சந்தர்ப்பவசமாக சிறைக்குச்சென்று அங்கிருந்தும் எழுதிய எழுத்தாளர்களைப்பற்றியும் , சிறைச்சாலை வாழ்க்கை பற்றி நாவல் எழுதியவர்களைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
ஜெயகாந்தனின் காவல் தெய்வம், சி. ஏ. பாலனின் தூக்குமரநிழலில் முதலான நாவல்கள், கவிஞர் கண்ணதாசனின் மாங்கனி காவியம், சுப. வீரபாண்டியனின் அது ஒரு பொடா காலம் , பண்டிதர் ஜவஹர்லால் நேரு தமது மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு உலகசரித்திரம், நெல்சன் மண்டேலா எழுதிய Long Walk to Freedom , இலங்கையில் புஸ்பராணி எழுதிய அகாலம், அஜித்போயாகொட புலிகளின் சிறையிலிருந்த அனுபவங்களை எழுதிய நீண்டகாத்திருப்பு உட்பட பல நூல்கள் சிறைபற்றி பேசியிருக்கிறது.
இந்தப்பதிவில், ஒரு சிறைக்கைதியின் சரிதையையே கதையாக எழுதிய ஒரு பெண்மணி பற்றித்தான் உங்களுக்கு சொல்லப்போகின்றேன்.
அவர்தான் திருமதி புஸ்பராணி தங்கராஜா. அவரை ராணி தங்கராஜா என்றுதான் அழைப்போம். நேற்று ஜூலை 28 ஆம் திகதி அவருக்கு 92 வயது.
அவர் தற்போது மெல்பனில் Burwood என்னுமிடத்தில் ஒரு முதியோர் காப்பகத்திலிருந்தவாறு கடந்த காலங்களை நனவிடைதோய்ந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்கிவருகிறார்.
ஈழத்தின் மூத்த அறிஞரும் உடனுக்குடன் கவிபுனையும் ஆற்றல் மிக்கவரும் யாழ்ப்பாண வைபவ கௌமுதி ( History Of Jaffna ) எழுதியவருமான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தியுமான புஸ்பராணி அவர்கள் 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி, வடபுலத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், வயாவிளான் கிராமத்தில் பிறந்தவர்.
அமெரிக்க மிஷன் பாடசாலை, கல்லடி வேலுப்பிள்ளை வித்தியாசாலை, உரும்பராய் சந்திரோதயா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, மேற்கல்வியை மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர். பின்னர் ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.
குடும்பத்தில் மூத்தமகள். ஏறக்குறைய 72 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இருபது வயதில் தன்னை விரும்பியவரையே மணம் முடித்து,
மகாகவி பாரதி சொன்னது போல், காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து வாழ்ந்தவர்.
ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண் என்று சொல்வார்களே. அவ்வாறே இரண்டு பிள்ளைகளின் தாயாகி, நான்கு பேரப்பிள்ளைகளையும் மூன்று பூட்டப்பிள்ளைகளையும் கண்டிருக்கும், ராணி தங்கராஜா அவர்கள், இன்றும் மாறாத புன்னகையுடனும் வெளிப்படைத்தன்மை மிக்க கலகலப்பான உரையாடலுடனும் அனைவருடனும் உறவாடிவருபவர்.
அவருக்கு நேற்று 92 வயது ! இந்த வயதிலும் வாசிக்கிறார். எழுதுகிறார். தற்போது தனது பேரனார் ஆசுகவி கல்லடி வேலன் பற்றியும் ஒரு புத்தகம் எழுதி கணினியில் பதிவிட்டு அச்சிடவும் தயாராகியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா..?
இதோ பாருங்கள் அவருடைய கையெழுத்தை.
அவருடைய கணவர் தங்கராஜா அவர்கள், இலங்கையில் மஹர, மாத்தறை , வெலிக்கடை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். அதனால், அவர் பணிநிமித்தம் சென்ற சிறைச்சாலைகளில் அமைந்துள்ள உயர் அதிகாரியின் வாசஸ்தலத்திலும் தனது பெரும்பாலான காலத்தை கழித்திருப்பவர்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் விதிவசத்தால் வந்த அவசர முன்கோபத்தினால் கொலைக்குற்றவாளியாக மரணதண்டனைக்கு ஆளாகி சிறையிலிருந்த ஒரு தமிழ்க்கைதி பின்னர் மகாராணியின் கருணையின் அடிப்படையில் ஆயுள் தண்டனைக்குட்பட்டிருந்த ஒருவரின் கதையைத்தான் ராணி தங்கராஜா பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கைதியின் மனச்சாட்சி என்ற பெயரில் எழுதியிருந்தார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் வெளியான கலப்பை முதலான இதழ்களிலும் கதை, கவிதை , கட்டுரை எழுதியிருப்பவர்.

விஜேவீரா தப்பிச்சென்றுவிடலாம் என்பதற்காக அவர் ஆடைகள் எதுவும் அணிய அனுமதிக்கலாகாது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது.
எனினும், அந்த உத்தரவை ஏற்காமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட தங்கராஜா அவர்கள், விஜேவீராவுக்கு மாற்றுடைகளும் வழங்கிய அக்கறையோடு கவனித்தவர்.
இதுபற்றி ரோண விஜேவீரா பின்னாளில் பகிரங்கமாக மேடைகள் தோறும் தெரிவித்தார். நேர்காணல்களிலும் குறிப்பிட்டார்.
தனது மொழி பேசியவர்களிடமிருந்து வந்த உத்தரவை புறக்கணித்து, தன்னை மனிதாபிமானத்துடன் நடத்திய ஒரு தமிழர் தங்கராஜா அய்யா என்றும் விஜேவீரா புகழாரம் சூட்டினார்.
இத்தகைய மனிதாபிமானியான தனது கணவர் தன்னை, தனது பத்துவயதுப் பிராயத்திலேயே ஒருதலைப்பட்சமாக விரும்பியதுடன், தன்னைத்தான் திருமணம் முடிப்பேன் என்ற பிடிவாதத்துடனும் இருந்து, தனக்கு இருபது வயதானதும் கரம்பற்றியவர் என்று அண்மையில் எம்முடன் உரையாடியபோது திருமதி ராணிதங்கராஜா அம்மையார் தெரிவித்தார். அவருடைய பசுமை நிறைந்த நினைவுகளில் பொதிந்திருந்த காவியத்தன்மையை புரிந்துகொள்ள முடிந்தது.

இருவருக்குமிருந்த நல்லுறவு பற்றியும் விதந்து குறிப்பிட்டார்.
திருமதி ராணி தங்கராஜா ஆசுகவி கல்லடிவேலுப்பிள்ளையின் பேத்தி மாத்திரமல்ல, புகழ்பெற்ற கலை இலக்கியக் குடும்பத்தையும் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அவருடைய இரத்த உறவினர்கள்தான் சிலோன் விஜயேந்திரனும் ஶ்ரீநடராஜாவும். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிமார். இருவரும் எழுத்தாளர்கள். அத்துடன் நாடக திரைப்பட நடிகர்கள். சிலோன் விஜயேந்திரன், சிவாஜிகணேசன் நடித்த பைலட் பிரேம்நாத் திரைப்படம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர். கவிதை, நாடகம் முதலான துறைகளில் நூல்கள் எழுதியிருப்பவர். சிலோன் விஜயேந்திரன் சில வருடங்களுக்கு முன்னர், சென்னையில் ஒரு தீவிபத்தில் இறந்துவிட்டார். இவர் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரையை அண்மையில் ஜெயமோகனின் வலைப்பக்கத்திலும் படித்திருக்கின்றோம்.
ஶ்ரீநடராஜா, இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஜெய்சங்கர், அசோகன். கீதா குமாரசிங்க நடித்த ரத்தத்தின் ரத்தமே படத்திலும் நடித்திருப்பதுடன், வீரகேசரி பத்திரிகையிலும் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.
ராணிதங்கராஜா அம்மையார் அவர்கள் மெல்பனில் தமது கணவருடன் இணைந்து பல பொதுப்பணிகளிலும் ஈடுபட்டவர்.
Tamil Australian Friendship Society என்ற அமைப்பினை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி, வருடாந்தம் கலை விழாக்களையும் ஒன்றுகூடல்களையும் நடத்தி, கலை, இலக்கியம், கல்வி, சமூகம் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை பாராட்டி விருதுகளும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கியவர்.
முதுமை நிமித்தம் முதியோர் காப்பகத்தில் தஞ்சமடைந்திருந்தாலும், தொடர்ந்தும் வெளியுலகத் தொடர்புளை பேணிக்கொண்டு உறவாடிவரும் திருமதி ராணி தங்கராஜாவின் 92 ஆவது பிறந்த தினம் நேற்றைய தினம் அவர் தங்கியிருக்கும் காப்பகத்தில் அமைதியாக கேக்வெட்டி
கொண்டாடப்பட்ட தகவலையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
இந்தப்பதிவின் ஊடாக நாமும் அவரை வாழ்த்தி வணங்குகின்றோம்.
உள்ளார்ந்த ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் - முதுமை தடையாக இருக்காது என்பதற்கு எம்மத்தியில் வாழ்ந்துவரும் திருமதி ராணி தங்கராஜா அவர்களும் முன்னுதாரணமானவர்.
---0---
letchumananm@gmail.com
3 comments:
நான் srilanka வில் இருந்து சுசீலா சாரங்கபாணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். முன்னாள் பேரவை உறுப்பினர். சமாதான நீதவான்.
1940 வரை சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய ஆசுபதி கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தி.
92 வயது பிறந்தநாள் கொண்டாடுகிற ராணி தங்கராஜா எனது தந்தையின் step brother உடைய மகள். தங்கராஜா எனது தாயாரின் மூத்த சகோதரர். அவர் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. அவர் வாழும் வரை அவரது இரத்த உறவுகளிற்கும் ஊருக்கும் இருட்டடிப்பு செய்யதது போல இறந்த பிறகும் இருட்டடிப்பு செய்வது வேதனையை தருகின்றது. திருமதி.ராணியின்
பொய் no1:- அவர் ஒரு ஆசிரியர் அல்ல. ஆசிரியர் எனில் கற்பித்த பாடசாலை எது?
பொய் no2:- அவர் ஒரு எழுத்தாளர் அல்ல. காலம் சென்ற சகோதரி யோகமணி மூலம் எழுதியதை பிரசுரிப்பார்.
பொய் no3:- இவர் திருமணம் காதல் திருமணம் அல்ல. பெரிய மாமா இவாவை love பண்ண இல்லை. மிகவும் வற்புறுத்தி நடந்த திருமணம். வாழ்க்கையில் எந்த ஆணூம் வாழத நரக அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்.
பத்திரிகை சரியான தெளிவு இன்றி எழுதினால் மற்றையவர் மனம் பாதிக்கும். தயவு செய்து சிவக்கு இதை பிரசுரிக்கவும.
நான் srilanka வில் இருந்து சுசீலா சாரங்கபாணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். முன்னாள் பேரவை உறுப்பினர். சமாதான நீதவான்.
1940 வரை சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய ஆசுபதி கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தி.
92 வயது பிறந்தநாள் கொண்டாடுகிற ராணி தங்கராஜா எனது தந்தையின் step brother உடைய மகள். தங்கராஜா எனது தாயாரின் மூத்த சகோதரர். அவர் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. அவர் வாழும் வரை அவரது இரத்த உறவுகளிற்கும் ஊருக்கும் இருட்டடிப்பு செய்யதது போல இறந்த பிறகும் இருட்டடிப்பு செய்வது வேதனையை தருகின்றது. திருமதி.ராணியின்
பொய் no1:- அவர் ஒரு ஆசிரியர் அல்ல. ஆசிரியர் எனில் கற்பித்த பாடசாலை எது?
பொய் no2:- அவர் ஒரு எழுத்தாளர் அல்ல. காலம் சென்ற சகோதரி யோகமணி மூலம் எழுதியதை பிரசுரிப்பார்.
பொய் no3:- இவர் திருமணம் காதல் திருமணம் அல்ல. பெரிய மாமா இவாவை love பண்ண இல்லை. மிகவும் வற்புறுத்தி நடந்த திருமணம். வாழ்க்கையில் எந்த ஆணூம் வாழத நரக அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்.
பத்திரிகை சரியான தெளிவு இன்றி எழுதினால் மற்றையவர் மனம் பாதிக்கும். தயவு செய்து சிவக்கு இதை பிரசுரிக்கவும.
ஆசுகவியின் வீட்படின் அருகில் உள்ள கல் பற்றிய படம் அல்லது அது பற்றிய மேலதிக தகவல் கிடைக்குமா?நன்றி
Post a Comment