உலகச் செய்திகள்

இந்திய கொவிட்-19 திரிபு 53 நாடுகளில் அடையாளம் 

நைஜீரியாவில் 200 பேரை ஏற்றிய படகு முழ்கியதில் பலரும் மாயம்

கொரோனா மூலத்தை கண்டுபிடிக்க அமெரிக்க ஜனாதிபதி பைடன் கெடு

பெலாரஸ் வான்பரப்பை தவிர்த்த விமானங்களுக்கு ரஷ்யா மறுப்பு

இஸ்ரேல் - காசா மோதல்: ஐ.நா புலன் விசாரணை

சிரிய ஜனாதிபதி தேர்தலில் அசாத்திற்கு 95.1 வீத வாக்கு


இந்திய கொவிட்-19 திரிபு 53 நாடுகளில் அடையாளம் 

புதிதாக உருமாறியுள்ள பி.1.617 ரக கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. அது முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் பி.1.617 ரக வைரஸ் மேலும் 7 இடங்களில் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவற்றையும் சேர்த்து மொத்தம் 60 நாடுகளில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பி.1.617 ரக வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது. எனினும், அதன் வீரியம், தொற்றின் அபாயம் ஆகியவை குறித்து ஆராயப்படுகிறது.

புதிதாக உருமாறிய 6 வகை கொரோனா வைரஸ்களும் கண்காணிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களுள் இரண்டு ரக வைரஸ்கள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டன.

இதர வகை உருமாறிய வைரஸ்கள் பிரேசில், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டன. 

உலகளாவிய ரீதியில் கடந்த வாரத்தில் புதிய தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக குறைந்துள்ளன. இதன்படி 4.1 மில்லியன் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு மேலும் 84,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் முறையே 14 மற்றும் இரண்டு வீத வீழ்ச்சியாக உள்ளது.

இதில் ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த ஏழு நாட்களில் நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் பெருமளவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக அந்தப் பிராந்தியத்தின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருப்பதோடு அதற்கு அடுத்து தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.    நன்றி தினகரன் 





நைஜீரியாவில் 200 பேரை ஏற்றிய படகு முழ்கியதில் பலரும் மாயம்

வடமேற்கு நைஜீரிய நதி ஒன்றில் 200 பேருடன் பயணித்த படகு ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கிய சம்பவத்தில் பலரும் காணாமல்போயிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நைகர் மாநிலத்தில் இருந்து அண்டைய மாநிலமான கெப்பியை நோக்கி பயணித்த இந்தப் படகில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகமாக இருந்துள்ளனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நைகர் நதியில் இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் சுழியோடிகள் மற்றும் அவசரப் பணியாளர்கள் உயிர் தப்பியோரை தேடி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

‘வெறும் 20 பேர் மாத்திரமே உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். நால்வர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. எஞ்சி 156 பேரும் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர். அவர்கள் நீருக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது’ என்று தேசிய உள்நாட்டு நீர்வழி அதிகாரசபையின் உள்ளூர் முகாமையாளர் யூசுப் பிர்மா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதிக அளவான பயணிகளை ஏற்றிய இந்தப் படகில் தங்கச் சுரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் மூடைகளும் ஏற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அருகாமை நகரில் ஐந்து சடலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாகவும் மேலும் சடலங்கள் கரைக்கு அடித்துவரப்படலாம் என்றும் அந்த நகரைச் சேர்ந்த காசிமு உமர் வாரா தெரிவித்துள்ளார்.

‘காணாமல் போனவர்களில் எனது சகோதரரும் இருக்கிறார். இந்த நதியில் ஏற்பட்ட மிக மேசமான விபத்து இதுவாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.    நன்றி தினகரன் 





கொரோனா மூலத்தை கண்டுபிடிக்க அமெரிக்க ஜனாதிபதி பைடன் கெடு

சீன ஆய்வுகூடத்தில் இருந்து கொவிட்-19 தொற்று தோன்றியதான கூற்று உட்பட, இந்த வைரஸ் தொற்றின் மூலம் பற்றிய விசாரணையை இரட்டிப்பாக்கும்படி உளவுத் துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தொற்று ஆய்வுகூட விபத்தில் இருந்து தோன்றியதா அல்லது தொற்று உள்ள விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியதா என்பதில் அமெரிக்க உளவுத்துறை பிளவுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

90 நாட்களுக்குள் இது பற்றிய அறிக்கையை தமக்க சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுக்களுக்கு பைடன் கெடு விதித்துள்ளார்.

ஆய்வுகூடத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படும் கூற்றை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

‘மேலோட்டமான பிரசாரங்கள் மற்றும் மாறி மாறி இடம்பெறும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடிப்பதோடு ஆய்வுகூட கசிவு என்ற இருண்மை கோட்பாடு மீண்டும் எழுப்பப்படுகிறது’ என்று அமெரிக்காவுக்கான சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீன நகரான வூஹானில் 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை அந்த நோய்த் தொற்றினால் உலகெங்கும் 168 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்ப கொவிட் தொற்று சம்பவங்கள் வூஹான் நகர கடலுணவுச் சந்தையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு தொற்றியிருக்கலாம் என்ற கோட்பாடு விஞ்ஞானிகளிடையே வலுத்தது. ஆனால் இந்த வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து பரவியதற்கு ஆதாரங்கள் வலுத்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் அண்மைய நாட்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்செயலாக இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆனால், இந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் மூலம் தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடனேயே தொற்று பரவிய விலங்கிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு பரவியதா அல்லது அது ஒரு ஆய்வக சம்பவமா என்பதை விளக்குமாறு அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை’ என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் பாராளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சீன ஆய்வாளர்களுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியம் முழுமையாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் மேலும் ஆய்வு தேவை என்று உலக சுகாதார அமைப்பு அப்போது கூறியது.

இந்த நிலையில், அமெரிக்க உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்த சமீபத்திய தகவல்களின்படி, சீனாவில் முதலாவதாக புதிய வைரஸ் கண்டறியப்பட்டதை அந்நாடு ஏற்றுக் கொள்ளும் முன்னரே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை வூஹானின் வைரோலஜி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, முதன்மை சுகாதார ஆலோசகராக இருந்த அன்டனி பௌட்சி, விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்க வேண்டும் என்று கூறினார். இந்த மாதம் அவர், கொவிட்-19 வைரஸ் இயற்கையாக உருவானது என இனியும் நம்பவில்லை என்று கூறினார்.

கொரோனா வைரஸின் மூலம் தொடர்பரான விசாரணை, வெளிப்படையாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெக்கெர்ரா கருத்து வெளியிட்ட சில நாட்களில் ஜனாதிபதி பைடனின் கண்டிப்பான உத்தரவு வெளிவந்துள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.   நன்றி தினகரன் 







பெலாரஸ் வான்பரப்பை தவிர்த்த விமானங்களுக்கு ரஷ்யா மறுப்பு

பெலாரஸ் வான்பரப்பை தவிர்த்து மொஸ்கோ நகரை அடைய திட்டமிட்ட இரு ஐரோப்பிய விமானங்கள் நுழைவதற்கு ரஷ்யா அனுமதி மறுத்துள்ளது. இதனால் ஏயார் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய ஏயார்லைன் விமானங்கள் தமது ரஷ்ய விமானப் பயணங்களை ரத்துச் செய்துள்ளன.

ஐரோப்பிய விமானம் ஒன்றை பெலாரஸ் வலுக்கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தை அடுத்து அந்நாட்டு வான்பரப்பை தவிர்க்கும்படி ஐரோப்பிய விமானங்களை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பெலாரஸில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அந்நாட்டு அரசுக்கு எதிராக ஊடகவியலாளர் மற்றும் அவரது காதலி இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பெலாரஸின் செயற்பாடு குறித்து உண்மை அறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று ஐ.நா சிவில் விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா பெலாரஸின் நெருங்கிய நட்பு நாடாக இருப்பதோடு தற்போதைய பிரச்சினை பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  நன்றி தினகரன் 






இஸ்ரேல் - காசா மோதல்: ஐ.நா புலன் விசாரணை

இஸ்ரேல் மற்றும் காசா இடையே இடம்பெற்ற அண்மைய மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக ஒன்பது வாக்குகளும் பதிவாகியுள்ளன.

எனினும் இந்த முடிவு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கு பாதகமாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எகிப்து மத்தியஸ்தத்துடன் கடந்த வாரம் முடிவுக்கு வந்த 11 நாள் மோதலில் காசாவில் குறைந்தது 242 பேர் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 13 பேர் பலியாகினர்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசாவில் இடம்பெறும் உரிமை மீறல்களை அறிக்கையிட நிரந்தர விசாரணைக் குழு ஒன்றை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பதற்றம், ஸ்திரமற்ற சூழல் மற்றும் தொடரும் மோதலுக்கு காரணமான அனைத்து நிலைமைகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவும் இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பேரவை அமர்வை ஆரம்பித்து உரையாற்றிய அதன் தலைவர் மிச்சலே பச்செலெட், காசாவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் போர் குற்றங்களாக கருதப்படலாம் என்று எச்சரித்தார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானத்திற்கு பல மேற்குல நாடுகள் உட்பட ஒன்பது உறுப்பு நாடுகள் எதிராக வாக்களித்ததோடு மேலும் 14 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன. ஆதரவாக வாக்களித்த நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யாவும் அடங்கும்.

இந்த பேரவையின் கண்காணிப்பாளர் அந்தஸ்த்தை மாத்திரமே அமெரிக்கா பெற்றுள்ளது. அந்த நாடு இது தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கவில்லை.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டு ஜெனீவாவில் ஐ.நா அமைப்புக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா மனித உரிமை பேரவை அப்பட்டமான இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருப்பதன் மற்றொரு உதாரணம் இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 






சிரிய ஜனாதிபதி தேர்தலில் அசாத்திற்கு 95.1 வீத வாக்கு

சிரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய பஷர் அல் அசாத் நான்காவது தவணைக்கு பதவி ஏற்கவுள்ளார். இந்தத் தேர்தலில் 78.6 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றதாகவும் அசாத் 95.1 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாகவும் சபாநாயகர் ஹம்மவுதா சபாக் கடந்த வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலூ அப்துல்லா மற்றும் மஹ்மூத் அஹமது மாரி ஆகியோர் முறையே 1.5 மற்றும் 3.3 வீத வாக்குகளையே வென்றுள்ளனர்.

எனினும் இந்தத் தேர்தல் ஒரு கேலிக்கூத்து என்று சிரிய எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டிருப்பதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இது சுயாதீனமான அல்லது நியாயமான தேர்தல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளன.

கடந்த புதனன்று தனது வாக்கை அளித்த அசாத், மேற்குலகின் கருத்தை யாரும் பொருட்படுத்தவில்லை என்றார். சிரியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 



No comments: