) முற்பகல் 11 மணிக்கு இறை
வணக்கத்துடன் ஆரம்பித்து, பல்வேறு
கலைநிகழ்வுகளையும் அரங்கேற்றி, வருகை தந்திருந்த அனைவருக்கும் பொங்கல்,
சிற்றுண்டிகள் வழங்கியது மட்டுமன்றி பிற்பகல் 2 மணியளவில் சுவையான சைவ மதிய உணவும்
பரிமாறப்பட்டு நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் Lord
Mayor Donna Davis (Parramatta), Mayor
Lisa Lake (Cumberland council), Mayor
Peter Gengami (Hills shire council), Hon.
Dr Geoff Lee (Minister for corrections, Parramatta
state MP), State MP Julia Finn (Granville), Melissa
Monteiro (CEO, Community Migrant Resource Centre), Yamamah
Agha (Manager, Settlement services international,) ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். வழமைபோல Community
Migrant Resource Centre ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வினை Diocese of Parramatta,
Peace Justice Ecology, Settlement services international, அன்பாலயம் அவுத்திரேலியா, அவுத்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அவுத்திரேலியக் கம்பன் கழகம் சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினர்,
அவுத்திரேலியா தமிழ் முரசு மற்றும் தமிழ்ப்பெண்கள் அபிவிருத்திக் குழுவினர் ஆகிய
நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தன.
Community
Migrant Resource Centre என்பது அவுத்திரேலியாவில் குடியேறும்
மக்கள் அதிலும் குறிப்பாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக இயங்கும் ஒரு நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் ஆதரவில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பரமற்றா பொங்கல்
நடைபெற்று வருகின்றது. அங்கு பணிபுரியும் கொன்சிலா ஜெறோம் என்பவரே இந்த நிகழ்வினை
ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தி வருகின்றார். மேலே கூறப்பட்ட தமிழ் அமைப்புகளும் இவருடன் இணைந்து பரமற்றா பொங்கலை
முன்னெடுப்பதில் விருப்புடன் உழைத்து வருகின்றனர். இது மட்டுமன்றி இந்த
நிறுவனத்தின் உதவியுடன் கற்றலில் இடர்ப்படும் மாணவர்களுக்கான படிக்க உதவும் வகுப்புகள்,
வளர்ந்தவருக்கான தையல் வகுப்புகள், கணினி வகுப்புகள் போன்ற மேலும் பல வகுப்புகள்
இவரால் ஒழுங்கமைத்து நடாத்தப்படுகின்றன. நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் நடனம் வழங்கிய
மயூரகீதன் சபாரத்தினம், உரை வழங்கிய அகலவன் சிறீஸ்கந்தராஜா, ஆகியோரும், இன்னும்
பலரும் இந்நிறுவனத்துடன்
தொடர்புடையவர்களே.
Most Rev
Vincent Long (Bishop of Parramatta) பரமற்றா ஆயர்
அவர்களின் தலைமையில் இறைவனுக்குத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆயர் அவர்கள்
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமல்ல, 1980 ம் ஆண்டில் படகு மூலம்
அவுத்திரேலியா வந்த ஒருவர் என்பதனையும் தனது பிரசங்கத்தில் கூறினார். உழவுத்தொழில்
மட்டுமன்றி, தமிழ் மக்களின் வாழ்வியல் வலிகளையும் புரிந்துகொண்டவன் என்ற வகையில்
இறைமகன் இயேசுபிரான் எல்லோருக்கும் நல்வாழ்வு வழங்கவேண்டும் என்றும், அவர்களின்
எதிர்பார்ப்புகள் நிறைவேறவேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை கொண்டாடும் நன்னாளில் இன்னும்
வாழ்விடத்திற்காக வருத்தப்படும் தமிழ் மக்களுக்காகவும்
இறைவனிடம் மன்றாடினார்.
ஆலய வழிபாடு நிறைவுற்றதும், தமிழர் மரபுப்படி ஆலய
முன்றலில் கோலம் போட்டு, நிறைகுடம் வைத்து
வாழை கரும்பு என்பன கட்டி அழகுற அமைக்கப்பட்டிருந்த பகுதியில் மங்கள
வாத்தியம், தவில் என்பன இசைக்கப்பட்டு,
அங்கிருந்து ஆயர், விருந்தினர்கள் மற்றும் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் பொங்கல்
மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவுத்திரேலியக்
கம்பன் கழகத்தினர் பொங்கல் மைதான அலங்காரத்தினை மேற்கொண்டிருந்தனர். மிகவும்
நேர்த்தியாகவும், எளிமையாகவும், வெகு சிறப்பாகவும், எல்லோரையும் கவரக்கூடிய
வகையிலும் அலங்காரம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் தொடர்பான மாதிரி செய்யப்பட்டது. பரமற்றாப்
பொங்கலின் பத்தாவது நிகழ்வு எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகளாக
மாதிரிப் பொங்கலாகவே இந் நிகழ்வு நடாத்தப்படுகின்றது. பொங்கல் முழுமையாகப்
பொங்குவதற்கு இதுவரை சிந்திக்கப்படவில்லை அதற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அவுத்திரேலிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பன
இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் என்ற வகையில் கொன்சிலா ஜெறோம் அவர்களின் வரவேற்புரையுடன் அரங்க நிகழ்வுகள்
தொடங்கின. முதலில் சிவசிறி. இந்திரன் குருக்கள் அவர்கள் பொங்கல் தொடர்பான
செய்திகளை கூறி தனது ஆசிகளைக் கூறினார். Rev. John Jegasothy – (Uniting
church) அவர்கள் பொங்கல் தொடர்பான உரையினை வழங்கினார். இவர்களுடன்
கலாநிதி. பாலா விக்கினேசுவரன், வழக்கறிஞர் துர்க்கா ஓவன்ஸ், மற்றும் செல்வன். அகலவன்
ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் பொங்கல் தொடர்பான உரைகளும், வருகை தந்திருந்த
விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
விருந்தினர்கள் தங்கள் உரையில் 1788 ம் ஆண்டில் ஆளுநர் ஆதர் பிலிப்
அவர்கள் Burramatta
எனும் நன்னீர் ஆறு அமைந்து உள்ளதையும், அருகில் விவசாயம் செய்யக்கூடிய நிலம் இருப்பதையும்
தெரிந்து கொண்டார். பின்னர் இங்கு விவசாயம் செய்யத் தொடங்கினர். பொங்கல் என்பது
விவசாயம் சார்ந்த ஒரு விழாவாக அமைவதால் பரமற்றா அதற்குப் பொருத்தமான ஒன்று என்றும்
குறிப்பிட்டனர். இந்த வேளையில் குறிப்பிடவேண்டிய முக்கிய செய்தியும் உண்டு.
தமிழர்கள் பழமையானவர்கள், பண்பாடுமிக்கவர்கள், மதிப்புக்கொடுப்பவர்கள் என்று குறிப்பிடுவர்.
ஆனால் உழைப்பின் மதிப்பை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். பொங்கல்
விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்மவர்களுக்கு
மாலை அணிவித்தால் உடனேயே அதனைத் திருப்பிக் கழற்றிவிடுவார்கள். பிறகு ஏன் மாலை
போடுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள்
தங்களுக்கு அணிவித்த மாலையை விழா முடியும்வரை கழற்றவில்லை. அதேபோன்று மேடையில்
போர்த்தப்பட்ட பொன்னாடையை மேடையில் பேசி முடியும்வரை போர்த்திக்
கொண்டிருந்தார்கள். விருந்தினர்களுக்கு
வழங்கப்பட்ட மாலைக்கும், போர்த்திய பொன்னாடைக்கும், அவர்களுக்கு அதனை
வழங்கியவர்களுக்கும் கொடுத்த மதிப்பினை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பரமற்றா பொங்கல் ஒழுங்கமைப்பில் இன்னொரு செய்தியையும் அவதானிக்கவேண்டும். தமிழர் விழா என்ற பெருமையுடன் நாங்கள் கூடி, எங்களுக்குள் பேசி, நாங்கள் விளையாடி மகிழ்வது மட்டும் விழா என்று கூறமுடியாது. எங்களது சிறப்புகளை பிற சமூகங்களும் அறியவேண்டும், அதனை அவர்கள் எடுத்துச்சென்று வேறு மக்களுக்கும் தெரிவிக்கவேண்டும். மேலை நாட்டவர்கள் தமிழர் நாடுகளுக்குள் புகுந்த பின்புதான் தமிழ் வளர்ச்சி கண்டது என்பதே வரலாறு. அதேபோன்று மேலை நாட்டவர்கள் வருகைதான் தமிழ் அச்சுப் பதிப்பு பெறவும், உரைநடை தோன்றவும் காரணமாயின. பரமற்றா பொங்கலுக்கும் பல்வேறு பதவி நிலையில் உள்ள வேறுபட்ட விருந்தினர்கள் வருகை தந்தமையும், இதேவேளை விடுமுறை நாள் ஒன்றில் அவர்களை முழுமையாகப் பங்குபெறச் செய்தமையும் விழா ஒழுங்காமைப்பாளரை பாராட்ட வைக்கிறது. அதேபோல அனைவரும் இலங்கையில் இருந்து வந்தாலும் எல்லோர் உளநிலையும் ஒன்று அல்ல. சிலர் எங்களுக்குக் குடியுரிமை எங்கள் தகுதியால் கிடைக்கும் என்று எண்ண, சிலர் வதிவிட உரிமை பெற்று விட்டோம், குடியுரிமை பெற்றுவிட்டோம் இனி வீடுகள் வாங்கிச்சேர்க்க வேண்டும் என்று எண்ண, சிலர் நாங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்று சொல்ல, இப்படித் தமிழன் காலம் செல்ல, இன்னும் அகதி என்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை நினைவு படுத்த வழிபாடு மூலம் என்றாலும் ஒரு முயற்சி எடுத்தமை முக்கியமான செய்தி.
பரமற்றாப் பொங்கலின் சிறப்பு விருந்தாக நடன நிகழ்ச்சிகள் அரங்கம் கண்டன. ஆசிரியர் செல்வராஜி இரங்கநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்கள், நடன ஆசிரியர் அஜந்தா இந்திரகுமார் அவர்களின் மாணவர்கள், சுகந்தி தயாசீலன் அவர்களின் சிட்னி கலாபவனம் மாணவர்கள், கம்பன்கழகம் ஆரணி மோகன், மற்றும் யசோதா பாரதியின் Bollyfit நடனப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் நடனங்களை வழங்கினர். நெற்பயிர் செய்தல், அறுவடை செய்தல் போன்ற நிகழ்வுகளை வெளிக்காட்டுமுகமாக நடனங்கள் அமைந்திருந்தன. இத்துடன் அன்பாலயம் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் சக்தி இசைக்குழுவின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
பொங்கல் விழாவின் அரங்க நிகழ்வுகளை திரு. அலோசியசு ஜெயச்சந்திரா, திருமதி.
சங்கீதா சிறீதரன் ஆகியோர் தொகுத்து வழங்கிய அதேவேளை, அவுத்திரேலியா ஒலிபரப்புக்
கூட்டுத்தாதாபனம் ஊடாக நிகழ்வின் நேர்முக
வர்ணனையை திரு ஈசன் கேதீசன், திரு. செல்லையா பாஸ்கரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
கம்பன் கழக நிர்வாகி திரு. ஜெயராம் ஜெகதீசன் அவர்களின் நன்றியுரையுடன் அரங்க
நிகழ்வுகள் நிறைவு பெற, சுவையான சைவ உணவு பரிமாறி பரமற்றா பொங்கல்விழா இனிது நிறைவேறியது.
No comments:
Post a Comment