எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 17 யாழ். பல்கலைக்கழகத் தோற்றத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் அக்கப்போர் அரசியலை புறக்கணித்து ஆக்கபூர்வமாக உழைத்த இலக்கியவாதிகள் ! முருகபூபதி


எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  கொழும்பில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக இரண்டு நாட்கள் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு முன்னர் நாடெங்கும் அது தொடர்பாக நடத்திய பிரசாரக்கூட்டங்களில் ஒன்று எங்கள் நீர்கொழும்பூரிலும் நடந்தது.

அதனையும் அங்கிருந்த சில தீவிர தமிழ்க்கொழுந்துகள் எதிர்த்து சுவரொட்டிகளும் ஒட்டின.

அக்கூட்டத்திற்கு பேசவந்தவர் பேராசிரியர் க. கைலாசபதி. அவருடை மாணாக்கர் மு. நித்தியானந்தனும் பிரபல சிங்கள எழுத்தாளரும் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் தலைவருமான குணசேன விதானவும் வருகை தந்து உரையாற்றினர்.

கைலாஸ் பேசிக்கொண்டிருகையில் மண்டபத்தின் கூரைக்கு  கல்


வீச்சும்  நடந்தது. அவர் மேலே கூரையை  பார்த்துவிட்டு தொடர்ந்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சி முடிந்ததும்  பேச்சாளர்கள் மூவரையும் நானே பஸ் நிலையம் வரையில் அழைத்துச்சென்று கொழும்புக்கு இ. போ. ச. பஸ்ஸில் ஏற்றிவிட்டேன்.

இன்றுபோல் அன்று ஓட்டோக்கள் இருக்கவில்லை.  நீர்கொழும்பு  வீதிகளில்  நடந்து வந்து,  திரும்பிச்சென்றார்கள்.

கைலாஸ் எங்கள் ஊர் மேடையில் பேசிக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் கொழும்பில் பத்திரிகைகளில்   மறுநாளுக்கான தலைப்புச்செய்தி அச்சாகிக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

அடுத்த நாள் வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக பேராசிரியர் கைலாசபதி நியமனம் என்ற செய்தி பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் வேண்டும் என்று தமிழ்க்காங்கிரஸ் கட்சி கேட்டது.  அங்கு வேண்டாம் தமிழர்களின் தலைநகரம் திருகோணமலைதான், எனவே அங்குதான் வேண்டும் என்று தமிழரசுக்கட்சியினர் பிடிவாதம் பிடித்தனர்.


இந்த இரண்டு கட்சிகளும் நல்லாதரவு வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி அரசு
1965 இல் பதவியிலிருந்தபோதுதான் பிரதமர் டட்லிசேனாநாயக்காவுடன் எங்கே தமிழ்ப்பல்கலைக்கழகம் வேண்டும் என்பதில் அந்த இரண்டு தமிழ்க்கட்சிகளும் மல்லுக்கு நின்றன.

அச்சமயம் ஜீ. ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணம் எம்.பி. ஆகவிருந்தார். அவர் அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி அரசில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில்  வடக்கில் காங்கேசன்துறை சீமேந்து ஆலை,  கிழக்கில்  வாழைச்சேனையில் காகித உற்பத்தி ஆலை, வடக்கில் பரந்தனில் இரசாயன ஆலை என்பன உருவாகி இயங்கியதை அறிவீர்கள்.

மீண்டும் ஜீ. ஜீ.  யாழ். எம்.பி. யாக இருக்கும் காலத்தில்,  அங்கே ஒரு


தமிழ்ப்பல்கலைகழகம் அமைந்தால், அந்தப்புகழும் அவருக்கே சென்றுவிடும் என்று,  டட்லி காலத்தில் கிடைக்கவிருந்ததையும்  கெடுத்தனர் தமிழரசுக்கட்சியினர்.

மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதற்கான முயற்சியை ஶ்ரீமாவோவின் காலத்தில் முன்னெடுத்தபோது,  அதனையும் எதிர்த்து காகித அறிக்கை விட்டது அக்கட்சி.

இவ்வாறு பல ஆக்கபூர்வமான செயல்களை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அக்கட்சியை சமஷ்டி கட்சி என அழைப்பதா, சமட்டிக்கட்சி என வர்ணிப்பதா,.? என்று நாம் எமக்குள் பேசிக்கொண்டோம்.

அக்காலத்தில் நடந்த இந்த இழுபறி பற்றிய மேலதிக விபரங்களை வாசகர்கள் தமிழ் விக்கிபீடியாவில் பார்த்து பரவசமடையலாம்.


யாழ். பல்கலைக்கழக வளாகம் பின்னாளில் பல்கலைக்கழகமாக தரமுயர்ந்தது.  தமிழ்க்கொழுந்துகள் அங்கே பொங்கு தமிழ் – எழுக தமிழ் நடத்தின.

ஊடகங்களும் இந்த அக்கப்போர் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களும் செய்திகளும் வெளியிட்டுவருகின்றன.

ஆயினும்,  இத்தகைய அரசியல் அக்கப்போர்களில் ஈடுபடாமல் பல்கலைக்கழக மாணவர்களை   சரியான திசை வழியில் திருப்பி,  அவர்களிடத்தில் கலை, இலக்கிய தேடலில் ஆழமான சிந்தனையை  உருவாக்க வழிசமைத்தவர்களில் பேராசிரியர் கைலாசபதி முதன்மையானவர்.

அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு


நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார்.

தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும்.

 பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவந்த  கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார்.

இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில்  நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன்  இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது,  கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல்


நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும்  அவ்வேளையில் கடந்து வெளியாகிய  மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார்.

மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

எல்லாமே நேற்று நடந்ததுபோன்று நினைவில் தங்கியிருக்கிறது. இந்த நினைவை முன்னிறுத்தியே கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எனது தொடக்கவுரையில் இலங்கை இலக்கிய உலகின் சில


முன்மாதிரிகளையும்  சுட்டிக்காட்டினேன்.

இலங்கையில் இதுவரையில்  கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்துள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட   நாவல்கள் வெளியாகியுள்ளன.

 நேற்றைய தினம்  ஞாயிறு  15 ஆம் திகதி ( 15 – 11 -2020 ) அதிகாலை ( அவுஸ்திரேலியா நேரம் 3.00 மணிக்கு  ) நடந்த நூலகர் செல்வராஜாவின் புதிய வெளியீடு  ஈழத்து தமிழ் நாவலியல் ஆய்வேட்டின் இணைய வழி காணொளி அரங்கில் உரையாற்றிவிட்டே, இந்த எழுத்தும் வாழ்க்கையும் 17 ஆம் அங்கத்தினை பதிவுசெய்கின்றேன்.

நாம் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியிலும்,


அதற்குப்பின்னரும் இக்காலத்தில் எமக்கு கிடைத்திருக்கும் நவீன தொழில் நுட்ப வரப்பிரசாதங்கள் இருக்கவில்லை. ஆனால், திரும்பிப்பார்க்கும்போது அது பொற்காலம்தான்.

சமகால எழுத்தாளர்கள் முகநூலில் நடத்தும் அக்கப்போர்களை பற்றிய செய்திகளை கேட்கும்போது அன்று நடந்த ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டவர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்கள்.

இந்தத் தொடர் எனது கதை மட்டுமல்ல, எமது சமூகத்தின் கதையுமாகும்.

அண்மைக்காலத்தில் படைப்பு இலக்கியங்களை தரப்படுத்தல்வேண்டும் வகைப்படுத்தல் வேண்டும் முதலான குரல்கள் இணைய வழி காணொளி அரங்குகளில் எழுகின்றன. இந்தப்பின்னணியிலிருந்தும் இந்தப்பதிவினை எழுத நேர்ந்துள்ளது.

பத்திரிகைகள், இதழ்களில் வெளியான தொடர்கதைகளும் நாவல் என்ற பெயரில் நூலுருப்பெற்றுள்ளன. இவ்வாறு தொடர்கதையாக எழுதி நாவலாக நூல்வடிவில் வெளியிடும் மரபு தற்காலத்தில் மிகவும்


குறைந்துவருகிறது. தொடர்கதைகளை நாவல் என்று கருதமுடியுமா…? என்ற விமர்சனங்களும் விவாதங்களும் தொடருகின்றன.

கைலாசபதி, நாவலாசிரியர் செ.கணேசலிங்கனின் ‘செவ்வானம்’ என்ற பெரிய நாவலுக்கு எழுதிய நீண்ட முன்னுரையே பின்னர் அவரால் விரிவுபடுத்தப்பட்டு எழுதப்பட்ட ‘தமிழ்நாவல் இலக்கியம்’ என்ற  நூல் என்பதும், அதனை கடுமையாக விமர்சித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் எழுதிய ‘மார்க்சீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்ற நீண்ட கட்டுரையும், அதனைப்பின்னர் கொழும்பிலிருந்து வெளியான (1972 காலப்பகுதியில்) பூரணி மறுபிரசுரம் செய்ததும், அதற்கு நுஃமான் மல்லிகையில் எதிர்வினையாற்றி தொடர் எழுதியதும், அதற்கு எதிர்வினையாற்றி மு.பொன்னம்பலம் மல்லிகையில் பதில் தந்ததும் இன்றைய தலைமுறை படைப்பாளிகளுக்குத் தெரியாது போனாலும் மூத்தவர்களுக்கு நன்கு தெரியும்.

கைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தை அன்றுவாழ்ந்த இலக்கியவாதிகள் பொற்காலம் என்று குறிப்பிட்டுவருகின்றனர். கைலாஸ் தொடக்கத்தில் சிறுகதை எழுதிப்பார்த்து பின்னர் விமர்சகரானவர். இதழியலிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.


பல எழுத்தாளர்களுடன் நேரடியாகவும் கடிதம் ஊடாகவும் தொடர்புகொண்டு புதிய விடயங்களை தினகரனில் அறிமுகப்படுத்தியவர். இளங்கீரனின் தொடர்கதைகளுக்கு களம் வழங்கியவர். அத்துடன் குறிப்பிட்ட தொடர்கதைகள் தொடர்பான வாசகர் கடிதங்களுக்கும் பிரசுரத்தில் முன்னுரிமை கொடுத்தவர்.

அவர் முன்னிலைவகித்து 1976 இல் நடத்திய நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பிட்ட ஆய்வரங்கின் முன்னோட்டமாக யாழ். பல்கலைக்கழகத்தில் சில கருத்தரங்கு அமர்வுகளையும் அவர் நடத்தியிருந்தார். சிவத்தம்பி, நுஃமான், சுப்பிரமணியன் , சித்திரலேகா மௌனகுரு , சண்முகதாஸ்,  சண்முகலிங்கம் உட்பட பலர் அந்த கருத்தரங்குகளில் சமர்ப்பித்த கட்டுரைகள் பின்னர் தனி நூலாகவும் தொகுக்கப்பட்டு வெளியானது. குறிப்பிட்ட ஆழமான பார்வைகளைக்கொண்ட அந்த நூலை இடப்பெயர்வுகளின்போது எங்கோ தொலைத்துவிட்டேன்.

நூற்றாண்டு ஆய்வரங்கில் இளங்கீரன், டானியல், தெணியான் உட்பட சில நாவலாசிரியர்களும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த அந்த நிகழ்வின் இறுதிநேரத்தில் , அதுவரையில் பொறுமை காத்திருந்த மல்லிகை ஜீவா தனது இயல்பான தர்மாவேசத்துடன் எழுந்து, ‘இந்த ஆய்வரங்கு இங்கு எம்மத்தியில் வாழும் நாவலாசிரியர்களை கனம்பண்ணத்தவறியது என்றும் நாவலாசிரியர்களுக்கும் கட்டுரை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும்  என்றும் விமர்சகர்களின் வழிகாட்டுதலில் ஒரு படைப்பாளி நாவல் எழுதமுடியாது என்றும் உரத்துப்பேசிவிட்டு அமர்ந்தார்.

‘பல்கலைக்கழகத்துக்கு நாவல் தொடர்பாக மாணவர்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகளுக்கும் உசாத்துணைக்கும் நடத்தப்பட்ட ஆய்வரங்கு’ என்று சில படைப்பாளிகள் தமது உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

டானியலின்  ‘பஞ்சமர்’ நாவலுக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையில் பலபாகங்களிலும் அறிமுக விமர்சனக்கூட்டங்கள் நடந்தன. அனைத்திலும் டானியல் கலந்துகொண்டார். அதன்பின்னர் பஞ்சமரின் இரண்டாம் பாகத்தை எழுதிய அவர், அதில்வரும் ஐயாண்ணன் என்ற பாத்திரம் தான் எதிர்பார்த்தவாறு சித்திரிக்கப்படாதிருந்ததையும் ஏற்கனவே நடந்த பல பஞ்சமர் நாவல் விமர்சனக்கூட்டங்களில் அவர் செவியில் விழுந்த கருத்துக்களும் அவரே அறியாமல் நுழைந்துவிட்டிருப்பதையும் உணர்ந்து, இரண்டாம் பாகத்தை பின்னர் மாற்றித்திருத்தி எழுதி முழுமைப்படுத்தினார் என்ற தகவல் கசிந்திருந்தது.

இதுபற்றி டானியலுடன் நேரடியாக உரையாடி தெளிவுபெறுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கும் இந்த பல்கலைக்கழக விமர்சகர்கள் மீது கொஞ்சம் கடுப்பு இருக்கத்தான் செய்தது. அதனை அவரது கிராமிய மண்மணம் கலந்த வார்த்தையில் இப்படிச்சொன்னது நினைவிலிருக்கிறது.

“ எட தம்பி, பிள்ளை பெறாத மருத்துவச்சி கர்ப்பிணிப்பெண், பிரசவத்தின்போது எப்படி முக்கவேண்டும்” என்று சொல்லிக்கொடுப்பதுபோலத்தான் இவையளின்ட விமர்சனமும்”  டானியல் இப்படிச்சொல்லியிருக்கும் அதேவேளை,  பெயர் தெரியாத ஒரு மேல்நாட்டு அறிஞர் அதே கருத்தை இப்படி வேறுவிதமாகச்சொல்லியிருக்கிறார்:                             “ ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் முடவனே விமர்சகன்”

இவ்வேளையில்  தமிழகத்தில் வெளியான ஒரு இலக்கியத்தகவல் என்னை சிந்திக்கவைத்தது.

அதில் தமிழில் தலை சிறந்த  சில நாவல்களின் பெயர் வெளியிடப்பட்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, அசோகமித்திரனின் ஒற்றன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு உலகம் ஒரு வீடு, ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள், வண்ணநிலவனின் கடல்புரத்தில் ஆகியனவே தமிழில் சிறந்த நாவல்கள் எனக்கூறப்பட்ட பட்டியல்தான் அந்தத்தகவல்.

இந்தத்தகவலை அறிந்த அவுஸ்திரேலியாவிலிருக்கும் எனது நண்பர் ஒருவர்,   குறிப்பிட்ட  நாவல்களை தமிழகத்திலிருந்து தருவித்தார். அதில் சிலவற்றை நான் முன்பே படித்துவிட்டிருந்தேன்.  குறிப்பிட்ட நண்பர் ஒரு எழுத்தாளர் அல்ல. அவர் நிறைய வாசிக்கும்  தேர்ந்த வாசகர். அந்த நாவல்களை ஏற்கனவே படித்து அவற்றால் கவரப்பட்ட ஒரு தமிழகத்தவரின் மதிப்பீடுதான் எனது நண்பரையும் குறிப்பிட்ட நாவல்களின் பால் ஈர்க்கச்செய்திருக்கிறது. இத்தனைக்கும்  அந்த நண்பர் இலங்கையர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கால்நூற்றாண்டைக்கடந்தவர். அவர் என்னிடம் கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது.

 " இலங்கையில் தலைசிறந்த பத்து தமிழ் நாவல்களை சொல்லுங்கள்.” என்றார். “யோசிக்க வேண்டும். அவகாசம் தாருங்கள்” என்றேன். ஏனென்றால் என்னிடம் உடனடியாக பதில் ஒன்றும் இல்லை.

இலங்கை எழுத்தாளரான செ. கணேசலிங்கன்  தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு தாயகத்தொடர்புடனிருப்பவர்.  தற்போது அவருக்கு 90 வயதும் கடந்துவிட்டது.

நானறிந்தவரையில் அவர்தான் அதிகமான நாவல்கள் எழுதிய இலங்கையர். அவருடன்  ஒரு சந்தர்ப்பத்தில்  நான்  தொலைபேசியில் உரையாடியபோது,  “  தான் ஒவ்வொரு வருடமும் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதிவிடுவதாகச்சொன்னார்.  “ 

அவர்தான் என்னையும் நாவல் எழுதுமாறு தூண்டியவர்.  அதனால் நான் எழுதியதுதான் பறவைகள் நாவல்.  அதனை அவரது குமரன் பதிப்பகம்தான் வெளியிட்டது.

அதனை எனது தாத்தா முறை உறவினரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர் ) தொ.மு.சி. ரகுநாதனுக்கு சமர்ப்பித்துள்ளேன்.

பறவைகள் நாவலுக்கு 2003 ஆம் ஆண்டு  இலங்கை தேசிய சாகித்திய விருதும் கிடைத்தது.  தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி செல்வி நர்கீஸ் என்பவர் தமது MPhil ஆய்விற்கு பறவைகள்  நாவலை உட்படுத்தியிருந்தார். இது நடந்த காலம் 2003 – 2004.

எனினும், இதுவரையில் நான் அந்த MPhil ஆய்வினை பார்க்கவில்லை.  கடந்த ஆண்டு ( 2019 இல் )  என்னைத் தொடர்புகொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி ஆயிஷா அமீன் என்பவர், எனது ஆறு சிறுகதைத் தொகுதிகளையும் முன்வைத்து தமது MPhil ஆய்வினை நிறைவு செய்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் படித்திருக்காத நான்,  இலங்கை பல்கலைக்கழகங்களிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மத்தியில் இலக்கிய உரையாற்றியிருக்கின்றேன்.

இதனையெல்லாம் நன்கு  அறிந்திருக்கும்  பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி  பட்டமும்  கல்வியியல் பட்டமும் பெற்றுள்ள எனது மனைவி மாலதி,   என்னிடம் கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்காத உங்களுக்கு இப்படியெல்லாம்  நேர்ந்தது  ஆச்சரியமானது என்று கூறுவாள்.

 இது இவ்விதமிருக்க,  செ. கணேசலிங்கனுக்கு  அடுத்ததாக இலங்கையில் அதிகம் நாவல் எழுதியவரில் செங்கை ஆழியானின் பெயர்தான் எனது நினைவுக்கு வருகிறது.  மல்லிகையில் இலங்கை நாவலாசிரியர்கள் பற்றியும் நாவல்கள் தொடர்பாகவும் விரிவாக எழுதியிருப்பவர் செங்கை ஆழியான்.
 
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலத்தில் இளங்கீரன், டானியல், எஸ்.பொ, சி.வி. வேலுப்பிள்ளை, செங்கை ஆழியான், செ. யோகநாதன், தெணியான், தெளிவத்தை ஜோசப், நா. பாலேஸ்வரி, உட்பட பலரது தொடர்கதைகள் நாவல் என்ற பெயரில் பின்னர் நூலுருப்பெற்றுள்ளன.  தொடர்கதையாக எழுதாமல் தனிநாவலாக எழுதியிருப்பவர்களின் பட்டியலை இங்கு விரிவஞ்சித்தவிர்க்கின்றேன். வீரகேசரி பிரசுரம் ஊடாக தனிநாவல் எழுதியிருப்பவர்களுடன் பார்த்தால் இலங்கையில் அந்தப்பட்டியல் நீளமானது. வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கையிலிருந்தும் ஏராளமான நாவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சாகித்திய விருது உட்பட பரிசில்களும் பெற்ற நாவல்கள் பலவுண்டு. எனினும் தலைசிறந்த நாவல்கள் எவை என்ற மதிப்பீடு எவரிடமும் இருக்கிறதா?

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற பலரும் கனடா, அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொடர்கதையாகவன்றி தனி நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முல்லை அமுதன், மா.கிறிஸ்டியன், வவனியூர் இரா.உதயணன், விமல்.குழந்தைவேல் (இங்கிலாந்து), நிலக்கிளி பால மனோகரன், ஜீவகுமாரன், (டென்மார்க்) அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், தேவகாந்தன், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ். பாலச்சந்திரன், குரு அரவிந்தன்(கனடா) ஷோபா சக்தி (பிரான்ஸ்) இ.தியாகலிங்கம் (நோர்வே) கருணாகரமூர்த்தி, பார்த்திபன் (ஜெர்மனி) எஸ்.பொ, மாத்தளைசோமு, நடேசன், முருகபூபதி, மனோஜெகேந்திரன், நித்தியகீர்த்தி, பாமினி செல்லத்துரை, ஜேகே. ஜெயக்குமாரன்,  ஆசி. கந்தராஜா, தாமரைச்செல்வி,   (அவுஸ்திரேலியா) மற்றும் சயந்தன்,  சக்கரவர்த்தி,  உமாகாந்தன்,  குணா கவியழகன், தமிழ்நதி ,  ஆகியோர் இந்தப்பட்டியலில் இணைகிறார்கள். இவர்களின் படைப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவேண்டும். புகலிடப்படைப்புகள் பெரும்பாலும் பிறந்த மண்ணையும்  புகலிடத்தையுமே சித்திரிப்பதாகவும் முழுமையாகவே புகலிடத்தை சித்திரிக்கும் நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றும் விமர்சனம் இருக்கிறது.

தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளான படைப்பாளி. இவரது பார்வையில் தமிழில் மிகச்சிறந்த நூறு நாவல்களில் சில இலங்கை எழுத்தாளர்களின் நாவல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகம் படிப்படியாக ஆனால் மந்தகதியிலேயே கிடைத்துவருகிறது. தீராநதி, உயிர்மை, காலச்சுவடு ஆகியனவற்றில் எம்மவர்களின் நூல்கள் பற்றிய அறிமுகமும் நேர்காணல்களும் வெளியாவதனாலும் ஈழப்பிரச்சினையும் முள்ளிவாய்க்கால் பேரவலமும்  அங்கு மிகுந்த கவனிப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருப்பதனாலும் ஈழத்து நாவல்கள் மற்றும் புகலிட நாவல்கள் பற்றிய புரிதல் உருவாகியிருக்கிறது.

இலங்கையில் ஒரு நாவல் வெளியானதும் நடத்தப்படும் வெளியீட்டு நிகழ்வுகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களிலிருந்து அதன் தரத்தை மதிப்பீடுசெய்துவிடமுடியாது. அத்துடன் அதற்கு வழங்கப்படும் தேசிய விருதின் ஊடாகவோ பாராட்டுப்பத்திரங்களின் மூலமோ அதன் தரத்தை கணித்துவிடவும் இயலாது. இலங்கையில் பெரும்பாலான விமர்சகர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக அல்லது பேராசிரியர்களாக தகைமைசார் பேராசிரியர்களாக இருப்பதனால் நாவல் எழுதுபவர்களும் தமது படைப்புக்கான அங்கீகாரத்துக்கு அவர்களையே நம்பியிருக்கின்றனர். அவர்களின் முன்னுரையுடன் வரும் தமது நாவலுக்கு வாசகர் மட்டத்திலும் பல்கலைக்கழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்குண்டு.
 
இத்தருணத்தில் ஜெயமோகன் , எம்மவர் பற்றி பதிவுசெய்திருப்பதை சுட்டிக்காட்டலாம் எனக்கருதுகின்றேன். “ பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டு நோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கமே” என்று சொல்லும் ஜெயமோகன் இப்படியும் சொல்கிறார்:- “ ஈழம் அளவுக்குச்செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும்.” (கனடா காலம் இதழ்-2008 மே)

ஈழத்து இலக்கியத்தை கோட்பாட்டு ரீதியில் வளர்ச்சிபெற்றதாக கணிக்கும் ஜெயமோகன் மற்றும் வண்ணநிலவன், வெங்கட்சாமிநாதன்  போன்றோரின் வாதங்களை எம்மவர்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. மு.தளையசிங்கம், மு. பொன்னம்பலம், அ.யேசுராசா போன்றோர் விதிவிலக்கு. ‘ஈழத்தில் தமிழரின் நெருக்கடி பல அற்புதமான படைப்புகளை தந்திருக்கவேண்டும். ஆனால் ஏமாற்றமே.” என்ற கருத்துப்பட ஒரு சந்தர்ப்பத்தில் சுந்தரராமசாமியும் சொல்லியிருந்தார்.

இவர்களின் அளவுகோல்களின் அடிப்படையில் எம்மால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது.

எம்மவரின் படைப்புகளில் பிரதேசமொழிவழக்கு அவர்களுக்குப்புரியாதிருந்ததும் சோகம்தான். ஆனால் அவர்களின் சென்னைத் தமிழையும் தஞ்சாவூர் மற்றும் தலித் படைப்புகளின் தமிழையும் நாம் தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டோம். எமக்குக்கிடைத்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாமல்போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

மேனாட்டு படைப்பாளிகளின் பல நாவல்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியூடாகவும் படித்தபின்பே அவற்றின் மகிமையை, திறனை எம்மவர்கள் தெரிந்துகொள்கின்றோம். ஆய்வுகள் எழுதும்போது அவர்களை மேற்கோள்காட்டுகின்றோம். ஆனால் , தமிழ் நாவல்களை படிப்பதற்கு அவை போதியளவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாதமையினால் மேல்நாட்டு வாசகர்களால் மதிப்பிட முடியாதிருக்கிறது. ஒரு படைப்பின் உள்ளடக்கம் சர்வதேசப் பார்வைகொண்டதாக இருக்கும் பட்சத்திலேயே அதுகுறித்த மதிப்பீட்டின் தாக்கம் உயரும். இந்நிலைமையில் இலங்கையிலும் புகலிட நாடுகளிலும்  இதுவரையில் வெளியான தமிழ் நாவல்களில் மிகச்சிறந்த பத்து நாவல்கள் எவை? என்ற கேள்வியை எழுப்பினால் இலக்கியத்திலும் ருசிபேதம் என்ற அடிப்படையில் எத்தனைபேர்  அவற்றை இனம்காட்ட முன்வருவார்கள்.?

ஒருவரைக்கவர்ந்த ஒரு நாவல் மற்றுமொருவரைக்கவரும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால்,  வளர்ந்துவரும் புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இனம்காட்டமுடியும். அவற்றுள் சிறந்தவற்றை, ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ மொழிபெயர்ப்பதன் ஊடாக பிறமொழி வாசகரிடத்திலும் அவற்றுக்கு அறிமுகத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

( தொடரும் ) 



No comments: