சவேந்திரசில்வா நியமனம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் நடவடிக்கை- உலகநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும்- ஐநா நிபுணர்கள் குழு
பிரான்ஸ் – நோர்வே நாடுகளுடன் கைச்சாத்தானது நிலக்கீழ் கனிய எண்ணெய் ஆய்வு ஒப்பந்தம்
மட்டு. ஆர்ப்பாட்டம் ; பொலிஸாரின் தடியடி தாக்குதலில் நால்வர் வைத்தியசாலையில்
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகம் புதைப்பு ; தணிந்தது மட்டு.வில் உண்டான பதற்றம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் மொராயஸ் காலமானார்
ஆண்டின் இறுதிக்குள் பலாலி - இந்தியாவுக்கிடையில் விமான சேவை
கன்னியா வெந்நீரூற்று விவகாரம் ; இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிப்பு
கள்ளியங்காடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் திங்கள் ஹர்த்தால்
மகாவலி அபகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம் ; மகஜரும் கையளிப்பு
காணாமல்போனவர்களின் உறவுகள் எதிபார்த்து காத்திருக்கும் நீதி கிடைக்குமா? சாலிய பீரிஸ் அதிர்ச்சி கருத்து.
48 நாடுகளுக்கு விசாக் கட்டண நீக்கம்!
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.வின் விசேட அறிக்கை!
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை திறந்து வைத்தார் ஜனாதிபதி
கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்
பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
சவேந்திரசில்வா நியமனம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் நடவடிக்கை- உலகநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும்- ஐநா நிபுணர்கள் குழு
28/08/2019 இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழுவொன்று கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனம் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஐநாவின் உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான விசேட அறிக்கையாளர் பாபியன் சல்வியோலி , பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படுதல் குறித்த ஐநாவின் செயற்குழுவின் உறுப்பினர்கள், சட்டவிரோத படுகொலைகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர், சித்திரவதை குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் உட்பட ஐநாவின் பல நிபுணர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 18 ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமித்துள்ளார் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இலங்கையின் 25 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் போது அவர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவதால் ஐநா மனித உரிமை ஆணையாளர் உட்பட பலர் இந்த நியமனம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் உயர் பதவிக்கு நியமித்தமை பாதிக்கப்பட்ட மக்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் நீடிப்பதை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழுவினர் இது அரச ஸ்தாபனங்கள் மீதான சமூகத்தின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தி மேலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் போது இடம் பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கு இலங்கை தானாக முன்வந்தது என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழுவினர் இந்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவதில் போதியளவு முன்னேற்றம் இல்லாமை குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் இந்த குற்றச்சாட்டுகளையும் ஏனைய குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்ய முடியாவிட்டால் விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பாவிட்டால் சர்வதேச சமூகம் இந்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச நியாயாதிக்கம் உட்பட ஏனைய வழிமுறைகளை ஆராயவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
28/08/2019 திருகோணமலை, மட்டக்களப்பு தொடக் கம் வடக்கின் யாழ்ப்பாணம் வரையான பிரதேசங்களின் நிலக்கீழ் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பனவற்றைக் கண்டறியும் செயற்திட்டத்திற்கான இருதரப்பு ஒப்பந்தம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சிற்கும் பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தனியார் கம்பனிகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள நெடுஞ் சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் அமைச்சர் கபீர் ஹாசீமுக்கும் பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் டோடல் ஈ அன்ட் பீ மற்றும் நோர்வேயை தளமாகக் கொண்டியங்கும் எகுனோர் என்ற தனியார் நிறுவனங்களின் பிரதி தலைவர்களுக்கும் இடையில் இவ்விருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தின் பிரகாரம் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பனவற்றைக் கண்டறியும் பணியை இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோடல் ஈ அன்ட் பீ என்ற நிறுவனமே இச்செயற்றிட்டத்தின் பிரதான ஒப்பந்ததாரர் எனும் அதேவேளை, நோர்வே நாட்டு நிறுவனம் வளங்களைக் கண்டறியும் பணிகளில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன், அதற்கான மொத்த செலவில் 30 சதவீதத்தை ஏற்றுக்கொள்ளும். இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அதுகுறித்துக் கருத்து வெளியிட்ட நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் கூறியதாவது,
இலங்கையைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாகும். ஏற்கனவே மன்னார் நிலப்பரப்பில் காணப்படும் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பனவற்றைக் கண்டறிந்து அகழும் பணிகளுக்கான இருவாரங்களுக்கு முன்னர் பெல்ஜியோ என்ற வேறொரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றோம்.
இது கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருக்க வேண்டிய செயற்திட்டம் என்றாலும்கூட, தற்போதேனும் நாம் அதனை நடைமுறைப்படுத்தும் மட்டத்திற்கு வந்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பன காணப்படும் பிரதேசங்கள் கண்டறியப்படும்.
அதன் பின்னர் அவற்றை அகழ்ந்தெடுத்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும், இருதரப்பும் அதனை எதனடிப்படையில் பகிர்வது என்பது குறித்து பின்னர் கலந்தாலோசித்து இணக்கப்பாடு எட்டப்படும்.
எதுஎவ்வாறெனினும் எதிர் வரும் 2022ஆம் ஆண்டளவில் இலங்கை கனிய எண்ணெய், இயற்கை வாயு என்ப னவற்றை சுயமாக உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறியிருக்கும். நன்றி வீரகேசரி
28/08/2019 பொலிஸ் தடியடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிறிய காயங்களுடன் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது
இதனையடுத்து இவ் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நேற்றுமுன்தினம் இரவு பொலிசார் இரகசியமாக புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்துகுமுன் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்காரர்கள் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்த நிலையில் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கல்முனை அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கான போக்குலரத்து முற்றகத் துண்டிக்கப்பட்டது இததனால் மட்டு கல்முனை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது
இதனை தொடர்ந்து பொலிசார் கலகமடக்கும் பொலிசார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரருடன் பொலிசார் பேச்சுநாத்தியபோது ஆர்பாட்டகாரர்கள் அரசாங்க அதிபர் வந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுப்பதாக உத்தரவாதம் தரும் வரை வீதியை விட்டு விலகமாட்டோம் கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன்ர்
இரவு 9.00 மணிக்கு பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து தரத்தியடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இத் தாக்குதலின் போது பலர் காயமடைந்ததுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரில் பதற்றம் ஏற்பட்டதுடன் கடைகள் யாவும் மூடப்பட்டு வீதி வெறிச்சேடியதுடன் அப்பகுதில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்
இதேவேளை கறித்த உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிசார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது
தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடியில் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோது அங்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது
இந்த நிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்துள்ள நிலையில் இதனை இந்து மயானத்தில் புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
27/08/2019 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூந்நிலை தற்போது தணிந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக் கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது
இந்த உடற்பாகங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆசாத் என்பவரின் என டி.என்.டி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது
இதனையடுத்து குறித்த உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிசார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது
தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடியில் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோது அங்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்களை பொலிசார் புதைத்துள்ளனர்
இது தொடர்பாக பிரதேச மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்ததையடுத்து குறித்த மயானத்துக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு வீதியில் அமர்ந்து உடனடியாக புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் பலத்த பாதுகாப்பில் ஈபட்டிருந்தன். இந் நிலையில் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் நாளை சம்மந்தப்பட்ட தரப்புகள் ஒன்று கூடி இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாக தீர்மானம் மேற்கொண்டதை தொடர்ந்து அப் பகுதியில் உண்டான பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.

இதேவேளை பொலிஸார் பதற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட தாக்குதலின் போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
27/08/2019 வீரகேசரி நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்டனி ஒகஸ்டின் மொராயஸ் (மோனாலிஸா) நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார்.

78 வயதான மொராயஸ் திடீர் சுகயீனமுற்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர் வீரகேசரி நிறுவனத்தில் வார வெளியீடு இலாகாவில் சினிமா பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும், கேலிச்சித்திரம் வரைபவராகவும் பணியாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கமையாகும்.
அன்னாரின் பூதவுடல் நாளை 28 ஆம் திகதி காலை முதல் நாளைமறுதினம் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை பொரளை ரேமன்ட் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்பு: 011 4967467 நன்றி வீரகேசரி
26/08/2019 இந்தியாவுக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தானது இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, முத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வாண்டின் இறுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை பயன்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
கன்னியா வெந்நீரூற்று விவகாரம் ; இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிப்பு
29/08/2019 திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னியா தொடர்பிலான வழக்கு வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இவ் வழக்கினை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ் வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினர். கலந்து கொண்டனர் நன்றி வீரகேசரி
கள்ளியங்காடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் திங்கள் ஹர்த்தால்
29/08/2019 மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்களை புதைக்கப்பட்டமைக்கு 'தமிழ் உணர்வாளர் அமைப்பு ' கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அவற்றை விரைவில் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
புதைக்கப்பட்ட எச்சங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டெம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர் அமைப்பினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாரம்பரிய கலாசார மத முறைமைக்கு மாறான ஒரு இனத்தினரிதும் மத்தினரதும் மனங்களை காயப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைத்த நிகழ்வானது ஏற்க முடியாத ஒன்று.
மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகிக்கும் அரச அதிபரும் மட்டக்களப்பு நகரை ஆட்சி செய்யும் நகர பிதாவுமே இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களாவர்.
பயங்கரவாதியின் உடல் எச்சம் புதைக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரம் அருவருப்பு குரோத மனப்பான்னை என்பன அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு தடியடியோ அல்லது கண்ணீர்புகையோ கிடையாது.
மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை ஆக்கிரோசமாக வெளிக்காட்டிய போது இதனை கணக்கில் எடுக்காது ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு காலத்தை கடத்தாது புதைக்கப்பட்ட மனித எச்சங்களை உடன் அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் செயற்பாடுகளுக'கு எதிராக தொடர் போராட்டங்கள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும்.
இதன் முதற்கட்டமாக செப்டெம்பர் 2 ஆம் திகதி அமைதியான முறையில் ஹர்த்தாலை முன்னெடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி வீரகேசரி
மகாவலி அபகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம் ; மகஜரும் கையளிப்பு
29/08/2019 முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் புற கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமான(எக்டோ) நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, முல்லைத்தீவு பி.டபிள்யூ.டி சந்தியில் இருந்து ஊர்வலமாக ஆரம்பமானது.
தொடர்ந்து ஊர்வலமாக மாவட்ட செயலகத்தினை அடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டக் காரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவிற்கான மகஜரினை, அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், சி.லோகேஸ்வரன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம்(எக்டோ) அமைப்பின் பிரதிநிதிகள், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்களுடன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
காணாமல்போனவர்களின் உறவுகள் எதிபார்த்து காத்திருக்கும் நீதி கிடைக்குமா? சாலிய பீரிஸ் அதிர்ச்சி கருத்து.
29/08/2019 காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சிஆகியவற்றை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட உரையாற்றுகையில் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது

கடந்த வருடம் நான் சந்தித்த ஒரு பெண்மணியி;ன் அனுபவங்கள் குறித்து குறிப்பிடவிரும்புகின்றேன்.
1942 ம் ஆண்டு பிறந்த அந்த பெண்மணி 1983 இல் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள ஆலயத்திற்கு பூஜை வழிபாட்டிற்காக சென்ற கணவர் தீடிரென மூண்ட கலவரத்தில் சிக்கி காணாமல்போயுள்ளார்.
அன்றைய நாளில் தான் சந்தித்த அனுபவங்களை அவர் என்னிடம் விபரித்தார், பொட்டு வைத்துகொண்டு பேருந்தில்பயணிப்பது எவ்வளவு அச்சம் மிகுந்ததாக காணப்பட்டது என்பதை அவர் தெரிவித்தார்.
அவரது கணவர் அதன் பின்னர் திரும்பிவரவில்லை, அவரிற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.
தற்போது அந்த பெண்மணிக்கு 76 வயது. அவரது கணவர் உயிருடன் இல்லை என்பதை அவர் மனதால் உணர்கின்றார், எனக்கு பணம் தேவையில்லை எனது மகள் துபாயில் வேலைபார்க்கின்றார் என தெரிவித்த அந்த பெண்மணி கணவர் உயிருடன் இல்லை என்றால் நான் பொட்டைஅழித்துவிடுவேன் என தெரிவித்தார்.
நான் சாவதற்கு முன்னர் எனது கணவருக்கு இறுதிமரியாதைகளை செய்ய விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையில் பலர் காணாமல்போகச்செய்யப்பட்டனர் என்பதை பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கி;ன்றனர்.
சிங்கள ஊடகங்கள் கூட அதனை ஏற்க மறுக்கின்றன.இது குறித்து விவாதிக்கின்றன.
காணாமல்போகச்செய்தல் இடம்பெற்றது என்பதை பலர் மறுக்கின்றனர் அல்லது அதனை நியாயப்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்து இடம்பெறும் விவாதங்களை அவதானித்து பாருங்கள்.
அவை காணாமல்போகச்செய்யப்படுதலை ஊக்குவிக்கும் வகையில் காணப்படுகின்றன.
நாட்டிற்கு விசுவாசமானவர்கள் காணமல்போகவில்லை விசுவாசமற்றவர்களே காணாமல்போயுள்ளனர் என கருத்துக்கள் காணப்படுகின்றன.
காணாமல்போன தங்கள் உறவுகள் குறித்து பதிலை எதிர்பார்த்திருக்கும் பலரி;ற்கு அவர்களது வாழ்நாளில் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற பதில் கிடைக்காமல் போகலாம்.
உலக நாடுகள் பலவற்றின் அனுபவம் அவ்வாறானதாக உள்ளது.
காணாமல்போகச்செய்யப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் 1981 முதல் சைப்பிரசில் இடம்பெறுகின்றன, இன்றும் இடம்பெறுகின்றன.
எனினும் இந்த நிலையை எங்களால் மாற்றமுடியும்.
இதேவேளை காணாமல்போனவர்கள் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு காணப்படவில்லை என்ற உண்மையை கவலையுடன் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசியல்வாதிகள் இந்த விவகாரம் குறித்து அதிக அக்கறையை வெளியிடவேண்டும்.வெறுமனே வாய்வார்த்தைகள் மாத்திரம் போதாது..
இந்த விடயத்திலேயே நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்,இதற்கு என்னிடம் பதில் இல்லை.
மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வை வழங்ககூடாது, அவர்களிற்கு பதவி உயர்வை வழங்குவதற்கான நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் ஏற்கனவே இந்த பரிந்துரையை முன்வைத்திருந்தோம் ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரிகள் எங்களிடம் இல்லை,நாங்கள்விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். நன்றி வீரகேசரி
48 நாடுகளுக்கு விசாக் கட்டண நீக்கம்!
29/08/2019 48 நாடுகளுக்கு விசாக் கட்டண நீக்க முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லத்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேஷியா, மோல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவாகியா குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு விசாக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு வீசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய வீசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48 நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது..
இந்த நடைமுறை ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.வின் விசேட அறிக்கை!
30/08/2019 வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களைப் பொறுத்தவரை இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. அவ்வலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கான தீர்வையும், மீட்சியையும் அளிக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை திறந்து வைத்தார் ஜனாதிபதி
30/08/2019 நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்.கைதடியில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை இன்று திறந்து வைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வில், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். நன்றி வீரகேசரி
கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்
30/08/2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக கலந்துகொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர் .

அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில் பனி மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.

நாம் அரசிடம் நேரடியாக சந்தித்து மகஜர் கையளித்தோம் பல போராட்டங்களை முன்னேடுத்தோம் எதையும் அரசு செவிசாய்ப்பதாக இல்லை எமக்கான நீதி அரசாங்கம் மூலம் கிடைக்கவில்லை.

நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேக்கவில்லையா? அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும்.

இன்று வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் போராட்டம் இடம்பெற்றது. அனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய் கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்திய பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா? போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


















பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி
30/08/2019 நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

175 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள இத் திட்டத்தின ஆரம்ப பணிகள் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
”மைத்திரி ஆட்சி – நிலையான நாடு” மற்றும் ”பேண் தகு மீன்பிடி கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாகத் திகழ்தல்” எனும் எதிர்கால நோக்கிற்கமைய வடக்கு மீன்பிடித் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக 12,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரியளவிலான 300 படகுகளுக்கு தேவையான வசதிகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய இந்த துறைமுகத்தின் இறங்குதுறை 7.1 ஹெக்டயார் பரப்பளவையும் துறைமுகப் படுக்கை 18.6 ஹெக்டயார் பரப்பினையும் கொண்டுள்ளதுடன், 880 மீற்றர் நீளத்தையும் 480 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது.

உலகிலுள்ள நவீன ரக மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களை கரை சேர்த்தல். எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், படகுகளைப் பழுதுபார்த்தல், ஐஸ் மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அமைச்சர்கள் பீ.ஹெரிசன், அப்துல் ஹலீம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், அங்கஜன் ராமநாதன், எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பெரும்பாலான மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். நன்றி வீரகேசரி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
30/08/2019 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சென்றனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல்போன உறவினர்களை ஒப்படைக்குமாறும் அரசு நீதியைத் தர வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச. சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















No comments:
Post a Comment