ஸ்வீட் சிக்ஸ்டி - பாக்தாத் திருடன் - ச. சுந்தரதாஸ்

.


இலட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இஸ்லாமியராக வேடம் ஏற்று நடித்த ஒரு சில படங்களில் ஒன்று ‘பாக்தாத் திருடன். ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தயாரிக்கத் தொடங்கிய இந்தப் படம் 1960ம் ஆண்டு திரைக்கு வந்தது.

தமிழில் குறைந்தளவிலான படங்களில் மட்டும் நடித்திருந்த ஆடல் அழகி வைஜந்திமாலா இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுவேயாகும். வைஜந்திமாலா நடித்ததினால் அவருடைய நடனங்களும் தாராளமாகப் படத்தில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்தன. அவருடைய அழகான தோற்றமும் ரசிகர்களைக் கட்டியிழுத்தது.

பாக்தாத் நாட்டின் பாதுஷா அவரின் தளபதியினால் சதி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறான். ராணியும் மாண்டு விட சிறு குழந்தையான இளவரசன் திருடனாக வளர்கிறான். அதே சமயம் தளபதி பாதுஷாவாகி போலி இளவரசனை மக்கள் முன் நிறுத்துகிறான்.

பாக்தாத் திருடனான இளவரசனுக்கும் அடிமைப் பெண்ணான சரீனாவுக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் தளபதியின் மகளும் இளவரசனைக் காதலிக்கிறாள்.

இப்படி எம்.ஜி.ஆருக்காகவே அமைக்கப்பட்ட படத்தின் கதையின் இளவரசனாக வரும் எம்.ஜி.ஆர் ஏழைகள் மீது இரக்க குணம் உள்ளவராகவும் வீரராகவும் சித்தரிக்கப்படுகிறார். படத்தின் கதை வசனம் இரண்டையும் ஏ.எஸ் முத்து எழுதியிருந்தார். வசனங்கள் சுவையாக அமைந்திருந்தன.





இந்தப் படத்தில் வில்லனாக தளபதியாக நடித்தவர் டி.எஸ் பாலையா. இப்படத்தில் நடிக்கும் போதுதான் இனிச் சண்டைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். இதனால் படத்தின் மற்றுமொரு வில்லனான நம்பியார் முக்கியத்துவம் பெற்று எம்.ஜி.ஆரின் நிரந்தர வில்லனாகப் படங்களில் இடம்பெறலானார்.

அதே போல் மற்றமொரு வில்லன் நடிகர் எம்.ஜி.ஆர் முன் மரியாதைக் குறைவாக நடந்ததினால் அவர் படத்திலிருந்து நீங்கப்பட்டு அவருக்குப் பதில் அசோகன் இடம் பெற்றார். எம்.ஜி.ஆருடன் ஆசோகன் நடித்த முதல் படம் இதுவாகும்.

நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்தவர் ஒரு காலத்தில் ஹீரோவாகத் திகழ்ந்த டி.ஆர்.ராமச்சந்திரன். இவர்களுடன் ஜெயலலிதாவின் தாயான சந்தியா வில்லியாக நடித்தார். எம்.என். ராஜம், சகஸ்ரநாமம் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.



படத்தில் இடம் பெற்ற ஒன்பது பாடல்களையும் கவிஞர் மருதகாசி இயற்றியிருந்தார். அவற்றிற்கு இசையமைத்தவர் ஜி.கோவிந்தராஜுலு நாயுடு. இவரின் இசையில் சொக்குதே மனம், உண்மை அன்பின் உருவாய் என்முன் வந்தாயே, சிரிச்சா போதும் சின்னஞ் சிறு பொண்ணு பாடல்கள் இனிமையாக ஒலித்தன.

நடனத்திற்குப் பெயர் பெற்ற வைஜந்திமாலா படத்தில் இருந்த போதிலும் மேலும் இந்தி நடிகை ஹெலன் பத்மினி பிரியதரிசினி கோபிகிருஷ்ணா ஆகியோரின் நடனங்களும் படத்தில் இடம் பெற்றன.

படத்தைத் தயாரித்து டைரக்ட் செய்தவர் டி.பி. சுந்தரம். எம்.ஜி.ஆருடைய படங்களில் வழமையாக இடம் பெறும் கலைஞர்கள் இடம் பெறாமல் மாறுபட்ட கலைஞர்கள் இடம் பெற்ற படம் பாக்தாத் திருடன்!



No comments: