28/11/2019 ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பிலும் தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளின் தலைமைகள் தற்போது ஆராய்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இவ்வாறான நிலையிலும் பெரும்பான்மை மக்களது பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கமும் பதவியேற்றிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட வேண்டுமென்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் உறுதிப்படுத்தி அறிவித்திருந்தது. இதற்கிணங்க தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.
எமது மக்கள் இனரீதியாக வாக்களிக்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆட்சிமாற்றத்தை விரும்பவில்லை. ஆனால் தற்போது அந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இந்த நிலை இன்னமும் மோசமடையாது இருக்கவேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகும். அதில் வெற்றிபெற்ற தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடையக்கூடாது. அதற்கேற்ப நாம் செயற்படவேண்டும். ஆகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக மிகப்பெரிய பலத்தோடு பாராளுமன்றம் செல்லவேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் தரப்பின் பலம் குறைவடையக்கூடாது. இருப்பதைவிட இன்னமும் பலம் அதிகரிக்கவேண்டும். அவ்வாறு பலம் அதிகரிக்கவேண்டுமானால் தமிழ் மக்கள் ஒன்றாக இருந்து வடக்கிலும் கிழக்கிலும் சிலவேளைகளில் வடகிழக்கிற்கு வெளியேயும் ஒற்றுமையாக நின்று வாக்களிக்கவேண்டும். இதுவே இன்றைய தேவையாக உள்ளது. அதை குழப்புகின்ற வகையில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். மாற்று அணிகள் தங்களுக்கு ஆதரவு இருக்கின்றதா என்பதை பரீட்சித்துப்பார்க்கும் தருணம் இதுவல்ல. எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணையவேண்டும். அனைத்து தமிழ் தரப்புக்களையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு மிகப் பணிவாக எங்கள் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
தற்போதைய தருணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை தவறாது உபயோகிக்கவேண்டும். அரசியல் இலாபங்களுக்காக இதனை எவரும் உபயோகிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உண்மையிலேயே ஜனாதிபதி தேர்தல் முடிவுகளானது சிறுபான்மையின மக்களின் அரசியல் செயற்பாடுகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறது. அதனை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் நின்று அந்த மக்களின் எதிர்கால நலன்களை பாதுகாக்கவேண்டியது அவசியமாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தலைமைகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உரிய முடிவு எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக முடிவு எடுக்கும் நிலைமையே தோன்றியிருந்தது. ஆறு தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் யாழ்., மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சியின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஆராயப்பட்டு 13 அம்ச திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த திட்டவரைபானது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஐந்து தமிழ் கட்சிகளின் 13 அம்ச திட்ட யோசனைகள் தொடர்பில் தென்பகுதியில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும் இந்த திட்டவரைபு காரணமாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இவ்வாறு திட்டவரைபு தயாரிக்கப்பட்டு ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்கு முடிவு எடுத்த போதிலும் அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து தமிழ் தேசியக்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருந்தன.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த ஒற்றுமை முயற்சிக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தது. இதேபோன்றே முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எந்தவொரு சிங்கள வேட்பாளரை நோக்கியும் ஆதரவு கரம் நீட்ட முடியாது என்றும் ஆனால் மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என்றும் அறிவித்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று அறிக்கையிட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கோணங்களில் முடிவுகளை எடுத்திருந்தன.
இவ்வாறு இந்தக்கட்சிகள் முடிவுகளை எடுத்திருந்த நிலையில் ரெலோவின் முக்கியஸ்தரான எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் மக்களுக்காக அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தனித்துப்போட்டியிடுவதாக களமிறங்கியிருந்தார். தானே தமிழ் மக்களின் பொதுவேட்பாளர் என்றும் பெயர்சூட்டிக்கொண்டார். இவருக்கு ஆதரவாக ரெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா உட்பட அந்தக்கட்சியின் யாழ். கிளையினர் செயற்பட்டிருந்தனர்.
ஆனாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் தேர்தலில் வாக்களித்திருந்தனர். வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் அன்றைய வேட்பாளர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்த வாக்குகள் கூட இம்முறை பொதுஜன பெரமுனவினருக்கு கிடைக்கவில்லை. 85 வீதமான தமிழ் மக்களின் வாக்குகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தரப்பிற்கே வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில்தான் தற்போது எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றுபட்ட வியூகம் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் மாற்றுத்தலைமை குறித்தும் மாற்றுக்கட்சி அரசியல் தொடர்பிலும் ஏனைய தரப்பினர் சிந்தித்து வருகின்றனர். நல்லாட்சி அரசாங்க காலத்தில் சி.வி. தலைமையிலான மாற்று தலைமை தொடர்பிலும் சிந்திக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் உரிய பலனை தரவில்லை.
எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில் தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒருமைப்பாட்டுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய பாடுபடவேண்டியதே இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
(28.11.2019 வீரகேசரி நாளிதழ் ஆசிரிய தலையங்கம் ) - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment