ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு ஒருவருடகாலத்திற்குள் தீர்வை வழங்குவேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான உறுதிமொழியினை வழங்கியிருக்கின்றார். அத்துடன் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்திற்கும் ஒருவாரத்திற்குள் தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் விவகாரத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் முரண்பாடான நிலைமை நிலவிவருகின்றது. கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தன்னை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். அவருக்கு கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் ஆதரவையும் சஜித் பிரேமதாஸ பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சந்தித்து பேசியிருந்தார். இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எடுத்துக்கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் தெரிவு எமது பிரச்சினையல்ல. அது ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சினை. ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் வேட்பாளர் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வைக்கும் வாக்குறுதி என்ன என்பதை தெரிவிக்கவேண்டும். புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமா? எமது நீண்டகால பிரச்சினைக்கான உறுதியான தீர்வாக எதனை முன்வைக்கப்போகின்றீர்கள் என்பதே எமக்கு அவசியமாகும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தீர்மானம் என்ன என்பதை எமக்கு கூறினால் மட்டுமே எமது அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஒருவருடகாலத்திற்குள் புதிய அரசியல் யாப்பை கொண்டுவந்து அதன்மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதேபோன்றே கல்முனை வடக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதும் அரசியல் யாப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கமைய அதிகாரப்பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுகாண்பதே தனது எண்ணம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை பிரதமர் அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு இணங்கவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமுடியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. தென்பகுதியில் எதிரும் புதிருமான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்ததையடுத்து இந்த நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று சம்பந்தன் பல தடவைகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் கூட 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் அடுத்த தீபாவளி பண்டிகைக்குள் தீர்வினை காண முடியும் என்றும் அவர் எதிர்பார்த்திருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டிருந்தபோது அவரை ஆதரிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பொது எதிரணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டிய விவகாரம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது அரசியல் தீர்வுக்கான உறுதிமொழியினை எழுத்துமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விருப்பம் தெரிவித்த போதிலும் அத்தகைய நிலைப்பாடு ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் வேட்பாளருக்கு தோல்வியை கொண்டுவந்துவிடும் என்று கருதிய கூட்டமைப்பின் தலைமை அத்தகைய எழுத்துமூல உடன்பாடு தேவையில்லை என்றும் வாய்மூல இணக்கப்பாடு போதுமானது என்றும் தெரிவித்திருந்தது.
அவ்வாறு பெரும் நம்பிக்கை கொண்டே கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டிருந்தது. இதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தை மாற்றவேண்டும் என்ற நிலைப்பாடு மேலோங்கியிருந்தமையே ஆகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே தமிழ் மக்கள் அத்தகைய தீர்மானத்தை எடுத்திருந்தனர். தபால் மூல வாக்களிப்பின் பின்னரே கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்திருந்தது. ஆனால் தபால் மூல வாக்களிப்பிலேயே தமிழ் மக்கள் எதிரியின் வேட்பாளருக்கு வாக்களித்திருந்தமை பின்னர் தெரிய வந்திருந்தது.
இவ்வாறு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தமையினாலேயே விரைவில் தீர்வினை கண்டுவிடலாம் என்று கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருந்தது. இதற்கிணங்க புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை துரித கதியில் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும். அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றவுடன் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தால் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்க முடியும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விடயத்திலும் தேர்தல் முறை மாற்றத்திலும் காட்டிய அக்கறை அரசியல் தீர்வு விடயத்தில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மேலெழுந்திருந்தது. அரசியல் தீர்வு விடயமும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியதை அடுத்தே அதற்கான முயற்சியும் எடுக்கப் பட்டது என்பதே உண்மையாகும்.
அரசாங்கம் பதவியேற்றவுடனேயே ஏனைய விடயங்களுக்கு முன்னராக அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்ந்திருந்தால் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றவுடன் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் போது அரசியல் தீர்வு தொடர்பில் ஆராயப்படவில்லை.
காலம் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சி தற்போது இடைநடுவில் கைவிடப் பட்டிருக்கின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலும் தற்போது வந்து விட்டது. இவ்வாறான நிலையில் தான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை வழங்குவதாக பிரதமர் உறுதி வழங்கியிருக்கிறார். தற்போதைய நிலையில் மாற்று வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் கேட்டறிந்து சிறந்ததொரு முடிவுக்கு வருவதே கூட்டமைப்பினரின் பணியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments:
Post a Comment