09/11/2019 சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகக் கூடி முடிவெடுத்ததுடன். தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான சஜித் பிரேமதாசவை புதிய ஜனநாயக முன்னணி என்ற பல கட்சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் களத்தில் இறக்கி உள்ளது. இந்தப் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் பின் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் முடிவை இப்போது வெளிப்படுத்திவிட்டது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ பு.ௌாட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து இந்த அறிவிப்பினை அவர் விடுத்திருக்கின்றார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரையே ஆதரிப்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. கட்சி முக்கியஸ்தர்களிடமும், அதன் கட்டமைப்பு நிலையில் உள்ள தலைவர்களிடமும் பேச்சுக்கள் நடத்துவதற்கு முன்பே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு விட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தமது வேட்பாளராக அறிவித்த போதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அவரை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. தமிழ் மக்களால் முழுமையாக வெறுத்து ஒதுக்கப்படுகின்ற ஒருவரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், வெள்ளைவான் விவகாரத்தின் சூத்திரதாரியுமாகக் கருதப்பட்டவரும், யுத்த கால போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர் என்று கருதப்பட்டவருமாகிய கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தை இது அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அதே தந்திரோபாயம்....?
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தால், இனவாதப் பிரசாரத்தை முடுக்கிவிட்டு, அந்தக் கட்சியின் வேட்பாளருக்கான சிங்கள மக்களின் ஆதரவை ராஜபக்ஷ குழுவினர் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுவர் என்ற அரசியல் ரீதியான அச்சத்தை கூட்டமைப்பின் தலைமை கொண்டிருந்தது.
தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றனர் என்பதை முன்னதாகவே அறிவித்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக புலிகள் எழுச்சி பெற்றுவிட்டார்கள். அதற்கு ஐக்கிய தேசிய கட்சி துணையாகிவிட்டது என்ற புலிப்பூச்சாண்டியைக் காட்டி சிங்கள மக்களை ராஜபக்ஷ குழுவாகிய பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருக்கு எதிராகக் கிளப்பிவிட்டு, அவரை செல்வாக்கு இழந்தவராக்கிவிடும். அதற்கு இடமளித்துவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதைத் தாமதப் படுத்தி இருந்தது.
கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக அதன் தலைவர் ஆர்.சம்பந்தனின் இந்த நிலைப்பாடு ஒன்றும் புதியதல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் - 2015ஆம் ஆண்டு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கையும் அபரிமிதமான அதிகாரத்தைக் கொண்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்த வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவதே ஆபத்தான காரியமாக இருந்தது.
ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடித்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று தீர்க்கமான முடிவைக் கொண்டிருந்த பொது அமைப்புக்கள், ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக முடிவெடுத்திருந்தன. அந்த கூட்டு அமைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்
முக்கிய தரப்பாக பங்கேற்பு
ஆனாலும், ராணுவ பலத்தின் ஊடாக அதீத அதிகார பலத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் அந்த பொது வேட்பாளருக்குப் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலும், ஆபத்துக்களும் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பொது வேட்பாளரின் பெயர் இறுதி நேரம் வரையில் அறிவிக்கப் படவில்லை. அதேபோன்றுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் யாருக்கு ஆதரவாகச் செயற்படப் போகின்றது என்பதை அறிவிப்பதை இறுதி நேரம் வரையில் தாமதப்படுத்தி இருந்தது.
அன்றைய அரசியல் சூழலில் இந்த தந்திரோபாயச் செயற்பாடு அவசியமாகி இருந்தது. வெற்றி வாய்ப்புக்குத் தேவையாகவும் இருந்தது. அதே தந்திரோபாயச் செயற்பாட்டையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலிலும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை வெளிப்படுத்துவதில் கையாண்டிருந்தது.
பல காரணங்கள்
ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியாவதற்கு முன்பே மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் சக்தியாக முகிழ்த்திருந்த பொதுஜன பெரமுன பெரும் ஆரவாரத்துடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷவை தனது வேட்பாளராகத் தெரிவு செய்து அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகக் கருதப்படுகின்ற ஜே.வி.பி.பெரிய அளவில் மக்களை ஒன்றுதிரட்டி நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தின் ஊடாக அதன் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை தனது வேட்பாளராக வெளிப்படுத்தியது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் பிச்சுப் பிடுங்கல்களுக்கு உள்ளாகி நீண்ட தாமதத்தின் பின்பே சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மென்னுணர்வு போக்கில் ஆதரவான அரசியல் உறவைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. உரிய நேரத்தில் சரியான முடிவெடுக்கப்படும் என்று கூறி அமைதியாக நிலைமைகளை அவதானித்திருந்தது.
முன்னணியில் உள்ள வேட்பாளர்களுடன் தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு குறித்து பேச்சுக்கள் நடத்தியதன் பின்பே முடிவெடுக்க முடியும் என்று அது அறிவித்திருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு உரிய சந்தர்ப்பமும் அரசியல் ரீதியான வாய்ப்பும் பல்வேறு காரணங்களால் ஏற்படவில்லை.
இதனால் களத்தில் இறங்கியுள்ள பிரதான கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டதன் பின்னர் அவற்றைப் பரிசீலனை செய்த பின்பே யாரை ஆதரிப்பது என்ற முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைமை கூறியிருந்தது.
இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை அறிவித்ததைப்போன்றே தாமதமாகவே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. இதனையடுத்தே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவை அதன் தலைமை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் தீர்மானமாக முன்னோடி அறிவிப்பாக வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய புளொட், ரெலோ என்பனவும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தங்களது முடிவை வெளியிட்டிருக்கின்றன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவானது 2015 ஆம் ஆண்டு தேர்தல்கால முடிவை ஒத்த தீர்மானமாகவே அமைந்துள்ளது. அன்றைய தீர்மானத்துக்குப் பக்கபலமாகப் பல காரணங்கள் இருந்தன.
வெவ்வேறு நோக்கங்கள்
எதேச்சதிகாரப் போக்கில் சென்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிப் போக்குக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். சர்வாதிகாரத்துக்கு வழிகோலிய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தின் பலத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதற்காகப் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் போன்ற விடயங்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நியாயமான காரணங்களுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்துக்காகத் தனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி இருந்தது. அந்த நேரம் நிபந்தனைகளை விதித்து ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பும் நிலைமைகளும் காணப்பட்ட போதிலும் நிபந்தனையற்ற ஆதரவையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்கி யிருந்தது.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவான நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. எதிர்பார்த்த விடயங்களைவிட இயல்பாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றங்களும்கூட தமிழ் மக்களுக்கு நன்மை அளிப்பவையாக அமையவில்லை.
மாறாக முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளே மறைமுகமாகப் பின்பற்றப்பட்டிருந்தன. அந்த அரசாங்கம் வெளிப்படையாகவே தமிழ்மக்களின் இருப்புக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், நல்லாட்சி என்ற போர்வையில் மறைமுகமாக தமிழ்மக்களை பல்வேறு நிலைகளிலும் அடக்கி ஒடுக்குகின்ற போக்கையே கடைப்பிடித்து வந்தது.
ராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளின் மீளளிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு வழங்கும் வகையில் உரிய முறையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் கவனிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் உளப்பூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. இதயசுத்தியுடன் அணுகப்படவுமில்லை.
முன்னைய தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்காக தெற்கும் வடக்கு – கிழக்கும் ஒன்றிணைந்திருந்தன. ஆனால் இம்முறை அந்த நிலைமை காணப்படவில்லை. வடக்கு–கிழக்கு ஒரு போக்கிலும் தென்பகுதியின் அரசியல் நிலைமைகள் வேறு ஒரு போக்கிலும் பிரிந்து காணப்படுகின்றன.
தேசிய பற்றைக் காணவில்லை
வாழ்வியல், குடியுரிமை, அரசியல் உரிமை, மத உரிமை என்பன வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் ரீதியாக இந்தத் தேர்தலில் முனைப்பு பெற்றிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற, வெறும் அரசியல் வேட்கையே இந்தத் தேர்தலில் கூர்மை பெற்றிருக்கின்றது.
இந்தத் தேர்தல் களம் தெற்கைப் பொறுத்தமட்டில் அதிகாரப் போட்டிக்கானது. ஆனால், வடக்கு–கிழக்கைத் தமது தாயகமாகக் கொண்டுள்ள அங்குள்ள மக்களுக்கு, அவர்களின் இருப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற ஒரு போராட்ட களமாகவே இது அமைந்துள்ளது.
நாட்டின் அதியுயர் அரசியல் பதவியாகிய ஜனாதிபதி பதவிக்கான இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மக்களுக்கும் உரியது. தேசிய மட்டத்தில் முக்கியமானது. ஆனாலும், இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன, மதம் சார்ந்த அரசியல் முனைப்பிலேயே ஆழ்ந்து போயுள்ளார்கள்.
நாட்டின் ஒட்டு மொத்த மக்களினதும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய சிந்தனையிலான அரசியல் போக்கை அவர்களிடம் காண முடியவில்லை. இதன் காரணமாகவே நாட்டின் குடிமக்களாகிய ஒரு சாராருடைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவோ அல்லது அந்த விடயங்களைப் பற்றியோ இந்தத் தேர்தல் காலத்தில்கூட கலந்துரையாடுவதற்கு அவர்கள் முன்வராதவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு முன்வர முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
சிறுபான்மை இன மக்களுக்கும் இந்த நாட்டின் நலன்களிலும் முன்னேற்றத்திலும் உரிமைகள் இருக்கின்றன. பங்கேற்பதற்கான அவசியம் உள்ளது. ஆனால் அந்த மக்களை ஓரங்கட்டி, தமது சுயநல அரசியல் அதிகாரப் போட்டியில் அவர்களைப் பகடைக்காய்களாக்கவே பேரின அரசியல்வாதிகள் முனைந்திருக்கின்றார்கள்.
எவர் எக்கேடு கெட்டாலும்சரி, நாங்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும். அதற்காக இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பே அவர்களிடம் காணப்படுகின்றது. மோசமான யுத்தத்தின் பின்னர் நாடு எதிர்நோக்கியுள்ள பின்னடைவை அனைத்து மக்களினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பில் சீர் செய்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேசியப் பற்றுடைய சிந்தனையை அவர்களிடம் காண முடியவில்லை.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுவதிலேயே அவர்கள் தீவிரமாக இருக்கின்றார்கள். ஆனால் இங்கு ஏனைய மக்களும் வாழ்கின்றார்கள். அவர்களையும் உள்ளடக்கி அவர்களுடைய உரிமைகளுக்கும் சமாந்தரமாக இடமளித்து நாட்டை பன்முகத்தன்மை கொண்டதாக முன்னேற்ற வேண்டும் என்பதற்கான செயற்பாட்டை அவர்களிடம் காண முடியவில்லை.
ஏன் ஆதரிக்க வேண்டும்.....?
இதன் காரணமாகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னணி வேட்பாளர்கள் பிரச்சினைகளில் மூழ்கியுள்ள சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகள் குறித்து பேச்சுக்கள் நடத்தவோ அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தோ கலந்தாலோசிக்கவோ விருப்பமற்றவர்களாக இருக்கின்றனர்.
தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தத் தேர்தலில் பரந்து பட்ட அரசியல் மனப்பாங்குடன் செயற்படுவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
அதன் காரணமாகவே இந்தத் தேர்தல் காலச் சூழலிலும் சிறுபான்மை இனமக்களுடைய தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்த அவர்கள் முன்வரவில்லை.
அது மட்டுமல்லாமல் அரசியல் மேடைகளிலும் அறிக்கை வடிவங்களிலும் வெளிப்பட்டுள்ள சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டதாகக்கூட அவர்கள் காட்டிக்கொள்ள முனையவில்லை. அந்த மக்களுடைய பிரச்சினைகள் அறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு தாங்கள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாட்டைக்கூட அவர்களால் உறுதியாக தேர்தல் பரப்புரைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அவ்வாறு வெளிப்படுத்த முன்வரவுமில்லை.
இத்தகைய ஒரு நிலையில்தான் ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள மென்னுணர்வு கொண்ட அரசியல் போக்கில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தப் பாதிப்புகளுக்கும் நீண்டகாலம் இழுபட்டு புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்குரிய உறுதியான நிலைப்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியும் வெளிப்படுத்தவில்லை. அந்தக் கட்சியின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் வெளிப்படுத்தவில்லை.
ஆனால் இந்தத் தேர்தலில் ஒப்பீட்டளவில் ஏனைய இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களையும்விட புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானதாகத் தோற்றமளிக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள சில பிரச்சினைகளையும் அது தொட்டுக்காட்டியுள்ளது. இதற்காகவே அதன் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அதேநேரம் மோசமான மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இன மக்களின் மீது மோசமான அடக்குமுறைகளை மேற்கொண்டிருந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அதிமுக்கிய நோக்கமும் இந்தத் தீர்மானத்துக்கு வலு சேர்த்துள்ளது.
எதிர்கால அரசியலுக்கு நன்மைபயக்குமா?
ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்த நிச்சமயற்ற தன்மைக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களுக்கு அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைந்து உறுதியானதோர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற தேவையும், எதிர்பார்ப்பும் சிதறடிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்க்கமான சில தீர்மானங்களை மேற்கொண்டு உறுதியான ஒருங்கிணைந்த நிலைப்பாட்டில் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற மக்களின் அபிலாஷைகள் நிராசையாக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் அதனையொட்டிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும். கட்டவிழ்ந்த நெல்லிக்காய் மூடையைப் போல கட்சிகள் சிதறுண்டு போயிருக்கின்றன.
ஒரு கட்சி, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரியிருக்கின்றது. மற்றுமொரு கட்சி மக்கள் தாங்களே சொந்தமாகத் தீர்மானமெடுத்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளது. மற்றுமொரு கட்சி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டுக்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளது. அதேநேரம், மக்கள் தாங்களாகவே தீர்மானமெடுத்துச் செயற்பட வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏனைய கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றதோர் அரசியல் தேவை முனைப்பு பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு உறுதியான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்க முடியாமல் நவக்கிரகங்களைப் போன்று திகழ்வது தமிழ் மக்களின் எதிர்கால அரசியலுக்கு நன்மை பயக்கின்ற ஒரு செயற்பாடாகத் தெரியவில்லை.
பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment