கடமைகளை பொருப்பேற்றார் வட மாகாண ஆளுநரின் செயலளார்
வட - கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம்
"அஸ்கிரியபீட மாநாயக தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்"
சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் ; ஜனாதிபதி
இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை - அமெரிக்கா
பூஜித்த, ஹேமசிறியை நீதிமன்றில் ஆஜர்செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!
ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
ஹேமசிறி பெர்னாண்டோவை தொடர்ந்து பூஜிதவும் வைத்தியசாலையில் அனுமதி
ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!
திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை
பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை - அர்ஜூன ரணதுங்க
இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா?
நீராவியடியில் பொங்கலுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸார்
கடமைகளை பொருப்பேற்றார் வட மாகாண ஆளுநரின் செயலளார்
01/07/2019 வட மாகாண ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் அவர்கள் இன்று காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். நன்றி வீரகேசரி
01/07/2019 வட - கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.


பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இது வரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தின் மத்திய இடமான வவுனியாவில் நடைபெற்று வருவதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

"அஸ்கிரியபீட மாநாயக தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்"
01/07/2019 முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபரிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கோரியிருக்கிறது.

வரகாகொட ஞானரத்ன தேரர் முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவிற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். நன்றி வீரகேசரி
சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் ; ஜனாதிபதி
01/07/2019 நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி நல்லிணக்கத்தை நனவாக்குவதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறை ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அரசகரும மொழி கொள்கை தொடர்பில் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இதுவரையிலும் போதிய கவனம் செலுத்தாதமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையை இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி தனது தாய்மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும் என தெரிவித்தார்.
நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும் எனவும் அனைத்து மக்களும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பங்களிப்பு வழங்கப்படும் மொழிக் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.எஸ்.மஹாநாம, கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோரும் கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழி கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோபறஹேவா, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.செல்வக்குமாரன் உள்ளிட்ட பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள் மற்றும் கல்விமான்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி
இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை - அமெரிக்கா
01/07/2019 இலங்கையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா 'படைகளின் நிலைப்பாடு' தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இலங்கையில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி வீரகேசரி
பூஜித்த, ஹேமசிறியை நீதிமன்றில் ஆஜர்செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!
01/07/2019 பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சந்தேக நபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை பதில் பொலிஸ்மா அதிபர் இதுவரையில் செயற்படுத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஆலோசனையை பதில் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.
இந் நிலையில் அது தொடர்பில் இன்று வரை செயற்படாமைக்கான காரணத்தை எழுத்து மூலம் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்தாக சட்டமா அதிபரின் செய்தி தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷார ஜயரத்ன தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
02/07/2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வாக்கு மூலம் வழங்க அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே அவர் உடல் நல பாதிப்பினால் இவ்வாறு வைத்தியசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஹேமசிறி பெர்னாண்டோவை தொடர்ந்து பூஜிதவும் வைத்தியசாலையில் அனுமதி
02/07/2019 பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திடீர் சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வாக்கு மூலம் வழங்க அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே உடல் நல பாதிப்பினால் இவ்வாறு அவர் வைத்தியசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!
02/07/2019 சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக பெற இன்று காலை 10 மணிக்குசி.ஐ.டி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இவர்கள் சமூகமளிக்காமல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஹேமசிறி பெர்னாண்டோ இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், காய்ச்சலுடன் கூடிய திடீர் சுகயீனம் காரணமாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்தந்த வைத்தியசாலைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இன்று பிற்பகல் வைத்தியசாலைகளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் மேற்பார்வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்களிடம் வாக்கு மூலம் பதிவுச் செய்துகொண்ட பின்னர், அவர்களைக் கைது செய்தனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும், சி.ஐ.டி.யினரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைகளிலேயே தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு மாலை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மாலை வேளையில் கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கும் சென்று சந்தேக நபர்களைப் பார்வையிட்டதுடன் நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை
03/07/2019 திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 படையினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 12 விசேட அதிரடிப்படையினர் அடங்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2006 ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்களை சுட்டுக்கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த படையினரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மனோகரன் ரஜீகரன்,யோகராஜா ஹேமசந்திரன் ,லோகித ராஜா ரோகன் , தங்கதுரை சிவநாதன்,சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்களே சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நன்றி வீரகேசரி
பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை - அர்ஜூன ரணதுங்க
05/07/2019 இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 - 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாற தெரிவித்தார்.
அங்குதொடர்ந்தும் கூறுகையில் ,
வடக்கும் கிழக்குமாகு 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட பிரதேசங்களாகும். எனினும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் என்ற ரீதியில் காங்கேசன்துறை விமான நிலைய வேலைத்திட்டம், இந்த பிரதேசங்களில் உள்ள படகுகளுக்கு அனுமதி பெறுவதற்கு அவற்றை கொழும்புக்கு கொண்டு வர வேண்டிய நிலைமை காணப்பட்டது.
எனினும் இந்த பிரதேசங்களிலேயே அவற்றை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தமை மற்றும் கிராமங்களுக்கூடான வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் என்பவற்றை முன்னெடுத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
வடக்கின் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இங்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது. அத்தோடு பெற்றோலிய வளங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் திருகோணமலைக்கு 16 எரிபொருளட தாங்கிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
புகையிரத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எரிபொருள் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த விமான நிலையம் மிக முக்கிய இடத்தை வகித்தது. 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாகியதிருந்து இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வந்தது. எனினும் கடந்த 6 மாத காலத்திற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வேலைத்திட்டத்தை பொறுப்பில் எடுத்ததோடு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.
அத்தோடு ஒவ்வொரு வாரமும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு, அடுத்த மாதத்திற்குள் இந்தவேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் எமக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா?
06/07/2019 இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கபட்ட உறவினர்களால் ஆர்பாட்ட பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டிருந்தது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர்ந்து 868 நாட்களாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலை செய்து விட்டு களியாட்ட நிகழ்வா, விழித்தெழு தமிழினமே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.



நீராவியடியில் பொங்கலுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸார்
06/07/2019 முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு நீராவியடிப்பிள்ளையார் ஆலயயத்தில் இன்றைய நாள் தமிழ் மக்கள் 108பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பொங்கலுக்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும்போது, அடுப்புகளை பிக்கு அத்து மீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்கவேண்டாம் என பொலிஸார் பொங்கலுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.

அடுப்புகளை கோவிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.

அடுப்பிற்கும் பிக்கு அத்துமீறி குடியிருக்கும் கட்டடத்திற்கும் மிக நீண்ட இடவெளி இருந்த போதிலும், அங்கு இருக்கின்ற பிக்கு மற்றும் சில சிங்கள மக்களுடைய பேச்சினை கேட்டு பொலிஸார் குழப்பம் விளைவிப்பதாக அடியவர்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து பொலிஸாரின் அச்சுறுத்தலினை அடுத்து சில அடியவர்கள் கோவிலுக்கு வெளியில் வீதியின் இருமருங்கும் பொங்கலை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.







No comments:
Post a Comment