கல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்
ராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்?
பிறிக்ஸிட் விவகாரம் ; முக்கியத்துவம் மிக்க உச்சிமாநாட்டு ; உடன்படிக்கையை எட்டுவதற்கு பேச்சு
பாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்
ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு
சஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது
துருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்
கல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்
18/10/2019 இந்தியாவிலுள்ள கல்கி ஆச்சிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டொலர்கள் உட்பட இந்திய ரூபா மதிப்பில் 93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற கல்கி ஆச்சிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் அமைந்துள்ளது.
இதேவேளை, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆச்சிரமத்தின் கிளைகள் உள்ளன.
கல்கி ஆச்சிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திரா, சென்னை உட்பட நாடு முழுவதும் அந்த ஆச்சிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனையை முன்னெடுத்தனர்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்தியப் பணம் ரூபா 43.9 கோடி, ரூபா 18 கோடி மதிப்பிலான அமெரிக்க டொலர்கள், ரூபா 26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூபா 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 93 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்?
18/10/2019 இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் தமிழக அமைச்சரவை கைச்சாத்திட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பை ஆளுநர் எழுத்துமூலம் அறிவிக்கவில்லை ஆனால் தனது முடிவை அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி
பிறிக்ஸிட் விவகாரம் ; முக்கியத்துவம் மிக்க உச்சிமாநாட்டு ; உடன்படிக்கையை எட்டுவதற்கு பேச்சு
17/10/2019 பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது (பிறிக்ஸிட்) தொடர்பான முக்கியத்துவம் மிக்க உச்சிமாநாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

இந்த உச்சிமாநாட்டையொட்டி பிறிக் ஸிட் தொடர்பில் உடன்படிக்கையை எட்டும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை மும்முரமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
ஆரம்ப கட்ட செய்திகள் பிறிக்ஸிட் உடன்படிக்கையை உடனடியாக எட்டுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட நிலையில், பிந்திய செய்திகள் உடன்படிக்கையொன்றை குறித்த காலக்கெடுவிற்குள் எட்டுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளதாக கூறுகின்றன.
ஆனால் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் இன்று ஆரம்பமாகி தொடர்ந்து இரு நாட்கள் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டுக்கு முன்னர் உடன்படிக்கையை எட்டுவதற்கு கடுமையாக போராடியிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தமது உச்சிமாநாட்டில் பிரித்தானியா விலகுவது தொடர்பான உடன்படிக்கையை உறுதிப்படுத்தக் கருதுவார்களாயின் அந்த உடன்படிக்கையை சட்டபூர்வமான வாசகம் சகிதம் வெளியிட வேண்டிய தேவையுள்ளது.
கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பென் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய உடன்படிக்கைக்கு நாளை மறுதினம் சனிக்கிழமைக்குள் அங்கீகாரம் அளிக்கத் தவறும் பட்சத்தில் பிறிக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோருவதற்கு போரிஸ் ஜோன்ஸன் நிர்ப்பந்தத்திற்குள்ளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா எதிர்வரும் 31 ஆம் திகதி சர்வதேச நேரப்படி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தாமதப்படுத்த வேண்டாம் என போரிஸ் ஜோன்ஸன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். நன்றி வீரகேசரி
16/10/2019 பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் இருவரும் சென்றுள்ளார்கள்.

முன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பாடசாலைக்கு சென்ற இளவரசர் தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

15/10/2019 ஜப்பானில் வீசிய ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதோடு 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடுமையான மழை மற்றும் சூறாவளியுடன் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் கரையை கடந்தது.
இந்நிலையில் அந்நாட்டின் 47 மாணகங்களிலுள்ள 36 இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளளதோடு , 66 பேர் இதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
புயல் பாதிப்பையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸே அபே நேற்று அவசர பேரிடர் ஆய்வுக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பிள் அவர் தெரிவித்துள்ளதாவது,
புயலில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகளில் ஆயிரக்கணக்கான மீட்புக் குழு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக அவர்கள் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அப்பகுதியில் மீண்டும் கடும் மழை , காற்று வீசுவதற்கான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது
15/10/2019 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல்,
சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
இந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது.
அதையடுத்து கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர். அதுமாத்திரமன்றி நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், கேரளாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள், சஹ்ரான் என்பவரின் காணொளி உரைகளைக் கேட்டு தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர் என்றார். நன்றி வீரகேசரி
துருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்
15/10/2019 துருக்கியிலுள்ள விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியின் விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சிரியாவின் வடபகுதி மீது துருக்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அணுக்குண்டுகள் பேரம்பேசுவதற்கான பொருட்களாக மாறியுள்ளன எனவும் தெரிவித்துள்ளன.
சிரியாவின் எல்லையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இன்சேர்லிக் விமானதளத்தில் பி 61 அணுக்குண்டுகள் உள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விமானதளத்தை அமெரிக்க விமானப்படையும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள ஊடகங்கள் துருக்கி தொடர்பிலான அமெரிக்காவின் நகர்வுகளை இது பாதிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளன.
சமீபநாட்களில் குறிப்பிட்ட அணுக்குண்டுகளை வேறு இடத்திற்கு நகர்த்துவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வந்துள்ளது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அணுக்குண்டுகள் துருக்கி ஜனாதிபதியின் பணயக்கைதிகளாக மாறிவிட்டன,அவற்றை அங்கிருந்து அகற்றினால் துருக்கி அமெரிக்க உறவு மீண்டும் சாத்தியமில்லாத அளவிற்கு முறிவடைந்துவிடும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அணுக்குண்டுகளை துருக்கியிலிருந்த அகற்றுவது குறித்து அடிக்கடி ஆராயப்பட்டுள்ள போதிலும் ஆனால் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
துருக்கியி;ல் உள்ள அமெரிக்காவினதும் நான்கு நேட்டோ நாடுகளினதும் அணுவாயுதங்கள் குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்கப்ட்டுள்ள போதிலும் இது வெளிப்படையான ரகசியம் என கார்டியன் தெரிவித்துள்ளது.
துருக்கியில் உள்ள அணுக்குண்டுகளை அங்கிருந்து அகற்றுவது குறித்து அமெரிக்கா கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் துருக்கியும் ஏனைய நேட்டோ நாடுகளும் அதனை கடுமையாக எதிர்த்தன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
பராக் ஒபமாவின் நிர்வாகத்தின் காலத்தில் இந்த அணுக்குண்டுகளை என்ன செய்வது என்ற கரிசனை காணப்பட்டது , என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் ஒபாமாவின் ஆயுத களைவு கொள்கை காரணமாகவும் துருக்கியில் 2006 இல் இடம்பெற்ற சதிப்புரட்சி காரணமாகவும் அணுவாயுதங்கள் குறித்து நிர்வாகம் கவலை கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

சதிப்புரட்சி முயற்சிகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியொருவர் இந்த தளத்தை பயன்படுத்தினார் என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் அமெரிக்கா அணுவாயுதங்களை அகற்றினால் நாங்கள் அதனை தயாரிப்போம் என துருக்கி எச்சரித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment