எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை வாழ்க்கையில் இருந்துகொண்டே இருக்கிறதே..?! ஒன்றுக்கு தீர்வுகண்டுவிட்டால் மற்றும் ஒன்று மனதில் ஏறி அமர்ந்து உளைச்சலைத் தருகிறது. புதியதற்கும் பதில் கிடைத்துவிட்டால், மற்றும் ஒரு விடைதெரியாத கேள்வி வந்து மனதை துருத்துகிறது.

மீன்கடைக்கு, சண்முகநாதனுடன் வந்து, மீனை விலைபேசி தெரிவுசெய்யும் அவசரத்தில் அபிதா இருந்தாலும், அவளது ஆழ் மனதில் கடலின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டு வலையில் சிக்கி துடிதுடித்து இறந்து, மற்றவர்களின் வயிற்றுக்காக தரைக்கு வந்து, பிடித்தவர்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக மீன் கடைகளில் காட்சிப்பொருளாகியும் விற்பனைப்பண்டமாகியுமிருக்கும் மீன்களின் வகையறாக்களைப்பார்க்கின்றபோது, மனித மனங்களின் விநோத இயல்புகளும் அபிதாவின் சிந்தனையில் ஊடுறுவின.
அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஏதேதோ பிரச்சினைகள், வந்திருக்கும் லண்டன்காரருக்கு மற்றும் ஒரு பிரச்சினை. ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்று நேரம் பார்த்து பரிதவிப்போடு வெளியே ஓடிவரும் மக்களுக்கு அன்றாடப்பிரச்சினை, ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், எதிர்பாராமல் வந்துள்ள கண்ணுக்குத் தெரியாத எதிரியை எவ்வாறு வரவிருக்கும் பொதுத்தேர்தலின்போது கையாள்வது என்ற பிரச்சினை.

அதற்கும் அவள் ஒரு தீர்வைக்கண்டுகொண்டாள். வீட்டில் ஜீவிகா பயன்படுத்தும் மடிக்கணினி அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை, அவளது அரசியல் கைதிகள் பற்றிய கட்டுரையை தன்னிடம் வாசிக்கத்தந்ததும் துளிர்விட்டுவிட்டது.
மீனும் நண்டும், இறாலும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகையில் சண்முகநாதன், அபிதாவை கடைக்கண்ணால் பார்த்தவாறே, “ அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தமக்குத் தமக்கு துணை தேடிக்கொண்டு போய்விட்டால், அதன் பிறகு நீ என்ன செய்வாய் அபிதா..? “ எனக்கேட்டார்.
அதற்கு அவள் சற்றும் தாமதிக்காமல், “ லண்டனில் உங்களிடம் வந்துவிடட்டுமா அய்யா…? “ எனத்திருப்பிக்கேட்டாள்.
சண்முகநாதன் தோளை குலுக்கிக்கொண்டு சிரித்தார்.
“ நீ எப்போதும் தெரியாத ஊருக்கு பாதைகாட்டுபவளாகத்தான் இருக்கிறாய் அபிதா. “

“ நீ, நன்றாக பேசுவதற்கு தெரிந்தவள்தான். நீ சட்டம் படித்திருக்கலாம். “
“ அப்படி படித்திருந்தால், உங்களுடன் இப்படி மீன் வாங்குவதற்கு வீதிக்கு வந்திருப்பேனா..? “
இவ்வாறு அபிதா சொன்னதும் வீதியென்றும் பாராமல் சண்முகநாதன் சற்று உரத்து சிரித்துவிட்டார். அவரது கடைவாயில் தெரிந்த தங்கப்பல்லை அபிதா பார்த்தாள்.
“ எனது இந்த நிகும்பலையூர் வீட்டுக்கு முன்னர் வேலைக்குவந்த எத்தனையோ பெண்களிலிருந்து நீ மிகவும் வேறுபட்டிருக்கிறாய். லண்டனிலிருக்கும் எனது பிள்ளைகளுடன் இன்று பேசும்போது, உன்னைப்பற்றியும் சொல்லவிருக்கிறேன். எனது மகளுடன் நீ பேசவேண்டும். பேசுவாயா..? “
“ என்னய்யா சொல்றீங்க.. உங்கட பிள்ளைகளை எனக்குத் தெரியாதே… எப்படி நான் அவர்களுடன் பேசுவது..? “
“ இங்கே பார் அபிதா, உன்னை எனக்கு முன்பின் தெரியுமா..? இப்போது நீ என்னுடன் மீன் கடைக்கு வரவில்லையா..? அப்படித்தான். உன்னை எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அதனால்தான் உன்னைப்பற்றி எனது மகளிடம் இன்று பேசும்போது சொல்லவேண்டும்போல் தோன்றியது. “ என்றார் சண்முகநாதன்.
“ என்ன அய்யா…? மீன் கடையால் திரும்பும்போது, தூண்டிலில் சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கப்போகிறீர்களா..? உங்களுக்கு கற்பகம் ரீச்சருடன் இன்று எப்படியும் பேசிவிடவேண்டும் என்ற தவிப்பு வந்துவிட்டது. அதற்கு நான் வேண்டும். அய்யா இங்கே இப்போது நன்றாக வெய்யில் கொளுத்துகிறது. என்ர தலையில் ஐஸ் வைக்கிறீங்களா.. அய்யா..? “
“ உன்னோடு பேசி தப்பிக்கமுடியாது. வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டத்தான் முடியும். எல்லாம் சீரடைந்து வந்ததும் நான் லண்டன் திரும்பிவிடுவேன். அதற்கு முன்பு உனக்கு ஏதும் வாங்கித்தரவேண்டும். உனக்கு என்ன வேண்டும்…? சொல்…? “
இப்படி ஒரு கனிவான வார்த்தை அவரிடமிருந்து வெளிப்படும் என்று அபிதா எதிர்பார்த்திருக்கவில்லை.
“ இங்கே உங்கள் பெறாமகள் ஜீவிகா எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அய்யா. மஞ்சுளா, சுபாஷினி, கற்பகம் ரீச்சர் அனைவரும் என்னோடு பாசமாகத்தான் இருக்கிறார்கள். நான் போர்க்காலத்தில் இழந்துவிட்ட எனது செல்வமகளைத்தான் அவர்களிடத்தில் தேடிக்கொண்டிருக்கின்றேன். அது எனக்குப்போதும் அய்யா..! “ அபிதாவுக்கு தொண்டை அடைத்தது. வரவிருந்த விம்மலை சிரமத்துடன் அடக்கிக்கொண்டாள்.
சண்முகநாதன் நெகிழ்ந்துவிட்டார். அபிதாவிடத்தில் அவருக்கு மேலும் இரக்கம் துளிர்த்தது.
“ கவலைப்படாத அபிதா… சொல்லு, உனக்கு என்னவேண்டும். வீட்டில் வைத்து மற்றுவர்கள் அறியத்தக்கதாக நான் கேட்க விரும்பவில்லை. சொல், நாளைக்கு ஊரடங்கு இல்லாத வேளையில் கடைத் தெருவுக்குப்போய் வாங்கிவரலாம். என்ன வேண்டும். ஏதும் உடைகள் வாங்கித்தரட்டுமா..? “
“ வேண்டாம் அய்யா. எல்லாம் இருக்கிறது. ஆனால், ஒன்றுதான் இப்போது எனக்குத் தேவையாக இருக்கிறது. என்னிடம் ஜீவிகா தந்திருக்கும் மாதச்சம்பளம் பேங்கில் கொஞ்சம் இருக்கிறது, ஆனால், நான் விரும்புவதை வாங்குவதற்கு அது போதாது. அதனை வாங்குவதற்கு இன்னும் ஆறுமாத கால சம்பளமாவது வேண்டும். அதுதான் யோசித்துக்கொண்டிருக்கிறன் அய்யா…” என்றாள் அபிதா.
“ நீ என்ன கார் வாங்கப்போகிறாயா..? அப்படி என்ன பெரிய பெறுமதியான பொருள்..? சொல்லு பார்ப்போம்..? “
“ ஒரு சின்ன கம்பியூட்டர். லெப்டொப். அதுதான் “
“ நீ எவ்வளவு வைத்திருக்கிறாய்..? “
“ எப்படியும் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருக்கும் அய்யா. வீட்டிலதான் எனது வங்கிப்புத்தகம் இருக்கிறது. பார்க்கவேண்டும். “
“ ஓகே… டோன்ட் வொரி… கவலையை விடு, நான் வாங்கித்தாரன். சரியா..? “
“ அய்யா… என்ன சொல்றீங்க..? ! “ அபிதா, இன்ப அதிர்ச்சியுடன் சற்றுத் தரித்துநின்று அவரைப்பார்த்தாள். அவர் முன்னே நகர்ந்தார்.
மஞ்சுளாவும் சுபாஷினியும் இன்னமும் வீடு திரும்பவில்லை. ஊரடங்கு உத்தரவு வருமுன்னர் ஏன் இருவரும் இன்னமும் திரும்பவில்லை. ஜீவிகா, வொஷிங் மெஷினிலிருந்து உடைகளை எடுத்து வீட்டின் பின்வளவில் கட்டியிருக்கும் கொடியில் உலரப்போட்டுக்கொண்டிருந்தாள்.
சண்முகநாதன் குளியலறை சென்று திரும்பினார். அவர் வரும்வரையில் வெளியே பின்வளவில் உடைகளை உலரப்போடும் ஜீவிகாவுடன் அபிதா பேசிக்கொண்டிருந்துவிட்டு, தானும் உடைமாற்றி குளித்துவிட்டு வந்து, வாங்கிவந்திருந்த மீனையும் இறாலையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு, நண்டை துப்பரவு செய்யத்தயாரானாள்.
வெளியே சென்று திரும்பினால், அனைவரும் குளித்துவிட்டுத்தான் மறுவேலை செய்யவேண்டும் என்பது ஜீவிகாவின் கண்டிப்பான உத்தரவு. பரவியிருக்கும் புது வைரஸினால் வந்த புதிய உத்தரவு.
வாங்கி வந்திருக்கும் நண்டுகளை துப்பரவு செய்து கறிசமைத்துவிட்டு, மீண்டும் ஒரு குளியல் போடவேண்டியிருக்கிறதே..?!
தனக்கொரு மடிக்கணினி கிடைக்கப்போகும் தகவலை, வீட்டிலிருப்பவர்களுக்கு சொல்லவேண்டும். அதற்கு முன்னர், கற்பகம் ரீச்சருடன் பேசவேண்டும்.
வந்திருக்கும் லண்டன்காரர் செய்த பாவத்துக்கு சங்கீர்த்தனம் தேடவிரும்புகிறார். அதற்கு தன்னை துணைக்கு அழைக்கிறார்.
அன்று அப்படி என்னதான் நடந்தது..? நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை. கற்பகம் ரீச்சரினதும் லண்டன்காரரின் மனச்சாட்சிகள் மாத்திரம் அவரவரிடம் இருக்கின்றன. அவையும் அவரவருக்கு சாதகமாகத்தான் பேசும்.
வெளியே சென்றிருக்கும் மஞ்சுளாவும் சுபாஷினியும் வீடு திரும்புவதற்கிடையில், உடைகளை உலரப்போடும் ஜீவிகா குளிப்பதற்காக குளியலறை சென்றுவிடும் சந்தர்ப்பத்தில், கற்பகம் ரீச்சருக்கு கோல் எடுக்கலாமா..? என்ற யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
சண்முகநாதன், வரும் வழியில் வாங்கி வந்த ஆங்கிலப் பத்திரிகையை வெளிவிறாந்தாவிலிருந்து, படித்துக்கொண்டிருந்தார்.
“ அபிதா, முடிந்தால் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்புபோட்டு தரமுடியுமா..? “ என்று குரல்கொடுத்தார்.
“ ஓம் அய்யா… கொண்டுவாரன்… “ துப்பரவுசெய்ய எடுத்த நண்டுகளை சட்டியில் அப்படியே வைத்துவிட்டு, கைகளை சுத்தம் செய்துவிட்டு அபிதா எலுமிச்சம்பழம் பிழியும்போது, மஞ்சுளாவின் அறையிலிருந்து கைத்தொலைபேசி சிணுங்கியது.
மஞ்சுளா, சுபாஷினியுடன் வெளியே செல்லும்போது எடுத்துச்செல்ல மறந்திருக்கலாம். பிழிந்துகொண்டிருந்த எலுமிச்சையை வைத்துவிட்டு, அந்த அறைக்குள் அபிதா வந்தாள். மஞ்சுளாவின் கைத்தொலைபேசி சார்ஜருடன் மின் இணைப்பில் இருந்தது.
எடுத்துப்பேசினாள். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.
“ மஞ்சுளாவா…? “
“ மஞ்சுளா வெளியே போயிருக்கிறா.. நீங்க யார் பேசுவது…? “
சில செக்கண்டுகள் மறுமுனையில் மௌனம் நீடித்தது. “ ஹலோ… ஹலோ… யார் பேசுறீங்க…? “
“ நீ… நீ… மஞ்சுளாவா… ? “ மறுமுனையில் விம்மலுடன் தொனித்த குரல்.
“ இல்லை. இல்லை… நீங்க யார் பேசுவது..? மஞ்சுளா கடைத்தெருவுக்கு போயிருக்கிறாங்க… வந்ததும் சொல்கிறேன். நீங்க யார் பேசுவது..? உங்கட பெயர்…? “
“ நீங்க யார்… மஞ்சுளாவின் சிநேகிதியா…? “
“ இல்லையம்மா, நான் மஞ்சுளா இருக்கும் வீட்டின் வேலைக்காரி அபிதா… நீங்கள் யார் சொல்லுங்கள்.”
“ நான்… வந்து… வந்து…“ மறுமுனையிலிருந்த குரலுக்குரிய பெயர் வருவதற்கு தாமதமானதால், அபிதா எரிச்சலுற்றாள்.
“ இங்கே எனக்கு நிறைய வேலை இருக்குது. சொல்லுங்க…உங்களுக்கு என்ன வேண்டும்… யாருடன் பேசவேண்டும்..? “
“ மஞ்சுளாவுடன்… எப்போது வருவா…. அங்கே ஊரடங்கு இல்லையா… ? “
“ அம்மா… என்ன பேசுறீங்கள்… எல்லா ஊரிலும் ஊரடங்குதான். இப்போது இங்கே சில மணிநேரங்களுக்கு தளர்த்தப்பட்டிருக்கு. மஞ்சுளா வெளியே போயிருக்கிறா. உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது. நீங்கள் யார்… அதனை முதலில் சொல்லுங்க.. மஞ்சுளா வந்தபிறகு யார் எடுத்தது என்று சொல்லவேண்டுமல்லவா..? சொல்லுங்க… நீங்க யார் பேசுவது..? “ அபிதா சற்று சினந்தவாறுதான் பேசினாள்.
மறுமுனையிலிருந்த வந்த பதிலினால், வந்த சினம் எங்கோ ஓடி மறைந்தது.
“ நான் மஞ்சுளாவின் அம்மா பேசுறன். மகள் சுகமாக இருக்கிறாவா…? சொல்லம்மா..? “ மறுமுனையில் குரல் தணிந்து விம்மல் ஒலித்தது.
“ நீங்கள்… நீங்கள்… மஞ்சுளாவின் அம்மாவா…? உண்மையாகவா…? “
“ ஓம்…. அவளது வங்கியின் மனேஜரிடம்தான் இந்த இலக்கம் எடுத்தேன். அவளைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவளுடன் பேசவேண்டும். எப்படி இருக்கிறாள்…?
“ உங்கள் மகள் நன்றாகத்தான் இருக்கிறாள். சுகமாக இருக்கிறாள். வந்ததும் சொல்கிறேன். உங்கட பெயர்..? “
“ சிவகாமசுந்தரி. “
“ எங்கேயிருந்து பேசுறீங்கள்..? “
“ கண்டியிலிருந்து, மகள் வந்ததும் சொல்லுங்கள். என்னுடைய இலக்கம் அந்த போனில் விழுந்திருக்கும். நான் அவளுடன் பிறகு பேசுவன் என்று சொல்லுங்க… “
“ சரியம்மா. வந்ததும் சொல்வேன். நீங்கள் சுகமாக இருக்கிறீங்களா…? “
“ ஓம். பிளீஸ் தயவு செய்து மறக்காமல், மகள் வந்ததும் சொல்லுங்க… உங்கட பெயர் என்ன சொன்னீங்க… ? “
“ அபிதா. “
“ ஓகே அபிதா… பிளீஸ் மகளைக்கேட்டதாகச்சொல்லுங்க.. பார்த்து கணகாலம். “
“ சரியம்மா.. சொல்வேன். “
அபிதா நீண்ட பெருமூச்சை விட்டாள்.
கண்ணுக்குத் தெரியாமல் வந்து வதைக்கும் இந்த கொரோனா எத்தனைபேருக்கு ஞானோதயம் தந்திருக்கிறது..?
வக்கிரமும் பிடிவாதமும் ஆணவமும் கொண்ட மனித உணர்வுகளின் முடிச்சுகளை அவிழ்க்கவும் அது வந்திருக்கிறதோ..?
அபிதாவுக்கு அடுத்தடுத்து பெருமூச்சுகளே வந்தன.
( தொடரும் )
No comments:
Post a Comment