நடுநிலைப்பள்ளியிற் படிக்கும்போது, ஆங்கிலம் – தமிழ் – சிங்களம் – லத்தீன் ஆகிய மொழிகளைப் பயில்வதற்கு எனக்கு வாய்ப்பிருந்தது. எல்லாப் பள்ளிகளிலும் அன்று அவ்வாய்ப்பு இருக்கவில்லை.



அவர்களுள் ஒருவர் எனது தமிழாசான் கடவுள் சுப்பிரமணியம். சிரேஷ்ட தராதரப் பத்திர பரீட்சை மட்டத்தில் தமிழ் இலக்கியம் கற்பித்துத் தமிழ்ச் சுவையூட்டிய பேராசான். அருச்சுனன் தவநிலைச் சுருக்கத்தை அன்னார் கற்பித்த பாங்குதான் கவிதைத்துறையில் ஈடுபாடு கொள்ள அன்றே என்னைத் தூண்டியது.

பின்னாளில் கணித – விஞ்ஞான ஆசிரியனாகிய நான், பல்கலைக்கழக மட்டத்தில் கணிதத்தை கற்றேன். ஆனால், தமிழ் மொழியையோ ஆங்கில மொழியையோ பல்கலைக்கழக மட்டத்திற் பயிலும் வாய்ப்பு பெறவில்லை. அதனால், தமிழ் ஆங்கில மொழி வளத்தை இளமையிலேயே ஊட்டிய ‘கடவுள்’ அவர்களையும் ‘பி.ஐ. ‘ அவர்களையும் இன்றுவரை நன்றியறிவுடன் நினைவு கூருகின்றேன்.


கல்லூரியை விட்டு விலகப்போகின்றேன். ஆனால், அடுத்து என்ன..? எதுவித குறிக்கோளும் இல்லாத நிலையில், அதிபர் அருளானந்தம் போதகரிடமிருந்து சான்றிதழ் ஒன்றைப் பெறுவதற்காகச் சென்றேன்.
என்னைக்கண்டதுமே, அவர் பரந்த முகமலர்ச்சியுடன் வரவேற்றார். நாற்காலி ஒன்றைக்காட்டி, அதிலே அமருமாறு கூறினார். அதிபருக்கு எதிரே சமமாக அமர்ந்துபேசும் துணிவுபெறாத நிலையில் நான் சங்கடப்பட்டேன். என் உடல்மொழி எனது மனநிலையையும் தயக்கத்தையும் அவருக்குப் புலப்படுத்தியது போலும்.

மரியாதையால் உயிர்த்த கூச்சத்துடன் நான் நாற்காலியில் உட்கார்ந்தேன்.
அதிபர் தனது கிளாக்கர் மனுவேல்பிள்ளையை அழைத்தார்.
“ அம்பிகைபாகனின் சான்றிதழ் தயாரா..? “ என்று கேட்டார். “ ஆம் “ என்று சொல்லிச்சென்ற மனுவேல்பிள்ளை, சான்றிதழுடன் திரும்பினார். அதிபர் அவரை அனுப்பிவிட்டு, மீண்டும் என்னுடன் உரையாடினார்.
“அம்பிகைபாகன், இதுவரை புலமைப் பரிசிலிற் படித்துவிட்டாய். நீ நன்றாகப்படித்து முன்னேறியதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இனி அடுத்து என்ன…? “

“ எனக்கு விளங்குகிறது. நீ ஏதாவது தொழில் செய்து குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகிறாய். அது நல்ல எண்ணம். ஆரோக்கியமான சிந்தனை. லண்டன் இன்டர் சயன்ஸ் சித்தியுடன் சென்னைப்பல்கலைக்கழகத்திற் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் விஞ்ஞானப் பட்டதாரியாகலாம். என்றுதான் உனக்கு ஆலோசனை சொல்ல நினைத்தேன் “
“ அந்த நிலையையும் உணர்கிறேன். மிஷனிடம் உதவி கேட்கலாம். ஆனல், கிறிஸ்தவ மதத்தவருக்குத்தான் மிஷன் பட்டப்படிப்புக்கு உதவி செய்யும். “
“ இல்லை சேர். மிஷன் உதவி கிடைத்தாற் கூட நான் படிப்பை இனித்தொடரமுடியாது. ஏதாவது தொழில் செய்து வீட்டுக்கு உதவி செய்ய…… “ என்று மீண்டும் நான் இழுத்தேன். எனது குடும்பப்பொறுப்பு அத்தகையது.
உடனே அவர், “ அப்படியானால், அடுத்த தவணை தொடக்கம் இங்கேயே ஆசிரிய நியமனம் தரலாம். யோசித்து வந்து விரைவிலே முடிவு சொல் “
அவரது வார்த்தைகள் எனக்கு தேவவாக்காக இருந்தது.
நான் கற்ற கல்லூரியிலேயே எனக்கு ஆசிரியப்பணியா…!? அவர் சொல்வது கனவா…? நனவா…? நான் ஆச்சரியத்துடன் அவரை ஏறிட்டுப்பார்த்தேன். அவரது முகத்தில் கனிவு தென்பட்டது.
அதிபர் அருளானந்தம் அவ்வாறு கூறிவிட்டு, எனக்காக எழுதப்பட்ட சான்றிதழை என்னிடம் தந்தார். அவருக்கு “ நன்றி சேர் “ எனச்சொல்லிவிட்டு, கையிலே சான்றிதழை ஏந்திக்கொண்டும் நெஞ்சில் இனமறியாத சுமை ஒன்றைச் சுமந்துகொண்டும், அதிபரின் அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அங்கே எனக்காகக் காத்து நின்றான் எனது நண்பன் சத்தியமூர்த்தி.
அவனுடன் பேசி என் மனசை அழுத்திய சுமையை இறக்கிவிட முயன்றேன்.
எனது வாழ்வில் மற்றும் திருப்பம் நேரவிருந்தது.
( தொடரும் )
No comments:
Post a Comment