முகவீணை – காற்றுக்கருவி


பெருமாள் கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டின்போது, ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள். இதமான இசை, நித்திரையில் சொக்கிக்கிடக்கும் மக்களை காற்றாக வருடித் தாலாட்டும். சில சிவத்தலங்களிலும், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் இந்த இசைக்கருவி வாசிக்கப்பட்டது. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களே இக்கருவியையும் வாசிப்பார்கள். உயர்ந்த சுருதியையும் லாவகமாக வளைக்க முடியும் என்பதால் முகவீணையை நாட்டிய நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் முகவீணை இசைக்கப்படுகிறது. மேலும் கோடை உற்சவம், வசந்த உற்சவம் ஆகிய விழாக்களிலும் இசைக்கப்படுகிறதாம். ஸ்ரீபெரும்புதூர் போன்ற கோயில்களில் முகவீணையின் இடத்தை கிளாரிநெட் பிடித்துக் கொண்டது சென்னையின் பல பெருமாள் கோயில்களிலும் இதே நிலைதான்.



முகவீணை கருநாடக மாநிலத்தில் முகவீணா என்று அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட கோவில்களிலும் புழக்கத்தில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவில் நாள்தோறும் முகவீணையும் நகராவும் இசைக்கப்படுகிறது. இதற்கென்றே அங்கு நகரா மண்டபம் உள்ளது.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டைதான் முகவீணையின் உற்பத்தித்தலம். இங்கு ஐந்து குடும்பங்கள் பல தலைமுறைகளாக நாதஸ்வரம், முகவீணை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இப்போது பலர் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ‘‘நாலு தலைமுறையா முகவீணை செய்றதுதான் எங்க தொழில். எங்க தாத்தா காலத்தில வெளிமாநிலத்தில இருந்து எல்லாம் முகவீணை வாங்க வருவாங்க. இப்போ திருப்பதி மாதிரி சில பெரிய கோயில்கள்ல மட்டும்தான் வாசிக்கிறாங்க. ஷோகேஸ்ல வச்சுக்கிறதுக்காக அப்பப்ப யாராவது வந்து வாங்கிட்டுப் போறாங்க’’ என்று வருந்துகிறார் இந்தத் தொழிலில் இருக்கும் குணசேகரன் ஆசாரி.
முகவீணையை விட சற்று நீளமானது கட்டைக்குழல். தென் தமிழ்நாட்டில் குறிப்பாக திருச்செந்துர் வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ளது. கட்டைக்குழலின் அனசுப்பகுதி வெண்கலத்தால் ஆனது. சீவாளி பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும். பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா பெருவிழாவில் கட்டைக்குழலும் உருமியும் முக்கிய இசைக் கருவிகளாக முழங்குகின்றன. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கள்ளபிரான் கோவிலில் கட்டைக்குழல் வழிபாட்டின்போது இசைக்கப்படுகிறது. ‘கட்டைக்குழல்’ என இக்கருவியின் பெயரிலேயே ஒரு நாட்டுப்புற ஆடற்கலை உண்டு. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வட்டாரத்தில் அருந்ததியின சமூக மக்களால் இக்கலை நிகழ்த்தப்பட்டது. தவில், பம்பை, உருமி ஆகிய தோலிசைக் கருவிகளோடு கட்டைக்குழலும் இசைக்கப்படும். மக்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் ஆடற்கலை இது. கோயில் திருவிழாக்கள், சடங்குகளில் இக்கலை நிகழ்த்தப்படும். இப்போது கருவியைப் போலவே கலையும் வழக்கொழிந்து விட்டது. கலைஞர்களும் அருகிப்போனார்கள். தென் தமிழகத்தின் அனைத்து நாட்டார் தெய்வ வழிபாடுகளிலும் கட்டைக்குழல் முக்கிய பங்கு வகித்துவந்தது. இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. சிறுநாடார்குடியிருப்பு(துத்துக்குடி மாவட்டம்) போன்ற சில கிராமங்களில் இக்கலையை நாம் காணலாம்.
கட்டைக்குழலுக்கு இணையான கருவி கேரளத்தில் குறுங்குழல் என்று அழைக்கப்படுகிறது. கோவில்களில் பூசை வேளைகளிலும் பஞ்ச வாத்தியம் எனப்படும் செண்டை மேள கச்சேரியிலும் குறுங்குழல் தவறாமல் இடம்பெறுகிறது.

முகவீணையை ஒத்து இருக்கும் ஊதுகருவிகள் பழங்குடி மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. இருளர் பழங்குடி மக்களிடம் கொகாலு என்றும் உதகை படுகர்கள், சொளகர் மற்றும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களிடம் பீணாச்சி என்கிற பெயரிலும், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் பழங்குடிகளிடம் சீணம்/சீணி என்கிற பெயரிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இக்கருவி வழக்கில் உள்ளது. அவர்களின் விழாக்களிலும் சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.இதை பற்றி வேறு ஒரு முறை விரிவாக பார்ப்போம்.
முகவீணையை ஒத்து உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி இசைக்கருவியான ஷெனாய், இசையுலகில் இன்று தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பிஸ்மில்லாகான் போன்ற மேதைகள் அக்கருவிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள். முகவீணை மரபோ சீண்டுவார் இல்லாமல் சிதைந்து விட்டது. மேலும் இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. முகவீணை போன்று மறையத் துவங்கியுள்ள இசைக்கருவிகள் புத்துயிர் பெற வேண்டும் என்றால் இவற்றை இசைக்கும் கலைஞர்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். தமிழ் மக்களும் இக்கலையை ஆதரிக்க வேண்டும்.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
முகவீணை:
சுவாமிமலை முருகன் கோவில்
கும்பக்கோணம் ஆராவமுதன் (சாரங்கபாணி பெருமாள்) கோவில்
நாகப்பட்டினம் சௌந்தராச பெருமாள் கோவில்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
நாகப்பட்டினம் வேதாந்த தேசிகன் கோவில்
சிதம்பரம் நடராசர் கோவில்
நாகூர் தர்கா
கட்டைக்குழல்:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவில்
பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்கள்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்
சொர்ணாளி:
கிரான் குமாரர் கோவில், இலங்கை
மட்டகளப்பு சுற்றிய இடங்கள், இலங்கை
காணொளிகள்
முகவீணை:
https://youtu.be/pCY9AT6Ih4g
https://www.youtube.com/watch?v=Lrn6o6SIlFw
https://www.youtube.com/watch?v=BNwNI_tW_08&t=39s
https://www.youtube.com/watch?v=QqUr2k5RNT4
https://www.youtube.com/watch?v=wERFXIF2Ak0
https://www.youtube.com/watch?v=3UbRj7RdVcA&t=298s
தெருக்கூத்தில் முகவீணை:
https://www.youtube.com/watch?v=VjjxM6RB7hE
https://www.youtube.com/watch?v=jgFQH2sMDvg
https://www.youtube.com/watch?v=gymSKEklSe4&list=RDjgFQH2sMDvg&index=6
https://www.youtube.com/watch?v=QqUr2k5RNT4
கட்டைக்குழல்:
சொர்ணாளி:
https://www.youtube.com/watch?v=_Lbwt2No8N8&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=JHVOpoesX2w
https://www.youtube.com/watch?v=G9aWHAlXe8o
https://www.youtube.com/watch?v=nvmipfw8s9w
https://www.youtube.com/watch?v=xMc3uoH09W0
குறுங்குழல் – கேரளம்:
https://www.youtube.com/watch?v=I5aP9BEPbRQ
https://www.youtube.com/watch?v=mXNyxGIKimo
https://www.youtube.com/watch?v=s31nfJ_2jMg
https://www.youtube.com/watch?v=1kqLHFopvog
https://www.youtube.com/watch?v=9wt7UQ1LeKQ
முகவீணா – கருநாடகம்:
https://www.youtube.com/watch?v=wjGQvr83fzA
No comments:
Post a Comment